Saturday, 3 December 2022

டத்தோ ஸ்ரீ அன்வாரின் வெற்றி.

14 நவம்பர் 2022 எழுதிய பதிவு

1. நாட்டின் 15-வது பொதுத்தேர்தல் குறித்துப் பல ஆருடங்களும், கருத்துகளும், கருத்துக் கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய வண்ணமாக உள்ளன.

2. இந்தத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆவார் என்பது இன்றைய நாளில், ஏறத்தாள இறுதி நிலவரமாக உள்ளது. நாட்டின் 10-ஆவது பிரதமராக அன்வார் பதவி ஏற்பது இந்த முறை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்து விடும் என்றே யூகிக்க முடிகிறது.

3. டத்தோ ஸ்ரீ அன்வார் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆவார் என்பது எதன் அடிப்படியில் யூகிக்க முடிகிறது என்று பார்ப்போம்.

அன்வாரின் பலம்

1. இந்தத் தேர்தலில் யாருடைய உதவியும் இல்லாமல், தனித்துத் தன்னுடைய பலத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கிய தன்னம்பிக்கையே அவரின் முதல் வெற்றியாக அமைந்து விட்டது. 

2. அன்வார் தன் பெரும்பாலான நாள்களைச் சிறையிலேயே கழிக்க நேரிட்டது. தொடர்ந்து அவரைச் சிறையில் தள்ளி முடக்கி வத்தார்கள். 1998-ஆம் ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு; இரண்டு பொதுத் தேர்தலில்தான் அன்வார் தலைமையேற்றுப் போட்டியிட்டார். அந்த இரண்டு பொதுத் தேர்தலிலும் அன்வாரின் தனித்த பலம் நிரூபிக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சி ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டார்.

3. 1999-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்வாரின் சிறைவாசத்தை முழுமையாக அறுவடை செய்தது பாஸ் கட்சிதான். டி.ஏ.பி 10 தொகுதியிலும், கெஅடிலான் 5 தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஸ் கட்சி 27 தொகுதிகளில் அபார வெற்றி அடைந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் பாஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

4. போலிஸ் கஸ்டடியில் அன்வாரின் முகத்தில் ஏற்பட்டிருந்த காயத்தை தன் அனைத்துப் போஸ்டர்களிலும் போட்டு, Marketing Tools-ஆகப் பயன்படுத்தி பாஸ் கட்சி தனக்கு ஒரு பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொண்டது.

5. 2004-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அன்வார் சிறையில் இருந்தார். துன் மகாதீர் பதவி விலகி; படாவி தலைமையில் நடந்த முதல் தேர்தல் என்பதால், பாரிசான் மிக பெரிய வெற்றி அடைந்திருந்தது. பாஸ்+டி.ஏ.பி+பி.கே.ஆர் கூட்டணி மொத்தமாக 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

6. அடுத்து நடந்த 2008-ஆண்டு தேர்தல்தான் எதிர்க்கட்சிகளில் மகத்தான ஒரு தேர்தலாக அமைந்தது. பக்காத்தான் கூட்டணியை அன்வார் வழி நடத்தினாலும்; அந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் இருந்தார். அன்வார் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய கால அவகாசம் வருவதற்குள் தேர்தலை நடத்திவிட வேண்டும் எனப் பாரிசான் அவசரப்பட்டார்கள். 

7. பக்காத்தான் வெற்றி பெற்றாலும் அன்வார் பிரதமர் ஆகமுடியாத; நீதிமன்றத் தண்டனை முடிந்த கால கெடு இருந்தது. 2008-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று பாரிசான் மீது இருந்த கடுமையான வெறுப்பு; அடுத்தது இண்ட்ராப். 

