Showing posts with label Screenplay Writing. Show all posts

Monday, 17 July 2017

மலேசிய தமிழ் சினிமாவின் வீழ்ச்சி.


இது ஒரு மிக நேர்மையான கட்டுரை. கடந்த 38 ஆண்டுகளாக மலேசிய தமிழ் திரைத்துறை(Cinema) கொஞ்சம் கூட நகரவில்லை. அது என்ன 38 ஆண்டுகள் கணக்கு? நமது நாட்டின் முதல் திரையரங்கு படமான(Theatrical Movie) ’ரத்த பேய்’ 1979-இல் திரையீடு கண்டது. அந்த படத்தின் திரையீடல் கணக்கையே நமது உள்ளூர் திரைத்துறையின் வயதாக கணக்கிட்டு கொள்ளலாம். அதன் பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து ‘இன்ஸ்பெக்டர் சேகர்’ தொலைகாட்சி படமாக(Tele-Movie) வந்தது. அந்த வகையில் ’இன்ஸ்பெக்டர் சேகர்’-தான் நமது நாட்டின் முதல் தொலைகாட்சி படம். ஐரோப்பியா நாடுகளில் தொலைக்காட்சி படம்(Televisyen Movie) என்பார்கள். இந்த வகை படங்களுக்கு இன்று வரை, அந்த நாடுகளில் நல்ல வரவேற்பும் மதிப்பும் இருக்கிறது. நாம் மிக சரியாக அந்த வகை(Genre) தொலைகாட்சி பட துறையை தேர்ந்தெடுத்தோம்.  ஆனாலும்  நம் உள்ளூர் திரைத்துறை ஒரு அடி கூட வளராமல் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஏன்? பல முக்கிய காரணங்கள் இருந்தாலும்; மிக முக்கிய மூன்று காரணங்கள் உண்டு. அவை (1) திரைக்கதை(Script), (2) தவறான போக்கு(Wrong Method), (3) ஆதிக்கம்(Monopoly).

முதலில் நாம் ஒரு விசயத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது ஒரு வியாபாரம். முழுக்க முழுக்க பணம் சம்பந்தப்பட்டது. இந்த வியாபாரம் மெல்ல மெல்ல வளரும் போது, கூடவே இந்த திரைத்துறையும் வளரும். இந்த துறை சார்ந்த வல்லுனர்களும் வளர்ந்து, இது ஒரு வலுவான; மிக பெரிய வியாபார துறையாக உருவெடுக்கும். இந்த துறைக்கு அதிக தேவைகள்(Demand) உருவாகும். அப்படி தேவைகள் உருவாகும் போது நம்பிக்கையோடு நல்ல தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இன்னும் நிறைய பேர்கள் உள்ளே வருவார்கள். அப்படி வரும் போது நாம் அடுத்த அடுத்த கட்டத்துக்கு போக முடியும். கூடவே மிக சிறந்த திரைப்படங்களும்; நல்ல திரைப்படங்களும் வரும். திரைத்துறை தொழில் என்பது சங்கிலி தொடர் போன்றது. அது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  வில்லியம் கோல்ட்மேன் எழுதிய The Adventure in the Screen Trade என்கிற புத்தகம்; ஒரு திரைத்துறை எப்படி வியாபாரத்தோடு இணைகிறது என்பதனை மிக தெளிவாக பேசுகிறது.

திரைக்கதை. ஒரு படத்துக்கு மிக மிக முக்கிய அடிப்படை அம்சமே திரைக்கதைத்தான். திரைக்கதை இன்றி ஒரு படம் கிடையாது. ஒரு நல்ல திரைக்கதைக்கு தான் தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் இன்னும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் தேவை படுவார்கள். நாம் செய்யும் அத்துனை செலவுகளும் திரைக்கதைக்குதான். நமக்கு நல்ல திரைக்கதை கிடைக்கவில்லை என்றால் நாம் செய்யும் அத்துனை செலவுகளும் விரயம் தான். அதிலும் மலேசிய தமிழ் ரசிகர்கள் மிக சிறந்த ரசிகர்கள். காலங்காலமாக மிக சிறந்த எம் ஜி ஆர் சிவாஜி படங்கள், மிக சிறந்த கமல் ரஜினி படங்கள், மிக சிறந்த விஜய் அஜித் படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள். கூடவே மிக சிறந்த ஆங்கில, சீன படங்களும் பார்த்தவர்கள். அப்படி பட்ட மலேசிய தமிழ் ரசிகர்களுக்கு என்ன மாதிரி படங்கள் நாம் கொடுக்க வேண்டும்? கோச டப்பா, ஐஸ் கோசம் போன்ற படங்களா?

இன்று வரை ஒரு முழுமையான திரைக்கதையோடு நம் உள்ளூர் திரைப்படம் வரவே இல்லை. இதர தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் உள்ளூர் கலைஞர்கள் திரைக்கதையை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வது இல்லை. அதற்குரிய முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. ஒரு கரு உருவானவுடம், அதை மளமளவென எழுதி; உடனடியாக ஒரு கதாநாயகன்/கதாநாயகியைத் தேடிப் பிடித்து, ஒளிப்பதிவு தளவாடங்களை எடுத்து கொண்டு படபிடிப்புக்கு கிளம்பி போய் விடுகிறார்கள். படபிடிப்பு தளத்தில் நின்று கொண்டு வசனம் என்னவென்று யோசிப்பார்கள். ஒளிப்பதிவு கோணங்கள் (Camera Angles) யோசிப்பார்கள். சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும்பாலான மலேசிய தமிழ்ப்படங்கள் கேலிக்கூத்துக்கு ஆளாகிறது.

திரைக்கதை என்பது கலையோ அல்லது அபூர்வ சக்தியோ கிடையாது. அது ஒரு முறைமை(Method). இன்னும் தெளிவாக சொல்லப்போனால் திரைக்கதை என்பது தொழில்நுட்பம்(Technical). திரைக்கதை எழுத கற்று கொள்ள குறைந்த பட்சம் மூன்று புத்தகங்களாவது படித்திருக்க வேண்டும். சில பயிற்சி காணொளிகள் பார்த்திருக்க வேண்டும். நிறைய படங்கள் பார்க்க வேண்டும்.

