ஆஸ்ட்ரோ குறும்படம் போட்டியில் என்னை கவர்ந்த சில அம்சங்கள்.
1. ஏக்கம் – மிக கச்சிதமாக, நேர்த்தியாக படமெடுத்திருக்கிறார்கள். நாட்டு பற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒன்பது நிமிடம் மட்டும்தான். ஆனால், மனதைத் தொடும்படி மிக அழகாக தீபாவளியோடு இணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, Sound Design மிக நேர்த்தியாகவும் பாராட்டும்படியும் இருந்தது. பத்து குறும்படத்திலும் இது தனியாக தெரிவதற்கு மிக முக்கியமான காரணம்; நம் நாட்டின் மீது நமக்கிருக்கும் விசுவாசத்தை மையாக கொண்டது. சியர்ஸ் டீம்.
2. ரெக்கைக் கட்டி பறந்தோமே! – பிரிந்த நான்கு நண்பர்களைத் தேடி புறப்படும் ஒருவனின் கதை. சந்திக்க முடியாமல், மறக்க முடியாத ஒரு நண்பன் நம் வாழ்க்கையில் எப்போதும் இருப்பான். அந்த உணர்வுகளை நம்முள் கடத்திய அனுபவம் தந்தது இந்த படம். மேக்கிங்-யில் சில/பல குறைகள் இந்த படத்தில் தெரிந்தாலும்; நட்பின் உணர்வுகளை நம்முள் கடத்திய வகையில் இந்த குறும்படம் என்னை ஆட்கொண்டது. மிக இலகுவாக நாம் கதைக்குள் நுழைந்து விட்டதால், மற்ற எந்த குறையும் கண்ணுக்கு தெரியவில்லை. ஐவரில் ஒருவராக அடிதடி ரகளை செய்துக் கொண்டிருக்கும் முரட்டு கை திருமணமான பின்பு மனைவியிடம் அடிவாங்குவதை வாகனத்தில் பயணித்துக் கொண்டே சொல்லும் இடம் குபீர் சிரிப்பு.
3. தீ.பா.லி – மூன்று குட்டி பசங்க ஒன்றாக போட்டோ எடுக்க செய்யும் குறும்புதனங்களைக் கதையாக கொண்டது இந்த குறும்படம். படத்தின் காட்சியமைப்பு(Frame) கவரும் வகையில் இருந்தது. அந்த காட்சியமைப்புக்கு ஏற்ற வர்ணத்தை(DI) பின்புற காட்சியாக தேர்ந்தெடுத்தது படக்குழுவினரின் சென்ஸ் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தை(Location) தேர்ந்தெடுத்ததில் படக்குழுவினரின் மிக பெரிய வெற்றி. நான்கு சிறுவர்களை மட்டுமே திரையில் தெரியும்படி காட்டி படம் எடுத்தது நல்ல யுக்தி. படகில் படுத்துக் பேசிக் கொண்டிருக்கும் முதல் காட்சியே கவரும் வகையில் இருந்தது.
4. வந்தனா – மூன்று ஜோடிகள், மூன்று வெவ்வேறு கதைகள். ஆனால், மூன்று கதைகளுமே லாக்டவுனை மைய புள்ளியாக கொண்டு நகரும் கதை. மூன்று ஜோடிகளும் ஒரே இடத்தில் இருப்பது போல் காட்டி, படத்தின் திருப்பு முனையாக(Twist) ஆறுபேரும் வெவ்வேறு இடத்தில் இருப்பது போல் காட்டியது கவரும் வகையில் இருந்தது. இறுதியில், மூன்று ஜோடிகளும் சந்திக்கும்போது நாம்மையும் மீறி சிறு துளி கண்ணில் வந்து விடுகிறது. படத்தின் நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். லோகன் நடிப்பில் மிளிர்ந்து நிற்கிறார். சுவிட் ட்ரிம்ஸ் தொடங்கி இப்போது வரை லோகன் நடிப்பில் புள்ளிகளை அள்ளி விடுகிறார்.
5. மற்றப்படி; அனைத்து குறும்படமும் நன்றாகத்தான் இருந்தது. சில குறும்படங்களின் கதை நன்னெறி பண்புகளை மையமாக வைத்து கருத்து சொல்லும் வகையில் இருந்தது. அதுவும் ஒருவகை யுக்திதான்.
6. மகேந்திரன், இர்ஃபான் சைனி போன்ற பெரிய ஸ்டார்கள் நடித்த வரம் ஒரு அருமையாக கதைக்களம். Along the Gods போன்று புற/அக உலகைப் பற்றி பேசிக்கூடியது. ஆனால், மெதுவாக நகரும் கதையினாலும் நாம் பார்த்து பழகிய காட்சிகளாலும் இறுதியாக கருத்து சொல்லும் யுக்தியாலும் அந்த அற்புத கதைக்களத்தை மிஸ் பண்ணிட்டாங்க.
7. துர்கா – இந்த குறும்படம் எனக்கு பிடித்திருந்ததுதான். ஆனால், உருவாக்கத்தில் கண்ணுக்கு தெரியும் குறைகள் இருந்தது. திறம்பட திட்டமிட்டு படத்தை எடுத்திருந்தால் நம் நாட்டுக்கு லேடி ஸ்டார் படமாக இது வந்திருக்கும். விஜயசாந்தி வகை படங்கள் நம்மிடம் இல்லை. அந்த வகையில் இது அந்த இடத்தை பிடித்திருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்ஸு.
8. திருநாள் வியூகம், பாட்டி மூச்சு நின்னு போச்சு இரண்டும் காமேடி டிராக்கில் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். இதில் திருநாள் வியூகம் நம்மை ஓரளவு கவரும் வகையிலேயே உள்ளது. படுமோசம் என்று சொல்வதற்கில்லை.
9. வர்ணங்கள், தந்தைக்கு தலை தீபாவளி இரண்டும் ஓவர் செண்டிமெண்ட் வகை உணர்வை எனக்கு கொடுத்தது. பிழிந்து எடுத்து விட்டார்கள். தந்தைக்கு தலை தீபாவளியின் பிளஷ்பேக் பாராட்டும்படியும் மிக அழகாகவும் இருந்தது. சூரியன் மகேசன் தன் உடல் மொழியாலும் நடிப்பாலும் அந்த கணீர் குரலாலும் அசத்தி எடுத்து விட்டார். காட்சியமைப்பில் அந்த பிளஷ்பேக் ஒருவித புது அனுப்பவத்தைக் கொடுத்தது.
0 Comments