8. 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பக்காத்தான் 82 இடங்கள் வெற்றி பெற்றதற்கு இண்ட்ராப் மிகப் பெரிய காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

9. 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்வார் முன்னிலை படுத்தப்பட்டாலும்; அவரின் பலம் நிரூப்பிக்கப் படவில்லை. நஜிப் பதவியேற்று நடந்த முதல் தேர்தலது. எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த கட்சிகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள காட்டிய முனைப்பை; அன்வாரின் பலத்தை அதிகரிக்கரிக்கவோ; நிரூப்பிக்கவோ முனைப்புக் காட்டவில்லை. அவரவர் அவரவரின்  கட்சிகளைத்தான் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதில் அவநம்பிக்கை இருந்தது.

10. 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முற்றிலும் வேறு மாதிரியானது. நம் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதிய திருவிழா. பாரிசான் மட்டுமே ஆட்சியில் அமரமுடியும் என்கிற விதியை மாற்றி எழுதிய தருணம். இது குறித்துத் தனி நீண்ட கட்டுரையே எழுதலாம். 

11. 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் அன்வார் சிறையிலிருந்தார். நஜிப் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார ஆணவம், பாரிசான் மீது இருந்த வெறுப்பு, துன் மகாதீரின் சாணக்கியம் எனப் பல காரணங்கள் இந்தத் தேர்தலில் முதன்மை வகித்தன.

12. 1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல் காலங்களில் அன்வார் சிறையில் இருந்தார். 2008-ஆம் ஆண்டு மற்றும் 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் காலங்களில் அன்வார் வெளியிலிருந்தாலும்; 2008-ஆம் ஆண்டு இண்ட்ராப் மற்றும் பெர்சே பேரணிகளும், 2013 நஜிப்பின் ஆதரவு அலையும் அன்வாரின் பலத்தை நிரூப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. 2018-ஆம் ஆண்டு அன்வார் அரசியல் மற்றும் தேர்தல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

13. ஆனால், இந்தத் தேர்தல் அப்படியில்லை. இது முழுக்க முழுக்க அன்வார் ஒருவரின் பலத்தால் நடக்கும் தேர்தல். அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்கிற மக்களின் எழுச்சியோடு நடக்கும் தேர்தல்.

14. பிற தேர்தல்களில் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. ஆனல், இந்தத் தேர்தலில் அன்வார் பிரதமர் ஆகியே தீர வேண்டும் என்கிற கோஷம்தான் எங்கும் கேட்கிறது. இந்த முறை டி.ஏ.பி, பி.கே.ஆர், அமானா கட்சிகளுக்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக விழும் ஒட்டுகள்.

15. பக்காத்தான் கூட்டணிக்காக அன்வாரை ஆதரிக்கவில்லை. அன்வாருக்காகப் பக்காத்தான் கூட்டணியை மக்கள் ஆதரிக்கிறார்கள். அன்வார் பிரதமராக வேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகப் பக்காத்தானுக்குக் கட்சி வேறுபாடின்றி ஓட்டுப். போட முடிவெடுத்திருக்கிறார்கள். 

16. மலேசிய வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனுக்காக ஓட்டு திரும்பி இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு நஜிப்-க்கு இந்த மாதிரியான அலை இருந்தது. ஆனால், நஜிப் பாரிசான் கூட்டணியை நம்பி இருந்தார். இந்த முறை அன்வார் கூட்டணியை நம்பி இருக்கவில்லை. மக்களின் அபிமான பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார்.

17. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட முதல் நாளே அன்வார் தடாலடியாகக் களத்தில் இறங்கினார். யாருக்கும் காத்திருக்கவில்லை. அன்வார்தான் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதி அறிக்கையையும் முதலில் வெளியிட்டவர் அன்வார்தான். முதல் தேர்தல் பிரச்சாரத்தையும் அவரே தொடக்கி வைத்தார். பிறகுதான் பாரிசான், பெரிக்காத்தான் கூட்டணிகள் களத்தில் இறங்கின.