திரைக்கதை எழுதும்/எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளனுக்கு, தான் உருவாக்கும் கதாபாத்திரத்தால் ஒரு சம்பவத்தை நிகழ்த்திகாட்டவும்; நிகழும் அந்த சம்பவத்தை பெரும் எதிர்ப்பார்ப்புகளோடும் ரசிக்கும் வகையில் ரசிகர்களுக்கு சொல்ல தெரிய வேண்டும். இதுதான் திரைகதை எழுதபோகும்/ எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதை எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய கோட்பாடு.

பொதுவாக இன்றைய ரசிகர்கள் மிக மெதுவாக நகரும் திரைக்கதைகளை விரும்புவதில்லை. பத்து நிமிடத்துக்கு மேல் ஒரு படம் அவர்களுக்கு போர் அட்டிக்கிறது என்றால்; உடனே கைபேசியை எடுத்து துலாவ ஆரம்பித்து விடுவார்கள். கூடவே வாட்சாப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக ஊடகங்களில் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பத்து விடுவார்கள். அதைவிட முக்கியம் நாம் தேர்தெடுக்கும் வகை(Genre) பிரிவுகள். மலேசியா தமிழ் திரைத்துறை உலகை  பொருத்த வரையில் பெரும்பாலும் இரண்டே இரண்டு வகை படங்களில் தான் கை வைப்பார்கள். ஒன்று காதல் வகை படங்கள். இன்னொன்று பேய் பட வகையில். ஆனால் நாம் தொடாத வகைகளில்(Genre) ஆயிரம் கதைகள் இங்கு உள்ளது.

நமக்கு தேவை எல்லாம் பொறுமையும் கற்று கொள்ளும் ஆவலும் தான். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் நல்ல திரைக்கதையோடு கூடிய ஒரு நல்ல மலேசிய தமிழ்ப்படம் உருவாவது சாத்தியம் இல்லை என்றே கூறலாம். ஆகவே, நீங்கள் செய்யும் அத்துனை செலவுகளும்; நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாநாயகனும் கதாநாயகியும்; நீங்கள் படப்பிடிப்பு நடத்தும் தளங்களும் இடங்களும்; இசை, ஒப்பனை, தொகுப்பு(Editing),  ஒலி/ஒளிப்பதிவு, படபிடிப்புக்கு பயன்படுத்தும் உடைகள், இன்னும் பிற என அனைத்தும் திரைக்கதை எனும் அடிப்படைக்கு தான். அந்த திரைக்கதையையே எழுத தெரியவில்லை என்றால்; உலகின் விலை உயர்ந்த புகைப்பட கருவி வைத்து படம் பிடித்தாலும் அது குப்பை படம் தான்.

ஒரு திரைப்படத்துக்கு மிக மிக அத்தியவாசியமான ’திரைக்கதை’-யை எழுதும் முறையை இன்னமும் மலேசியா தமிழ் திரைத்துறை உலகம் கற்று கொள்ளவே இல்லை. நமது நாட்டில் திரைத்துறைக்கான எழுத்தாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. நம் மலேசிய தமிழ் திரைத்துறைவுக்கு அரோக்கியமான எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். யார் ஒத்துக் கொண்டாலும், இல்லை என்றாலும் இதுதான் நிதர்சன உண்மை. ஒரு நல்ல/விருவிருப்பான திரைக்கதையோடு, கூடவே செம்மையான வசனத்தோடு; உருவாக்கத்திலும் (Film Making)  இங்கேயும் அங்கேயும் கோட்டை விட்டிருந்தாலும் கூட; ஒரு படம் வந்தால் நம் மலேசிய தமிழ் ரசிகர்கள் அந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

ஒரு சில மலேசிய தமிழ்ப்படங்கள் ஓரளவுக்கு/சுமாரான திரைக்கதையோடு வந்திருக்கிறது. அந்த படங்கள் ரசிகர்களிடம் போய் சேராததற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. அது தவறான போக்கு(Wrong Method). இதுவும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அம்சம் தான். தொலைக்காட்சி போக்கில்(Tele-movie Method) படம் எடுத்திருப்பார்கள். பிறகு அதை திரையரங்கில் வெளியீடு செய்திருப்பார்கள். திரையரங்குக்கு எடுக்கும் படங்கள் தொலைகாட்சியில் போடும் போது; தொலைக்காட்சிக்கு எடுக்கும் படங்கள் ஏன் திரையரங்கில் வெளியீடு செய்யக்கூடாது? இது மிகவும் அபத்தமான கேள்வி.

தொலைக்காட்சிக்கு பயன்படுத்தும் படப்பிடிப்பு கருவி(Camera), கண்ணாடி வில்லை (lens), ஒளியமைப்பு (Lighting)  என்பது வேறு. திரையரங்கு படத்துக்கு பயன்படுத்தும் படப்பிடிப்பு கருவி, கண்ணாடி வில்லை (lens), ஒளிகலவை (Lighting) என்பது முற்றிலும் வேறு. ஒலிப்பதிவு(Sound) என்பது திரையரங்கு படத்துக்கு ரொம்பவும் முக்கியம். ஒலிப்பதிவு என்கிற இந்த பெரிய துறையில் பல உள் பிரிவு துறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் Surround sound System. இந்த ஒலிக்கலவை அமைப்பு(Sound System) சரியாக செய்யவில்லை என்றால்; திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்க்க முடியாது. காது வலிக்கும். அந்த படத்தின் மீது நமக்கு வெறுப்பு வந்து விடும்.  தொலைக்காட்சி படத்துக்கு ஒலிக்கலவை அமைப்பு பெரிய அளவில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

திரையரங்கு படத்துக்கு வைக்கும் ஒளிப்பதிவு கோணங்கள்(Camera Angles) வேறு தொலைகாட்சி படத்துக்கு வைக்கும் ஒளிப்பதிவு கோணங்கள் என்பது வேறு. தொலைக்காட்சி படத்துக்கு வைக்கும் மிக நெறுக்கமான காட்சி(close-up shot) திரையரங்கு படத்துக்கு வைக்கமுடியாது. திரையரங்கு படத்துக்கு வைக்கும் தூரவெளி காட்சி(Wide shot) தொலைக்காட்சி படத்துக்கு வைக்க முடியாது.  இதை விட அதி முக்கியம் ஒளிகலவை(Lighting). இது ஒரு கலை. திரையரங்கு படத்துக்கு ஒளிக்கலவை வைக்க தெரிய வேண்டும். பொதுவாக திரையரங்கு படத்துக்கு உயிர்ப்பும்(Depth) திரைப்பார்வையும்(Cinema Look) கொடுப்பதும் இந்த ஒளிக்கலவைத்தான்.  படப்பிடிப்பு கருவி மற்றும் ஒளிக்கலவை இவை இரண்டும் தான் திரைக்கலை (Cinematic) பார்வை கொடுப்பது. திரைக்கலை என்பது நீங்கள் நினைப்பது போல் வழக்கமான கோர்வையில் வரும் படங்கள் கிடையாது. பழைய பாரதிராஜா, மணிரத்னம், மணிவண்ணன் படங்களில் இந்த திரைக்கலையை பார்க்கலாம். ஒரு காட்சியை திரைக்கலையோடு படம் பிடித்து வெள்ளைத்திரையில் இருட்டு வெளிச்சத்தில் காட்டும் போது அவ்வளவு அழகாக இருக்கும். தற்போதைய இயக்குனர்களில் பாலாஜி மோகன்(வாய் மூடி பேசவும், மாரி), நலன் குமாரசாமி(சூது கவ்வும்) போன்றோர்களின் படங்களில் பார்க்கலாம்.

சிறுவனை மையப்படுத்தி மலேசிய தமிழ் கேங்ஸ்டர் படம் ஒன்று வந்தது. அந்த படத்தின் திரைக்கதை ஓரளவுக்கு நன்றாக அமைந்தும்; அந்த படம் ஏன் ரசிகர்ளை ஈர்க்கவில்லை என்பதற்கு இந்த தவறான போக்கு (wrong method) ஒரு முக்கிய காரணம். அந்த படத்தின் பெரும்பாலான காட்சி சட்டகங்கள் (Frame) தொலைகாட்சி படம் போக்கில்தான் இருந்தது. அந்த படத்தின் ஒளிக்கலவை(Lighting) கூட தொலைகாட்சி படம் பார்க்கும் அனுபவம் தான் கொடுத்தது. திரையரங்கில் வந்து காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்ப்பார்க்கள். அப்படி எதிர்ப்பார்ப்புகளோடு வரும் ரசிகர்களை ஏமாற்ற கூடாது. திரைத்துறை வியாபாரத்தின் முக்கிய விதி இது.

மலேசிய தமிழ் திரைத்துறை உலகில் பெரிய கோளாறே இது தான். தாம் எடுக்கும் படம் தொலைகாட்சி(Tele-Movie) படமா? திரையரங்கு (Theatrtical Movie) படமா என்கிற அடிப்படை ஞானம் கூட இருக்காது. தொலைகாட்சிக்கு எடுக்கும் படங்கள் தொலைகாட்சியில் மட்டும் தான் பார்க்க முடியும். திரையரங்கு படங்கள் திரையரங்கிலும் பார்க்கலாம் தொலைகாட்சியிலும் பார்க்கலாம். மலேசியாவில் பொதுவாக தொலைகாட்சி படங்களாக எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்து; ரசிகர்கள் மத்தியில் பெரிய வெறுப்பை சம்பாதித்து கொண்டார்கள். இதுனாலேயே மலேசியா தமிழ்ப்படத்தை நம்பி யாரும் திரையரங்குக்கு வருவதில்லை. இதில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நல்ல நல்ல தொலைகாட்சி படங்கள் எடுங்கள். அதை தொலைகாட்சியில் வெளியீடு செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுங்கள். அதையே நன்மதிப்பு சான்றிதழாக(Credit) காட்டி திரையரங்கு படம் எடுக்க வாருங்கள். இதற்கு மலேசிய தொலைகாட்சி நிறுவனங்களான ஆஸ்ட்ரோ மற்றும் ஆர்டிஎம் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டு இறக்குமதி சரக்குக்கு கொடுக்கும் மரியாதையில் கால் பங்காவது மலேசிய தமிழ் தொலைகாட்சி படங்களுக்கு கொடுக்க வேண்டும். இது ஆணை.

அப்படியே நல்ல தொலைகாட்சி படங்கள் வந்தாலும் அதை தொலைகாட்சியில் வியாபாரம் செய்யும் போது நம் கலைஞர்கள் படும் பாடு இருக்கே இதை சொல்லி மாளாது. இங்குத்தான் ஒரு குறிப்பிட்ட சாரரின் ஆதிக்கம் இருக்கிறது. நம் மலசிய தமிழ் திரைத்துறை உலகை பொறுத்த வரையில் இரண்டு முரட்டு கும்பல்கள் தான் உண்டு. ஒன்று ஆர்டிஎம்-யை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆதிக்க சாரார்கள். இன்னொன்று ஆஸ்ட்ரோவை வைத்து பணம் சம்பாதிக்கும் ஆதிக்க சாரார்கள். ஆர்டிஎம்-ஐ பொறுத்த வரையில் ஆரம்பகாலத்தில் மாஇகாவின் தொகுதி தலைவர் சுப்பையாவின் குழந்தைகளான திவாகர் சுப்பையா, சந்திர சேகர் சுப்பையா இவர்கள் ஆதிக்கத்தில் தான் இருந்தது. இவர்களை மீறி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் கூட உள்ளே நுழையாது. இவர்களுக்கு சலாம் போட்டு உள்ளே நுழைந்தது அடுத்த கும்பல். இரண்டாம் கும்பலோடு இணைந்து வந்த அடுத்த ஒரு கும்பல் உருவானது.

இந்த மூன்று அடுக்கு நிலை(layer) கும்பல்கள் தான் இப்போது வரை ஆர்டிஎம்-ஐ ஆண்டுக் கொண்டிருக்கிறது. இவர்களை மீறி புதுசா யாரவது தன் தொலைகாட்சி படத்தை விற்க உள்ளே வந்தால்; பத்து வகை உரிமங்கள்(Permit/license) கேட்பார்கள்; 25 பாரங்கள் கொடுப்பார்கள். இதை எல்லாம் பூர்த்தி செய்வதற்குள் நமது தாவு தீர்ந்து போய்; இந்த பாழும் திரைத்துறைவே வேண்டாம் என்று வெறுத்து ஓடி போய் விடுவோம். அப்புறம் எப்படி நல்ல தொலைக்காட்சி படங்கள் வரும்? இதனையே நன்மதிப்பு சான்றிதழாக(Credit) காட்டி எப்படி பெரும்படம் எடுப்பது? முதலில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு பெரிய பெரிய தொல்லைகள் கொடுக்க கூடாது. விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். இந்த ஆதிக்க நிலைகளை(Monopoly) உடைக்க வேண்டும். தரமான படைப்புகளை வாங்குவதற்கு அரசாங்க தன் சட்டத்தை தளர்த்த வேண்டும். இல்லையேல் மலேசியாவில் நல்ல திரைத்துறை உருவாவது கடினமே.

இந்த சட்ட விதிகள் இல்லாமல் மிக எளிமையாக முறையில் தொலைகாட்சி படங்கள் விற்பதற்கு ஒரு தொலைகாட்சி நிறுவனம் உண்டு. அது ஆஸ்ட்ரோ. கண்ட கண்ட அனுமதி உரிமங்கள்(Permit/license) தேவை இல்லை. ஆனால் ஆர்டிஎம்-யே பராவாயில்லை எனும் அளவுக்கு இந்த ஆஸ்ட்ரோகாரர்கள் பண்ணுவார்கள். எப்படி ஆர்.டி.எம்-இல் இரு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ அதே போல் ஆஸ்ட்ரோவிலும் ஒரு ஆதிக்க கும்பல் உண்டு. கொஞ்சம் மனசாட்சி உள்ள கும்பல். ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆஸ்ட்ரோ தமிழ் பிரிவின் தலை ஒரு தமிழ்நாட்டுகாரர்(ஊர்காரர்). இங்குள்ள தமிழ் திரைத்துறை உலகம் முன்னேற கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பவர்.

புதுசா ஒருத்தன் ஒரு தொலைகாட்சி படத்தை எடுத்து முடித்து ஆஸ்ட்ரோவில் விற்க போகும் போது அங்கு நடக்கும் கூத்து மிக தமாசாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு 10 ஆயிரம் வெள்ளி என்பார்கள். நாம் செய்த செலவே 30 ஆயிரம் வெள்ளியாக இருக்கும். உன்னை யார் 30 ஆயிரம் செலவு செய்ய சொன்னது என்று நம்மை திருப்பி கேட்பார்கள். சில தொலைகாட்சி படங்கள் 3-4 ஆயிரம் வெள்ளிக்கு தான் வாங்கி இருப்பார்கள். வேதனையாக விசயம். இந்த மூன்று நான்காயிரம் வெள்ளியை நம்பி என்ன மாதிரி படங்கள் எடுக்க முடியும் ….? தரமான படைப்புகளை அந்த தரத்துக்கு ஏத்த மாதிரி நல்ல விலை கொடுத்து வாங்குங்கள். இதில் சமூதாய பார்வை உண்டு. அடுத்த தலைமுறை இளைஞர்களின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.

இந்த கட்டுரை மிக சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரை. நமது மலேசியா தமிழ் திரைத்துறை உலகம் ஏன் முன்னேறவில்லை என்று நான் எழுதியது உண்மையில் பத்து சதவீதம் கூட கிடையாது.  முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்யும் அளவுக்கு காரணங்களும், செய்திகளும், ஆவணங்களும், பொய்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் அடங்கி உள்ளது. திரைத்துறை என்பது கலை. அது வியாபாரத்தோடும் சமூகத்தோடும் கலந்துள்ளது. உலகில் உள்ள அத்துனை நாடுகளிலும் திரைத்துறை உள்ளது. திரைத்துறை ஒரு சமூகத்தை பிரிதிபலிக்கிறது. சமூகம் ஒன்றிணையும் போதுதான் ஒரு திரைத்துறையை காப்பாற்ற முடியும். இதில் நாளைய இளைஞர்களின் நம்பிக்கையும் அடங்கிறது.



Wednesday, 4 January 2017

மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 3

திரைக்கதை என்பது ஒரு கதையை audience-க்கு ஆக சிறந்த முறையில் போரடிக்காமல் மிகவும் சுவரசியமாக விஷுவலாக சொல்வதே ஆகும். சில படங்களை பார்த்திருப்போம். கதை நன்றாக இருக்கும் ஆனாலும் படம் பார்ப்பதற்கு மிகவும் மொக்கையாக இருக்கும். சில படங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கும் ஆனால் கதை ரொம்பவும் மொக்கையாக இருக்கும்.  சில படங்களின் கதை ரொம்பவும் சுமாராக தான் இருக்கும். ஆனால் ஆடியன்ஸ் மத்தியில் மிகவும் ஆரவரமாக வரவேற்க்கப்பட்டு தியேட்டரில் கலேக்‌ஷன் அள்ளி இருக்கும். சில படங்களின் கதை நன்றாக இருந்தும்; மேக்கிங்கிலும் அசத்தி இருப்பார்கள். ஆனால் அந்த படம் ஆடியன்ஸ் மத்தியில் எந்த ரியாக்சனும் இல்லாமல் தியேட்டரில் கூட்டமும் இல்லாமல் படு தோல்வி அடைந்திருக்கும்.

இந்த இரண்டு கூற்றுகளையும் தனி தனியாக பிரித்து எடுத்து நன்றாக ஆராய்ந்து பார்த்தோம் என்றால்; இந்த இரண்டு வகை படங்களின் அடிப்படை அம்சம் திரைக்கதையாகத்தான் இருக்கும். ஆடியன்ஸ் இதுவரை கொண்டாடி மகிழ்ந்த அத்துனை படங்களும் திரைக்கதையில் புகுந்து விளையாடி இருபார்கள். ஆடியன்ஸ்க்கு போரடிக்காமல் கதையை நகர்த்தியிருப்பார்கள்.

சரி கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு நேர்மையான போலிஸ்காரரை திருட்டு தொழில் செய்யும் வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அந்த நேர்மையாக போலிஸ்காரரின் மகன்; வளர்ந்து பெரியவனாகி தந்தையின் மரணத்துக்கு காரணமான வில்லன்களை பழி தீர்க்கிறான். இது கதை.

இந்த கதையை நீங்கள் இதுவரை நூறுக்கும் அதிகமான தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். ஏன் சில உலக சினிமாக்களில் கூட பார்த்திருக்கலாம். இந்த சிம்பிளான கதை தமிழ் சினிமாவின் எவர்கிரின் படங்களான மூன்று முகம் மற்றும் அபூர்வ சகோதரர்கள் என இருவேறு திரைக்கதையாக வந்து ஹிட் அடித்தது. இந்த இரு படங்களின் அபார வெற்றிக்கு காரணம், அந்த படங்களின் திரைக்கதை உத்தியே.

மூன்று முகம். நேர்மையான போலிஸ் ஆபிசர் அலெக்ஸ் பாண்டியனாக வரும் ரஜினியை செந்தாமரை அண்ட் கோ சேர்ந்துக் கொண்டு கொலை செய்து விடுவார்கள். கொலை செய்யப்பட்ட ரஜினிக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு குட்டி ரஜினிகள் பிறப்பார்கள்.

பிறந்தவுடனேயே இரண்டு ரஜினியும் தனி தனியாக பிரிக்கப்பட்டு; ஒரு ரஜினி தன் சொந்த அத்தையிடமும் இன்னொரு ரஜினி மூன்றாம் தரப்பான தேங்காய் சீனிவாசன் மூலமும் வளர்க்கப்படுவார்கள். ஒரு ரஜினி அருண் கேரக்டரிலும் இன்னொரு ரஜினி ஜான் கேரக்டரிலும் படத்தில் வருவார்கள்.

அருண் நன்றாக படித்து மிகவும் கெட்டிகாரனாக இருப்பார். இன்னொரு ரஜினி தில்லு முல்லுகள் செய்யும் குட்டி திருடனாக இருப்பார். அருண் கேரக்டரில் வரு ரஜினி, தன் தந்தை ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி என்றும்;  அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிந்துக் கொண்டு வில்லன்களை பழி வாங்குவார்.

அபூர்வ சகோதர்கள். முதல் கமல் ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி சேதுபதி. நாகேஷ் எண்ட் கோ சேர்ந்து கொண்டு அவரை கொன்று விடுவார்கள். கொலை செய்யப்பட்ட சேதுபதிக்கு இரட்டை குழந்தைகளாக இரண்டு குட்டி கமல்கள் பிறப்பார்கள்.

பிறந்த உடனேயே இரண்டு கமலும் தனி தனியாக பிரிக்கப்பட்டு; ஒரு கமல் தன் சொந்த அம்மாவிடமும் இன்னொரு கமல் மூன்றாம் தரப்பான மனோரமாவிடமும் வளர்வார்கள். ஒரு கமல் அப்பு. இன்னொரு கமல் ராஜா.
இதில் அப்பு கேரக்டரில் வரும் கமல் மிகவும் கெட்டிகாரராக இருப்பார். ராஜா போக்கிரி தனங்கள் செய்துக் கொண்டு ஜாலியாக கவுதமியோடு ஊர் சுற்றி கொண்டிருப்பார். நேர்மையான  போலிஸான தன் தந்தை சேதுபதியை நாகேஷ் எண்ட் கோ கொலை செய்ததை தெரிந்துக் கொண்டு; அப்பு கேரக்டரில் வரும் கமல் அவர்களை பழி வாங்குவார்.



படிக்கும் போதே இரண்டு கதைகளும் ஒரே கதைதான் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

இது கதை. இந்த கதை எப்படி இருவேறு அட்டகாசமான திரைக்கதைகளாக உருவானது?

மூன்று முகம் திரைக்கதை பிளஷ்பேக் முறையில் எழுதப்பட்டிருக்கும். படத்தின் ஆரம்ப சீனில் நமக்கு எந்த முன் கதையும் தெரியாது. வெளிநாட்டில் படித்து விட்டு வந்த ஒரு சாதாரண ரஜினியை(அருண்) தான் நாம் பார்த்துக் கொண்டிருப்போம்.

சடாரென அலெக்ஸ் பாண்டியன் கதைக்குள் நுழைவார். யாராலும் மறக்க முடியாத characterization அது. அந்த படம் பார்த்த யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாத பாத்திர படைப்பு ‘அலெக்ஸ் பாண்டியன்’.

அலெக்ஸ் பாண்டியன் பிளஷ்பேக் முடியும் போது; அருண் கேரக்டரில் வரும் ரஜினிக்கு தன் முன் ஜென்ம கதை ஞாபகத்துக்கு வரும். முன் பிறவியில் தானே நேர்மையாக போலிஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியன் என்றும்; தன்னை ஏகாம்பரன் எனும் வில்லன் கொலை செய்து விட்டதாகவும்; தன்னை கொலை செய்த ஏகாமபரத்தை பழி வாங்கவே மறு பிறவி எடுத்து வந்ததாக பூர்வ ஜென்ம கதையை சொல்வார். இங்கிருந்து கதை விருவிருப்பாக நகரும்.

1982-இல் வெளியீடு கண்ட இந்த படம் விருவிருப்பான திரைக்கதை உத்தியும் அலெக்ஸ் பாண்டியன் characterization-னும்  அந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக ஆனது. அந்த ஆண்டின் தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் இந்த படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு வழங்கப்பட்டது.

அபூர்வ சகோதரர்கள். இது நேர்கோட்டில்(linear) பயணிக்கும் கதை. படத்தின் ஆரம்பத்திலேயே இன்ஸ்பெக்டர் சேதுபதியின் முன் கதை படம் பார்க்கும் நமக்கு சொல்லப்பட்டு விடும். சேதுபதியின் மரணத்திற்கு காரணமானவர்கள் பழிவாங்கப்பட வேண்டும் என்றும் நமக்கு தெளிவாக உணர்த்தியிருப்பார்கள்.

வில்லன்கள் எப்படி; யாரால் பழி வாங்க படுவார்கள் என்கிற சஸ்பன்ஸை நமக்கு கொடுத்திருப்பார்கள். குள்ளனாக இருக்கும் கமல் வில்லன்களை எப்படி பழி வாங்க போகிறார் என்கிற ஆவலையும் நமக்கு ஏற்படுத்தி இருப்பார்கள்.

மூன்று முகத்தில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் எப்படி நம் மனதில் ஆழமாக பதிந்ததோ அதே போல் அபூர்வ சகோதர்கள் படத்தில் குள்ள அப்பு கேரக்டர் யாராலும் மறக்க முடியாது. அதுவரை வந்த தமிழ்ப்படங்களில் அப்பு கேரக்டர் முற்றிலும் புதிதாக இருந்தது.

போதத குறைக்கு இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து கொண்டது. கிரேஸி மோகனின் வசனமும் படத்தின் திரைக்கதைக்கு மிகவும் உதவியாக இருந்தது. அப்பு என்கிற கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் நாகேஷ், ஜனகராஜ் இருவரின் பாத்திர படைப்புகளும் நம்மை கவரும் வகையில் மிக சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள்.

ஒரு நிமிடம் கூட போரடிக்காத அக்‌ஷன் காமெடியில் நம்மை அசத்தியிருப்பார்கள். இன்றும் நம் மனதை விட்டு அகலாத பல காட்சிகள் இந்த படத்தில் இருக்கும். இன்ஸ்பெக்டர் சேதுபதி குடிசையை பொத்து கொண்டு  அறிமுகம் ஆகும் காட்சி, ரூபிணியுடன் ரிஜிஸ்டர் கல்யானத்துக்கு அப்பு கிளம்பி போகும் காட்சி, ஜனகராஜ் துப்பறியும் காட்சிகள், ராஜாவை தேடி வரும் கும்பல் மயில்சாமி எண்ட் கோ குரூப்பை அடித்து துவைப்பது, என பல காட்சிகள் இன்றும் நம் நினைவில் நிற்பவை. 1989-ம் வருடம் வெளியீடு கண்ட இந்த படம் அந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

கதை என்றால் என்ன; திரைக்கதை என்றால் என்ன? என்பதனை மிக சிம்பளாக இந்த அத்தியாயத்தில் பார்த்தோம். கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள வேறுபாடுகளை அடுத்த அத்தியாத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்ப்போம்.

கொசுறு 1 #  ரஜினியின் ராஜாதி ராஜாவும் கமலின் அபூர்வ சகோதர்களும் ஒரே நேரத்தில் ரிலிஸ் ஆகி; கமலின் அபூர்வ சகோதரர்களே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அப்பு ராஜா என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு இந்தியிலும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் அபூர்வ சகோதரர்கள்.


கொசுறு 2# கமலின் அபூர்வ சகோதரர்கள் நம் மலேசியாவில் ஒரு வரலாற்று சம்பவமாக அமைந்தது.  பூட்டிய தியேட்டர்களுக்கு அபூர்வ சகோதரர்கள் சாவியை கொண்டு வந்தது. மலேசியாவில் தியேட்டர் பிரியர்கள் ஆரவரமாய் கொண்டாடிய படம் அபூர்வ சகோதரர்கள். அந்த கதையை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

Wednesday, 21 December 2016

மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 2


ASTRO Channel 201 வானவில் மற்றும் 202 வெள்ளித்திரை மட்டும் இருந்த காலத்தில் கூட பெரும் பாதிப்பு வரவில்லை. எப்போ சன் டிவியும் விஜய் டிவியும் வந்ததோ அன்றோடு விழுந்தது மரண அடி. அது மலேசிய சினிமா படைப்புக்கு மட்டும் ஆப்பு அடிக்கவில்லை. மலேசியா தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த Supply Chain-ஐயும் இழுத்து பிடித்து நிறுத்தியது. சன், விஜய் டிவி வரவுக்கு பிறகு சிடி கடைகள் எல்லாம் மூடுவிழா கண்டது. இன்றைய தேதியில் சிடி கடையில் சிடியை தவிர மற்ற எல்லா பொருளும் விற்கிறார்கள். இதனால் சிடி ரிப்ளிகேட்டர்கள், சப்ளையர்கள், டிசைனர் என பலரும் பாதிக்கப்பட்டார்கள். அடுத்த அடுத்த அத்தியாயங்களில் ASTRO, சன், விஜய் டிவி மூலம் உள்ளூர் சினிமா எப்படி பாதிக்கப்பட்டது எனவும் முழுமையாக அலசி ஆராய போகிறோம்.
செட்டலைட் டிவிகளால் ஒட்டு மொத்த Malaysian Film Industry, பாதிக்கபடுவதை உணர்ந்த அரசாங்கம், உடனடியாக Local Film Industry பாதுகாக்க சில அதிரடி நடவடிகைகளை எடுத்தார்கள். கூடவே டெக்னாலாஜிகள் அசுரதமான வளர்ச்சியில் புது புது இளைஞர்கள் நம்பிக்கையோடு உள்ளே வந்தார்கள். இங்கேதான் நமது உள்ளூர் சினிமாவின் ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது. இதையும் முழுமையாக அலசி ஆராய்வோம்.
பலர் என்னை நோக்கி வைக்கும் ஒரு முக்கியமான கேள்வியை இந்த சீரியலில் மிக தெளிவாக விவரிக்க உள்ளேன். அந்த கேள்வி, மலேசியாவில் படம் எடுத்து பணக்காரன் ஆகி Exclusive வாழ்கை எல்லாம் வாழமுடியாது.   மலேசியாவில் படம் எடுத்து பணம் எல்லாம் சம்பாதிக்க முடியாது. ஆத்ம திருப்திக்காக, பொழுது போக்குக்காக வேண்டுமானல் இங்கு படம் எடுக்கலாம் அல்லது நடிக்கலாம். அவ்வளவே ….. 

இந்த எண்ணம் உள்ளவர்களுக்கு நான் உறுதியாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்வது, மலேசியாவிலும் படம் எடுத்து ஒரு பெரிய Exclusive வாழ்கை வாழலாம். நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஒரு சின்ன உதாரணம். இன்றைக்கு தமிழ் நாட்டில் ஒரு புது படத்துக்கு பூஜை போட்டால் உடனடியாக மலேசியா ரைட்ஸ்க்கு ஒரு விலை பேசுவார்கள். பிறகுதான் மற்ற ரைட்ஸ் பேசுவார்கள். கமல் ரஜினி படங்களின் பட்ஜெட் கூட மலேசியா வியாபார கணக்கை வைத்தே பிரிப்பார்கள்.  இது பொய் இல்லை. 
இந்தியாவுக்கு அடுத்து மலேசியா தான் தமிழ் படங்களின் மிக பெரிய மார்கெட். ஒரு சாதரணமான தமிழ் படம் கூட தியேட்டர் கலேக்சன், செட்டலைட் ரைட்ஸ், ரிங்டோன் பிஸினஸ் என்று சுமார் 20 லட்சம் வரை சம்பாதித்து விடுவார்கள். இது எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்று போக போக பார்க்க போகிறோம்.

சில புது மூவி மேக்கர்கள் என்னிடம் வந்து, ‘சார் என்னிடம் ஒரு கதை இருக்கு கேட்டு கருத்து சொல்லுங்கள்’ என்பார்கள். அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடத்திலே ஒன்னு எனக்கு சோம்பல் வந்துவிடும் இல்லை என்றால் கோபம் வந்து விடும். ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியரால் தன் திரைக்கதையை அல்லது ஸ்கிரிப்டை சுருக்கமாக ஐந்து முதல் பத்து நிமிடத்தில் சுவரசியமாக சொல்ல தெரிய வேண்டும். இதுதான் முதல் இம்பரேஸன். ஆகவே முதலில் நல்ல கதை சொல்லியாக இருக்க வேண்டும்.
நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு சென்னும் திரைக்கதைக்காகத்தான் இருக்க வேண்டும். ஒரு சூப்பரான திரைக்கதைக்குத்தான் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும். So அது தியேட்டர் படமாக இருந்தாலும் சரி, குறும்படமாக இருந்தாலும் சரி, டெலிமூவியாக இருந்தாலும் சரி திரைக்கதைதான் ஹீரோ. திரைக்கதை சூப்பராக அமைந்துவிட்டால் மற்ற எல்லா விசயங்களும் தானாகவே சூப்பராக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய கொசுறு:
நான் இந்த கட்டுரையை எழுத Sample-ஆக இருப்பவர்கள் இருவர். அவர்கள் கருந்தேள் ராஜேஷ் மற்றும் செங்கோவி அவர்கள். தமிழில் நான் பார்த்த; படித்த மிக தெளிவான திரைக்கதை குறித்த புத்தகம் என்றால் அது ராஜேஷ் எழுதிய திரைக்கதை எழுதுவது இப்படி என்கிற புத்தகம் தான். அதுக்கு அப்புறம் தற்போது செங்கோவி சார் எழுதி வரும் திரைக்கதை சூத்திரங்கள்.  பட் நான் இந்த இருவரையும் காப்பி அடிக்க போவதில்லை. இது ஒரு தனி ட்ராக். இந்த கட்டுரை உங்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
ரஜினியின் மூன்று முகமும் கமலின் அபூர்வ சகோதர்களும் ஒரே கதைத்தான். இந்த இரு படமும் திரைக்கதையால் எப்படி இரு வேறு சூப்பர் டூப்பர் படம் ஆனது என்பதனை அடுத்த வாரம் தொடங்கும் திரைக்கதை என்றால் என்ன என்கிற அத்தியாயத்தோடு அலசி ஆராய்வோம். 

மலேசிய தமிழ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது எப்படி? Part 1



மலேசிய தமிழ் சினிமாவிற்கு எப்படி திரைக்கதை எழுத வேண்டும்? திரைக்கதையை எப்படி மெருகேற்ற வேண்டும் ? இங்குள்ள விதிமுறைகள் என்ன சொல்கிறது என்று விவரிக்க போகும் ஒரு சீரியல்  இது. 
உலகின் எந்த மூலையிலும் மிக சுலமாக திரைகதை எழுதி, அந்த படத்தை ரிலிஸ் செய்து விடலாம். ஆனால் மலேசியாவில் சில விதிமுறைகள் உண்டு. இன்று வரை அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ, இல்லை அதை உடைக்கும் தைரியம்கூட இங்கு யாருக்கும் இல்லை. இந்த சீரியல் கட்டுரை மலேசியாவின் தமிழ் சினிமா உலகை பற்றியும், எனக்குள்ள மிக சிறிய சினிமா அனுவபத்தை கொண்டும், எனக்கு தெரிந்த, யான் கற்று கொண்ட இந்த சினிமா அறிவையும் யமக்கு தெரிந்த திரைக்கதை அமைக்கும் முறையும் இங்கு விவரிக்க போகிறேன்.
 இந்த கட்டுரை தொடர் எழுத மிக முக்கிய சில காரணங்கள் உண்டு.
 1# மலேசியா தமிழ் சினிமா உலகை அலசி ஆராய போகிறோம். கடந்த 42 வருடங்களாக ஏன் மலேசிய தமிழ் சினிமா உலகம் கொஞ்சம் கூட முன்னேறவில்லை?
 2# மலேசிய தமிழ் படத்தில் எந்த இடத்தில் நாம் தப்பு செய்கிறோம்?
3# ஏன் மலேசிய தமிழர்களால் ஒரு சிறந்த தமிழ் படத்தை இப்போது வரை தர முடியவில்லை?
இந்த மூன்று காரணங்களை மிக விரிவாக அலசி ஆராய போகிறோம். கூடவே சிறந்த திரைக்கதை எழுதும் முறையும் கற்று கொள்ள போகிறோம்.இந்த கட்டுரை தொடரில் நுழையும் முன் சில பொது விசயங்களயும் அதோடு சேர்த்து என்னை பற்றியும் கொஞ்சம் மேலோட்டமாக விளக்கி விடுகிறேன்.
20 வருடங்களுக்கு முன் நான் ஒரு சிறந்த சினிமா இயக்குனர் ஆகும் ஆசையில், மலேசியா தமிழ் சினிமா உலகில் நுழைந்த போது ஊசி குத்தும் அளவுக்கு கூட இங்கு தொழில் கற்றுக் கொள்ளவோ, சினிமா பற்றி தெரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. அப்படியும் நான் சில மலேசிய இயக்குனர்களிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்திருக்கிறுக்கிறீன். பெயர்களை சொல்ல வேண்டாம் என்று பார்க்கிறேன் . அத்துனையும் டூபாக்கூர்கள். பெயர்த்தான் டைரக்டர். ஒரு மண்ணும் தெரியாது. சில தமிழ் நாட்டு சினிமா தெரிந்தவர்களை கூடவே வைத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஒழுங்காக தமிழ் கூட எழுத தெரியாது. அவர்கள் செய்யும் காரியங்களை வெளியில் சொன்னாள் வெட்க கேடு. ஒரு வழியாக இந்த டூபாக்கூர் இயக்குனர்கள் கும்பல்களிடம் தப்பித்து வெளியே வந்து சுயமாக தொழில் கற்று கொள்ள முடிவெடுத்தேன்.
கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டும், சில புத்தகங்களை நானே வாங்கி படிக்க தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் தான் எனக்கு சில சென்னை சினிமா நண்பர்களும், நேப்பாள் சினிமா நண்பர்களும் கிடைத்தார்கள். மெல்ல மெல்ல எனக்கு சினிமா என்றால் என்ன என்று புலப்பட தொடங்கியது.
நான் சினிமா கற்றுக் கொள்ள அலைந்த காலத்தில், ஒரு காமிரா கூட கையில் கிடைக்காது. சினிமா என்பது எட்டாத கனியாக இருந்தது.ஆனால் இன்று அப்படி அல்ல. சினிமா ஆங்கிள் என்றால் என்ன என்று கூகிளில் தேடினால் அவ்ளோ பக்கங்கள் உண்டு. யூடுப்பில் எக்கசக்க வீடியோக்கள் உண்டு. 
விரல் நுனியில் பல தகவல்கள் உண்டு. DSLR காமிராவில் படம் எடுக்க கூடிய வசதி வந்துவிட்டது. மிக சுலபமாக Sound Regarding போகலாம். தேவை ஒரு லேப்டாப். சில சாப்டுவேர்கள். Sound proof-வோடு ஒரு ரூம்.  படம் எடுக்க கற்று தர பல இணைய பக்கங்கள், பயிற்சிகொடுக்க பல யூடுப் வீடியோக்கள்.
இன்றைய சினிமா கனவோடு திரியும் இளைஞர்களுக்கு தேவை கொஞ்சம் பொறுமையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும். பொதுவாக உள்ளூர் சினிமாகாரர்களுக்கு சினிமா ஆர்வம் உண்டே தவிர, எதையும் கற்றுக் கொள்ளும் ஆவல் கிடையாது. இதை ஆர்வ கோளாறு என்றே சொல்லலாம். ஒரு தோட் (கதை கரு) உருவான உடனயே காமிராவை தூக்கிக் கொண்டு சூட்டிங் போய் விடுகிறார்கள்.
பொதுவாக நான் எல்லா மலேசிய தியேட்டர் படங்கள், டெலிமூவி, நாடகம் பார்த்திருப்பேன். என்னை பொருத்த வரை மிக மிக சில படங்கள் தான் தியேட்டர் படங்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி உள்ளவை. நான் எந்த மலேசிய படத்தின் பெயரையும் இந்த தொடரில் சொல்லப் போவதில்லை. இது நமது குற்றம் இல்லை. நமக்கு முன் மலேசிய தமிழ் சினிமாவில் இருந்தவர்களின் தவறு. நமது மலேசிய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் எந்த முயற்சியும் இவர்கள் செய்ய வில்லை என்பதே உண்மை.
ஆரம்பகாலத்தில் RTM மட்டுமே மலேசிய தமிழ் சினிமாவை வாழ வைக்க கூடிய தளமாக இருந்தது. தொழில்நுட்ப காரணமாக நம்மாள் தியேட்டர் படங்கள் எடுக்க முடியாமல் போனது. தியேட்டர் படங்களுக்கு பெரிய பட்ஜெட், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழில் நுட்ப சாதனங்கள் பலவும் தேவைப்பட்டது. அப்போது அந்த வசதிகள் நம்மிடையே கிடையாது. ஆகவே சின்ன சின்ன டெலிமூவிக்கள் தயாரிக்கப்பட்டு RTM-இல் விற்க பட்டு வந்தது. பிறகு TV3-வும் தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் உள்ளூர் டெலிமுவிக்களை வாங்க தொடங்கினார்கள். 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது உள்ளூர் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காமல் போனது நமது தலை எழுத்து. சில Cari Makan Team-க்கள் RTM மற்றும்  TV3-வை தங்கள் கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு பணம் பார்த்து வந்தார்கள். புதிதாக யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் ‘பார்த்துக்’ கொண்டார்கள். நமது தமிழ் சினிமா வளர முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
Astro ஆரம்பித்த 97-ம் காலகட்டத்தில் நிலமை இன்னும் மோசமானது. மக்கள் RTM மற்றும் TV3 பார்க்கும் ஆர்வம் குறைந்து, ASTRO மட்டுமே பார்க்கும் மனநிலைக்கு வந்தார்கள். இதனால் TV3 சுத்தமாக உள்ளூர் படைப்புகள் வாங்குவதையும் ஒளிப்பரப்புவதையும் நிறுத்திக் கொண்டார்கள். 
RTM அரசாங்க டிவி என்பதால் வேறு வழி இல்லாமல் தமிழ் உள்ளூர் படைப்புகளை வாங்கி ஒளிப்பரப்பி வருகிறார்கள். இதுவும் இந்த ஆண்டில் நிறுத்தி வைக்க பட்டது. அந்த காரணத்தை நான் இங்கு எழுதினால், என்னை என்ன என்ன கெட்ட வார்த்தைகளில் திட்ட முடியுமோ அத்துனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டுவார்கள். திட்டினாலும் பராவாயில்லை. உதைக்க வருவார்கள்.
தொடரும்…………

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews