மலேசிய தமிழ் சினிமாவின் வீழ்ச்சி.
இது ஒரு மிக நேர்மையான கட்டுரை. கடந்த 38 ஆண்டுகளாக மலேசிய தமிழ் திரைத்துறை(Cinema) கொஞ்சம் கூட நகரவில்லை. அது என்ன 38 ஆண்டுகள் கணக்கு? நமது நாட்டின் முதல் திரையரங்கு படமான(Theatrical Movie) ’ரத்த பேய்’ 1979-இல் திரையீடு கண்டது. அந்த படத்தின் திரையீடல் கணக்கையே நமது உள்ளூர் திரைத்துறையின் வயதாக கணக்கிட்டு கொள்ளலாம். அதன் பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து ‘இன்ஸ்பெக்டர் சேகர்’ தொலைகாட்சி படமாக(Tele-Movie) வந்தது. அந்த வகையில் ’இன்ஸ்பெக்டர் சேகர்’-தான் நமது நாட்டின் முதல் தொலைகாட்சி படம். ஐரோப்பியா நாடுகளில் தொலைக்காட்சி படம்(Televisyen Movie) என்பார்கள். இந்த வகை படங்களுக்கு இன்று வரை, அந்த நாடுகளில் நல்ல வரவேற்பும் மதிப்பும் இருக்கிறது. நாம் மிக சரியாக அந்த வகை(Genre) தொலைகாட்சி பட துறையை தேர்ந்தெடுத்தோம். ஆனாலும் நம் உள்ளூர் திரைத்துறை ஒரு அடி கூட வளராமல் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏன்? பல முக்கிய காரணங்கள் இருந்தாலும்; மிக முக்கிய மூன்று காரணங்கள் உண்டு. அவை (1) திரைக்கதை(Script), (2) தவறான போக்கு(Wrong Method), (3) ஆதிக்கம்(Monopoly).
முதலில்
நாம் ஒரு விசயத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது ஒரு வியாபாரம்.
முழுக்க முழுக்க பணம் சம்பந்தப்பட்டது. இந்த வியாபாரம் மெல்ல மெல்ல வளரும் போது, கூடவே
இந்த திரைத்துறையும் வளரும். இந்த துறை சார்ந்த வல்லுனர்களும் வளர்ந்து, இது ஒரு வலுவான;
மிக பெரிய வியாபார துறையாக உருவெடுக்கும். இந்த துறைக்கு அதிக தேவைகள்(Demand) உருவாகும்.
அப்படி தேவைகள் உருவாகும் போது நம்பிக்கையோடு நல்ல தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப
கலைஞர்கள், இன்னும் நிறைய பேர்கள் உள்ளே வருவார்கள். அப்படி வரும் போது நாம் அடுத்த
அடுத்த கட்டத்துக்கு போக முடியும். கூடவே மிக சிறந்த திரைப்படங்களும்; நல்ல திரைப்படங்களும்
வரும். திரைத்துறை தொழில் என்பது சங்கிலி தொடர் போன்றது. அது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. வில்லியம் கோல்ட்மேன் எழுதிய The Adventure in
the Screen Trade என்கிற புத்தகம்; ஒரு திரைத்துறை எப்படி வியாபாரத்தோடு இணைகிறது என்பதனை
மிக தெளிவாக பேசுகிறது.
திரைக்கதை.
ஒரு படத்துக்கு மிக மிக முக்கிய அடிப்படை அம்சமே திரைக்கதைத்தான். திரைக்கதை இன்றி
ஒரு படம் கிடையாது. ஒரு நல்ல திரைக்கதைக்கு தான் தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குனர்,
ஒளிப்பதிவாளர் இன்னும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் தேவை படுவார்கள். நாம் செய்யும்
அத்துனை செலவுகளும் திரைக்கதைக்குதான். நமக்கு நல்ல திரைக்கதை கிடைக்கவில்லை என்றால்
நாம் செய்யும் அத்துனை செலவுகளும் விரயம் தான். அதிலும் மலேசிய தமிழ் ரசிகர்கள் மிக
சிறந்த ரசிகர்கள். காலங்காலமாக மிக சிறந்த எம் ஜி ஆர் சிவாஜி படங்கள், மிக சிறந்த கமல்
ரஜினி படங்கள், மிக சிறந்த விஜய் அஜித் படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள். கூடவே மிக
சிறந்த ஆங்கில, சீன படங்களும் பார்த்தவர்கள். அப்படி பட்ட மலேசிய தமிழ் ரசிகர்களுக்கு
என்ன மாதிரி படங்கள் நாம் கொடுக்க வேண்டும்? கோச டப்பா, ஐஸ் கோசம் போன்ற படங்களா?
இன்று
வரை ஒரு முழுமையான திரைக்கதையோடு நம் உள்ளூர் திரைப்படம் வரவே இல்லை. இதர தேவைகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் நம் உள்ளூர் கலைஞர்கள் திரைக்கதையை ஒரு பொருட்டாகவே எடுத்து
கொள்வது இல்லை. அதற்குரிய முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. ஒரு கரு உருவானவுடம், அதை
மளமளவென எழுதி; உடனடியாக ஒரு கதாநாயகன்/கதாநாயகியைத் தேடிப் பிடித்து, ஒளிப்பதிவு தளவாடங்களை
எடுத்து கொண்டு படபிடிப்புக்கு கிளம்பி போய் விடுகிறார்கள். படபிடிப்பு தளத்தில் நின்று
கொண்டு வசனம் என்னவென்று யோசிப்பார்கள். ஒளிப்பதிவு கோணங்கள் (Camera Angles) யோசிப்பார்கள்.
சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும்பாலான மலேசிய தமிழ்ப்படங்கள் கேலிக்கூத்துக்கு
ஆளாகிறது.
திரைக்கதை
என்பது கலையோ அல்லது அபூர்வ சக்தியோ கிடையாது. அது ஒரு முறைமை(Method). இன்னும் தெளிவாக
சொல்லப்போனால் திரைக்கதை என்பது தொழில்நுட்பம்(Technical). திரைக்கதை எழுத கற்று கொள்ள
குறைந்த பட்சம் மூன்று புத்தகங்களாவது படித்திருக்க வேண்டும். சில பயிற்சி காணொளிகள்
பார்த்திருக்க வேண்டும். நிறைய படங்கள் பார்க்க வேண்டும்.
திரைக்கதை
எழுதும்/எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளனுக்கு, தான் உருவாக்கும் கதாபாத்திரத்தால்
ஒரு சம்பவத்தை நிகழ்த்திகாட்டவும்; நிகழும் அந்த சம்பவத்தை பெரும் எதிர்ப்பார்ப்புகளோடும்
ரசிக்கும் வகையில் ரசிகர்களுக்கு சொல்ல தெரிய வேண்டும். இதுதான் திரைகதை எழுதபோகும்/
எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதை எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய கோட்பாடு.
பொதுவாக
இன்றைய ரசிகர்கள் மிக மெதுவாக நகரும் திரைக்கதைகளை விரும்புவதில்லை. பத்து நிமிடத்துக்கு
மேல் ஒரு படம் அவர்களுக்கு போர் அட்டிக்கிறது என்றால்; உடனே கைபேசியை எடுத்து துலாவ
ஆரம்பித்து விடுவார்கள். கூடவே வாட்சாப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக ஊடகங்களில் கண்டமேனிக்கு
திட்ட ஆரம்பத்து விடுவார்கள். அதைவிட முக்கியம் நாம் தேர்தெடுக்கும் வகை(Genre) பிரிவுகள்.
மலேசியா தமிழ் திரைத்துறை உலகை பொருத்த வரையில்
பெரும்பாலும் இரண்டே இரண்டு வகை படங்களில் தான் கை வைப்பார்கள். ஒன்று காதல் வகை படங்கள்.
இன்னொன்று பேய் பட வகையில். ஆனால் நாம் தொடாத வகைகளில்(Genre) ஆயிரம் கதைகள் இங்கு
உள்ளது.
நமக்கு
தேவை எல்லாம் பொறுமையும் கற்று கொள்ளும் ஆவலும் தான். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில்
நல்ல திரைக்கதையோடு கூடிய ஒரு நல்ல மலேசிய தமிழ்ப்படம் உருவாவது சாத்தியம் இல்லை என்றே
கூறலாம். ஆகவே, நீங்கள் செய்யும் அத்துனை செலவுகளும்; நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனும்
கதாநாயகியும்; நீங்கள் படப்பிடிப்பு நடத்தும் தளங்களும் இடங்களும்; இசை, ஒப்பனை, தொகுப்பு(Editing), ஒலி/ஒளிப்பதிவு, படபிடிப்புக்கு பயன்படுத்தும் உடைகள்,
இன்னும் பிற என அனைத்தும் திரைக்கதை எனும் அடிப்படைக்கு தான். அந்த திரைக்கதையையே எழுத
தெரியவில்லை என்றால்; உலகின் விலை உயர்ந்த புகைப்பட கருவி வைத்து படம் பிடித்தாலும்
அது குப்பை படம் தான்.
ஒரு
திரைப்படத்துக்கு மிக மிக அத்தியவாசியமான ’திரைக்கதை’-யை எழுதும் முறையை இன்னமும் மலேசியா
தமிழ் திரைத்துறை உலகம் கற்று கொள்ளவே இல்லை. நமது நாட்டில் திரைத்துறைக்கான எழுத்தாளர்கள்
பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. நம் மலேசிய தமிழ் திரைத்துறைவுக்கு அரோக்கியமான
எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். யார் ஒத்துக் கொண்டாலும், இல்லை என்றாலும் இதுதான்
நிதர்சன உண்மை. ஒரு நல்ல/விருவிருப்பான திரைக்கதையோடு, கூடவே செம்மையான வசனத்தோடு;
உருவாக்கத்திலும் (Film Making) இங்கேயும்
அங்கேயும் கோட்டை விட்டிருந்தாலும் கூட; ஒரு படம் வந்தால் நம் மலேசிய தமிழ் ரசிகர்கள்
அந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
ஒரு
சில மலேசிய தமிழ்ப்படங்கள் ஓரளவுக்கு/சுமாரான திரைக்கதையோடு வந்திருக்கிறது. அந்த படங்கள்
ரசிகர்களிடம் போய் சேராததற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. அது தவறான போக்கு(Wrong
Method). இதுவும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அம்சம் தான். தொலைக்காட்சி போக்கில்(Tele-movie
Method) படம் எடுத்திருப்பார்கள். பிறகு அதை திரையரங்கில் வெளியீடு செய்திருப்பார்கள்.
திரையரங்குக்கு எடுக்கும் படங்கள் தொலைகாட்சியில் போடும் போது; தொலைக்காட்சிக்கு எடுக்கும்
படங்கள் ஏன் திரையரங்கில் வெளியீடு செய்யக்கூடாது? இது மிகவும் அபத்தமான கேள்வி.
தொலைக்காட்சிக்கு
பயன்படுத்தும் படப்பிடிப்பு கருவி(Camera), கண்ணாடி வில்லை (lens), ஒளியமைப்பு
(Lighting) என்பது வேறு. திரையரங்கு படத்துக்கு
பயன்படுத்தும் படப்பிடிப்பு கருவி, கண்ணாடி வில்லை (lens), ஒளிகலவை (Lighting) என்பது
முற்றிலும் வேறு. ஒலிப்பதிவு(Sound) என்பது திரையரங்கு படத்துக்கு ரொம்பவும் முக்கியம்.
ஒலிப்பதிவு என்கிற இந்த பெரிய துறையில் பல உள் பிரிவு துறைகள் உண்டு. அதில் ஒன்றுதான்
Surround sound System. இந்த ஒலிக்கலவை அமைப்பு(Sound System) சரியாக செய்யவில்லை என்றால்;
திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்க்க முடியாது. காது வலிக்கும். அந்த படத்தின் மீது
நமக்கு வெறுப்பு வந்து விடும். தொலைக்காட்சி
படத்துக்கு ஒலிக்கலவை அமைப்பு பெரிய அளவில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
திரையரங்கு
படத்துக்கு வைக்கும் ஒளிப்பதிவு கோணங்கள்(Camera Angles) வேறு தொலைகாட்சி படத்துக்கு
வைக்கும் ஒளிப்பதிவு கோணங்கள் என்பது வேறு. தொலைக்காட்சி படத்துக்கு வைக்கும் மிக நெறுக்கமான
காட்சி(close-up shot) திரையரங்கு படத்துக்கு வைக்கமுடியாது. திரையரங்கு படத்துக்கு
வைக்கும் தூரவெளி காட்சி(Wide shot) தொலைக்காட்சி படத்துக்கு வைக்க முடியாது. இதை விட அதி முக்கியம் ஒளிகலவை(Lighting). இது ஒரு
கலை. திரையரங்கு படத்துக்கு ஒளிக்கலவை வைக்க தெரிய வேண்டும். பொதுவாக திரையரங்கு படத்துக்கு
உயிர்ப்பும்(Depth) திரைப்பார்வையும்(Cinema Look) கொடுப்பதும் இந்த ஒளிக்கலவைத்தான். படப்பிடிப்பு கருவி மற்றும் ஒளிக்கலவை இவை இரண்டும்
தான் திரைக்கலை (Cinematic) பார்வை கொடுப்பது. திரைக்கலை என்பது நீங்கள் நினைப்பது
போல் வழக்கமான கோர்வையில் வரும் படங்கள் கிடையாது. பழைய பாரதிராஜா, மணிரத்னம், மணிவண்ணன்
படங்களில் இந்த திரைக்கலையை பார்க்கலாம். ஒரு காட்சியை திரைக்கலையோடு படம் பிடித்து
வெள்ளைத்திரையில் இருட்டு வெளிச்சத்தில் காட்டும் போது அவ்வளவு அழகாக இருக்கும். தற்போதைய
இயக்குனர்களில் பாலாஜி மோகன்(வாய் மூடி பேசவும், மாரி), நலன் குமாரசாமி(சூது கவ்வும்)
போன்றோர்களின் படங்களில் பார்க்கலாம்.
சிறுவனை
மையப்படுத்தி மலேசிய தமிழ் கேங்ஸ்டர் படம் ஒன்று வந்தது. அந்த படத்தின் திரைக்கதை ஓரளவுக்கு
நன்றாக அமைந்தும்; அந்த படம் ஏன் ரசிகர்ளை ஈர்க்கவில்லை என்பதற்கு இந்த தவறான போக்கு
(wrong method) ஒரு முக்கிய காரணம். அந்த படத்தின் பெரும்பாலான காட்சி சட்டகங்கள் (Frame)
தொலைகாட்சி படம் போக்கில்தான் இருந்தது. அந்த படத்தின் ஒளிக்கலவை(Lighting) கூட தொலைகாட்சி
படம் பார்க்கும் அனுபவம் தான் கொடுத்தது. திரையரங்கில் வந்து காசு கொடுத்து படம் பார்க்கும்
ரசிகர்கள் ரொம்பவும் எதிர்ப்பார்க்கள். அப்படி எதிர்ப்பார்ப்புகளோடு வரும் ரசிகர்களை
ஏமாற்ற கூடாது. திரைத்துறை வியாபாரத்தின் முக்கிய விதி இது.
மலேசிய
தமிழ் திரைத்துறை உலகில் பெரிய கோளாறே இது தான். தாம் எடுக்கும் படம் தொலைகாட்சி(Tele-Movie)
படமா? திரையரங்கு (Theatrtical Movie) படமா என்கிற அடிப்படை ஞானம் கூட இருக்காது. தொலைகாட்சிக்கு
எடுக்கும் படங்கள் தொலைகாட்சியில் மட்டும் தான் பார்க்க முடியும். திரையரங்கு படங்கள்
திரையரங்கிலும் பார்க்கலாம் தொலைகாட்சியிலும் பார்க்கலாம். மலேசியாவில் பொதுவாக தொலைகாட்சி
படங்களாக எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்து; ரசிகர்கள் மத்தியில் பெரிய வெறுப்பை
சம்பாதித்து கொண்டார்கள். இதுனாலேயே மலேசியா தமிழ்ப்படத்தை நம்பி யாரும் திரையரங்குக்கு
வருவதில்லை. இதில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நல்ல நல்ல தொலைகாட்சி படங்கள் எடுங்கள்.
அதை தொலைகாட்சியில் வெளியீடு செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுங்கள். அதையே
நன்மதிப்பு சான்றிதழாக(Credit) காட்டி திரையரங்கு படம் எடுக்க வாருங்கள். இதற்கு மலேசிய
தொலைகாட்சி நிறுவனங்களான ஆஸ்ட்ரோ மற்றும் ஆர்டிஎம் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டு
இறக்குமதி சரக்குக்கு கொடுக்கும் மரியாதையில் கால் பங்காவது மலேசிய தமிழ் தொலைகாட்சி
படங்களுக்கு கொடுக்க வேண்டும். இது ஆணை.
அப்படியே
நல்ல தொலைகாட்சி படங்கள் வந்தாலும் அதை தொலைகாட்சியில் வியாபாரம் செய்யும் போது நம்
கலைஞர்கள் படும் பாடு இருக்கே இதை சொல்லி மாளாது. இங்குத்தான் ஒரு குறிப்பிட்ட சாரரின்
ஆதிக்கம் இருக்கிறது. நம் மலசிய தமிழ் திரைத்துறை உலகை பொறுத்த வரையில் இரண்டு முரட்டு
கும்பல்கள் தான் உண்டு. ஒன்று ஆர்டிஎம்-யை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆதிக்க சாரார்கள்.
இன்னொன்று ஆஸ்ட்ரோவை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆதிக்க சாரார்கள். ஆர்டிஎம்-ஐ பொறுத்த
வரையில் ஆரம்பகாலத்தில் மாஇகாவின் தொகுதி தலைவர் சுப்பையாவின் குழந்தைகளான திவாகர்
சுப்பையா, சந்திர சேகர் சுப்பையா இவர்கள் ஆதிக்கத்தில் தான் இருந்தது. இவர்களை மீறி
ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் கூட உள்ளே நுழையாது. இவர்களுக்கு சலாம் போட்டு உள்ளே நுழைந்தது
அடுத்த கும்பல். இரண்டாம் கும்பலோடு இணைந்து வந்த அடுத்த ஒரு கும்பல் உருவானது.
இந்த
மூன்று அடுக்கு நிலை(layer) கும்பல்கள் தான் இப்போது வரை ஆர்டிஎம்-ஐ ஆண்டுக் கொண்டிருக்கிறது.
இவர்களை மீறி புதுசா யாரவது தன் தொலைகாட்சி படத்தை விற்க உள்ளே வந்தால்; பத்து வகை
உரிமங்கள்(Permit/license) கேட்பார்கள்; 25 பாரங்கள் கொடுப்பார்கள். இதை எல்லாம் பூர்த்தி
செய்வதற்குள் நமது தாவு தீர்ந்து போய்; இந்த பாழும் திரைத்துறைவே வேண்டாம் என்று வெறுத்து
ஓடி போய் விடுவோம். அப்புறம் எப்படி நல்ல தொலைக்காட்சி படங்கள் வரும்? இதனையே நன்மதிப்பு
சான்றிதழாக(Credit) காட்டி எப்படி பெரும்படம் எடுப்பது? முதலில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு
பெரிய பெரிய தொல்லைகள் கொடுக்க கூடாது. விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். இந்த ஆதிக்க
நிலைகளை(Monopoly) உடைக்க வேண்டும். தரமான படைப்புகளை வாங்குவதற்கு அரசாங்க தன் சட்டத்தை
தளர்த்த வேண்டும். இல்லையேல் மலேசியாவில் நல்ல திரைத்துறை உருவாவது கடினமே.
இந்த
சட்ட விதிகள் இல்லாமல் மிக எளிமையாக முறையில் தொலைகாட்சி படங்கள் விற்பதற்கு ஒரு தொலைகாட்சி
நிறுவனம் உண்டு. அது ஆஸ்ட்ரோ. கண்ட கண்ட அனுமதி உரிமங்கள்(Permit/license) தேவை இல்லை.
ஆனால் ஆர்டிஎம்-யே பராவாயில்லை எனும் அளவுக்கு இந்த ஆஸ்ட்ரோகாரர்கள் பண்ணுவார்கள்.
எப்படி ஆர்.டி.எம்-இல் இரு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ அதே போல் ஆஸ்ட்ரோவிலும்
ஒரு ஆதிக்க கும்பல் உண்டு. கொஞ்சம் மனசாட்சி உள்ள கும்பல். ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் தலை ஒரு தமிழ்நாட்டுகாரர்(ஊர்காரர்). இங்குள்ள தமிழ்
திரைத்துறை உலகம் முன்னேற கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பவர்.
புதுசா
ஒருத்தன் ஒரு தொலைகாட்சி படத்தை எடுத்து முடித்து ஆஸ்ட்ரோவில் விற்க போகும் போது அங்கு
நடக்கும் கூத்து மிக தமாசாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு 10 ஆயிரம் வெள்ளி என்பார்கள்.
நாம் செய்த செலவே 30 ஆயிரம் வெள்ளியாக இருக்கும். உன்னை யார் 30 ஆயிரம் செலவு செய்ய
சொன்னது என்று நம்மை திருப்பி கேட்பார்கள். சில தொலைகாட்சி படங்கள் 3-4 ஆயிரம் வெள்ளிக்கு
தான் வாங்கி இருப்பார்கள். வேதனையாக விசயம். இந்த மூன்று நான்காயிரம் வெள்ளியை நம்பி
என்ன மாதிரி படங்கள் எடுக்க முடியும் ….? தரமான படைப்புகளை அந்த தரத்துக்கு ஏத்த மாதிரி
நல்ல விலை கொடுத்து வாங்குங்கள். இதில் சமூதாய பார்வை உண்டு. அடுத்த தலைமுறை இளைஞர்களின்
எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
இந்த
கட்டுரை மிக சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரை. நமது மலேசியா தமிழ் திரைத்துறை உலகம் ஏன்
முன்னேறவில்லை என்று நான் எழுதியது உண்மையில் பத்து சதவீதம் கூட கிடையாது. முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்யும் அளவுக்கு காரணங்களும்,
செய்திகளும், ஆவணங்களும், பொய்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் அடங்கி உள்ளது. திரைத்துறை
என்பது கலை. அது வியாபாரத்தோடும் சமூகத்தோடும் கலந்துள்ளது. உலகில் உள்ள அத்துனை நாடுகளிலும்
திரைத்துறை உள்ளது. திரைத்துறை ஒரு சமூகத்தை பிரிதிபலிக்கிறது. சமூகம் ஒன்றிணையும்
போதுதான் ஒரு திரைத்துறையை காப்பாற்ற முடியும். இதில் நாளைய இளைஞர்களின் நம்பிக்கையும்
அடங்கிறது.

2 Comments
Arumai.... Thoduvanam Thooram Illai enkira tele-movie veliyaaga ullathu. Athai paarthu viddu ungalin vimarsanathai eluthungal
Replyகண்டிப்பாக எழுதுகிறேன் மகேஸ் .....
Reply