18. இந்தத் தேர்தலில் அன்வார் மிகவும் சுறுசுறுப்பாகவும் பம்பரமாகவும் சுழன்று கொண்டிருக்கிறார். போகும் இடத்தில் எல்லாம் கூட்டத்தை கூட்டிக் கொண்டே போகிறார். அன்வார் கூட்டத்தில் இருக்கும் களை பிற கூட்டணிக் கூட்டங்களில் இல்லை. பக்காத்தான் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கூட்டத்தில்கூட அன்வார் இல்லாத மேடை பிரகாசம் குறைந்தே காணப்படுகிறது.

19. வழக்கமாகப் பக்காத்தான் கூட்டணியில் மற்றக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த முறை மேடையை தன் வசமாக்கிக் கொண்டுள்ளார் அன்வார். கூட்டணிக் கட்சிகளைத் தனக்குக் கீழ் கட்டுப்பட வைத்திருக்கிறார். இஃது அன்வாரின் தலைமைத்துவப் பண்பைக் காட்டுகிறது. ஒரு சிறந்த தலைவனுக்குத் தனக்குக் கீழ் உள்ளவர்களை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும். 

20. எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுவது, ரஜினி படம்போட்ட சட்டைகளைப் போட்டுக் கொண்டு வருவது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் மிகவும் நாகரீகமாக, பண்பாக ஒரு பிரதமருக்கு உரிய மரியாதையோடு மேடைகளில் வலம் வருகிறார். இந்த முறை அன்வாருக்கு யாரோ ஒருவர் பின்னாடி இருந்து கொண்டு நல்ல ஆலோசனைகள் வழங்கிக் கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

21. அன்வாரின் பலம் இந்த முறை அவர் வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

பாரிசானின் பலவீனம்

1. மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாரிசான் அடைந்த வெற்றியை மனத்தில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று கணித்திருக்கிறார்கள்.

2. வெள்ளம் ஏற்படக்கூடிய காலத்தில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தைக் கலைத்தது பாரிசானின் முதல் பலவீனமாக அமைந்து விட்டது. 

3. ஓட்டு சக்தியை வைத்திருக்கும் முக்கிய அம்னோ தலைவர்களுக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது பாரிசானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கைரிக்குப் பாரம்பரிய தொகுதியை வழங்காதது, சகிடான் காசிமுக்குச் சீட் வழங்காதது நிச்சயமாகத் தேர்தலில் பாரிசானின் ஓட்டைப் பெருமளவில் பாதிக்கும்.

4. வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட சலசலப்பும் தேர்தலில் பாரிசானின் வெற்றியைப் பாதிக்கும். பத்து தொகுதியில் ம.இ.காவுக்கும் ம.சீ.சாவுக்கும் ஏற்பட்ட மோதல் பிறகு பல தொகுதிகளிலும் எதிரொலிக்கும்.

5. தேர்தல் பிரச்சாரப் பதாகைகளில் பிரதமர் வேட்பாளரான டத்தோ ஸ்ரீ இஸ்மயில் சப்ரியை முன்னிலைப்படுத்தாமல், அம்னோ கட்சியின் தலைவர் சாயிட் அமிடியை முன்னிலைப்படுத்துவது பாரிசானுக்குப் பலவீனம்தான்.

6. ம.இ.கா தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகச் சொன்னது கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. இதுவும் பாரிசானுக்குச் சாதகமான ஒன்று இல்லை.

7. பாரிசானின் இந்தப் பலவீனத்தால் சிதறும் ஓட்டுகள் தான் ஸ்ரீ முகைடினின் பெரிக்காத்தான் நேஷனலுக்கு விழும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. அம்னோவின் எதிர்ப்பு ஓட்டுகளை இந்த முறை பெரிக்காத்தான் சிந்தாமல் சிதறாமல் அள்ளிவிடும் நிலமையே நிலவுகிறது. முகைதீன் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு முன்னேறி வருகிறார். 

8. பாரிசானின் ஓட்டுகள் உடைந்து பெரிக்காத்தானுக்குப் போகும் நிலையில்; பாரிசானும் வெற்றி பெற முடியாது பெரிக்காத்தானும் வெற்றி பெற முடியாது. இஃது அன்வாருக்கு மிகச் சாதகமான ஒன்று.

9. ஒட்டு மொத்தமாகத் தேசிய நிலையில் 10 முதல் 15 விழுக்காடு வரை அன்வாருக்குப் பிரதமருக்கான ஓட்டுகள் உயர்ந்துள்ள நிலையில்; பாரிசானின் பலவீனத்தால் சிதறும் ஓட்டுகள் பெரிக்காத்தானுக்குப் போகும் நிலையில்; ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பாரம்பரிய ஓட்டுகள் மூலம் அன்வார் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

இறுதியாக;

1. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 25 ஆண்டுகால பிரதமர் ஆகும் கனவு நினைவாகும் இந்த வேளையில், ஒரு சாதரண மலேசியக் குடிமகனாகச் சில கருத்துகளை அவருக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

2. முதலாவது; அன்வார் கண்டிப்பாகத் துணைப் பிரதமரை நியமிக்க வேண்டும். அஃது அமானா கட்சியிலிருந்து தேர்ந்தெடுத்தால் பெரும் பலமாக இருக்கும். 

3. இரண்டாவது; பக்காத்தானின் 22 மாத ஆட்சி காலத்தில் கெட்ட பெயரைச் சம்பாதித்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரக்கூடாது. நாட்டிற்கு தேவையான கெட்டிகாரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. மூன்றாவது; கட்சியில் தனக்கு உண்மையான விசுவாசிகள் யார் என்பதைக் கண்டு கொண்டு அவர்களுக்குத் தகுந்த மதிப்புத் தரவேண்டும். ரபிசி மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இன்னொரு அஸ்மின் உருவாவதைத் தடுக்க முடியாது.

5. நான்காவது; இது ரொம்பவும் முக்கியமானது. நிதித்துறை மற்றும் பொருளாதரத்துறை இரண்டையும் ஒன்றிணைத்து அதைத் தனக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பதவியையும் ஏற்க வேண்டும். 

6. படாவி, நஜிப், மீண்டும் துன் மகாதீர், முகைடின், இஸ்மயில் சப்ரி என அனைவரையும் இந்த நாடு பிரதமர்களாகப் பார்த்து விட்டது. அதனால், அன்வார் இந்தத் தேர்தலில் புதுமுகமாக/மறுமலர்ச்சி முகமாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

7. இந்தத் தேர்தலில் அன்வார் வெற்றி பெறப் போவது உறுதியான நிலவரமாக இருப்பதால், இந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு; நாட்டின் 10-வது பிரதமாராகப் பதவி ஏற்பது அவரின் பொறுப்பு.

8. இன ஒற்றுமையை மேம்படுத்தி பல்லினக் கட்சியின் தேவையையும்
அவசியத்தையும் நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும். இனரீதியான அரசியலுக்கு முற்றுப்புள்ளி இடுவதோடு, அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் மதம், மொழி, இனம் கடந்து நாட்டுநலனை முன்னிறுத்திச் செயலாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

9. இந்த ஒரு தவணை (5 ஆண்டுகள்) மட்டும் பிரதமராக இருந்து அடுத்த தலைமுறைத் தலைவரை அடையாளங்கண்டு வழிவிட்டு விலக வேண்டும். நம்பிக்கையுடன் இளையத் தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்! 

10. கல்வியியல் உருமாற்றம் நாட்டிற்கு மிகத் தேவையான ஒன்றென உணர்ந்து கல்விமுறை சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். எல்லாருக்கும் கல்வி என்பதோடு பாகுபாடின்றி கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாடத்திட்டம் மறுவாய்வுக்கு உட்படுத்தி வேலை சந்தைக்கு ஏற்ப கல்விமுறையும் நம் கிழக்கத்திய பண்பாட்டை வேரூன்றச் செய்யும் தொடக்கக் கல்விமுறையும் அமுல்படுத்த வேண்டும். வாழ்வியல் / பண்பியல் கல்விமுறை உருமாற்றத் தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

மதியழகன் முனியாண்டி
14 நவம்பர் 2022

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews