Saturday, 28 May 2022

பக்காத்தான் ஆட்சியில் கோவில்கள்

1. நமது நாட்டில் இருக்கும் கோவில்கள் குறித்தும் சமய அறிவு குறித்தும் நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டும் என்று எனக்கு பல நாட்களாக எண்ணம். ஆனால் என் கட்டுரைகள் மிக நீண்ண்ண்ட கட்டுரையாக இருப்பதாகவும் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் பலரும் அலுத்துக் கொள்கிறார்கள். ஆகவே நமது நாட்டில் இருக்கும் கோவில்களின் நிலைகளைப் பற்றியும், சமய அறிவு குறித்தும் பகுதி கட்டுரைகளாக எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். 

2. நமது நாட்டில் கோவில்கள் குறித்த விசாலமான பார்வை நமது இந்தியர்களிடையே துளியும் இல்லை. சமய அறிவும் குறைந்துக் கொண்டே வந்து; தற்போது சுத்தமாக மழுங்கி போய் உள்ளது. சமய அறிவு வளர்க்க வேண்டிய இந்து சங்கம் போன்ற அமைப்புகள் தேவாரப்போட்டி, வேட்டி அழகுராஜா, சேலை அழகு ராணி போட்டி நடத்துவதுதான் சமய அறிவின் உச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

3. இளைஞர்களுக்கு சமய அறிவை புகட்டவும் வளர்க்கவும் வேண்டிய இந்து இளைஞர் அமைப்புகள்; சமய அறிவை வளர்ப்பதைவிட மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

4. நமது நாட்டில் வாழும் இந்துகளுக்கு சமய அறிவு வளர்ப்பதில் ஏற்பட்ட தொய்வினால் பல விரும்பதகாத செயல்களும்; அறிவார்ந்த சமூகமாக உருவாவதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

5. பொதுவாக நமது நாட்டில் வாழும் தமிழர்களுக்கு கண்மூடித்தனமான பக்தியே மேலோங்கி நிற்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கையாக மாறிவருகிறது. மூட நம்பிக்கைக்கும் பக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் சிக்கிக் கொண்டோம்.

6. ஆரம்ப காலத்தில் நமது நாட்டில் இரண்டு விதமான கோவில்கள் இருந்தன. ஒன்று, எஸ்டேட் கோவிலக்ள். இரண்டு நகரவாழ் மக்களால் எழுப்பப்பட்ட கோவில்கள். 

7. நாம் பெரும்பாலும் எஸ்டேட்டில் வாழ்ந்த சமூகம் என்பதால் நமது பெருமைமிக்க பல கோவில்கள் எஸ்டேட்டின் எல்லைக்குள் இன்றும் நிலைத்து நிற்கிறது. எஸ்டேட்டில் பொதுவாக மாரியம்மன் கோவில்களும், எல்லையில் காவல் தெய்வமாக முனிஸ்வரன், முனியாண்டி போன்ற அய்யா கோவில்களும், காளியம்மன் கோவில்களும் இருக்கும். இவை தவிர சில புத்து கோவில்கள் இருக்கும். இது மனிதர்களுக்கும் பாம்புக்கும் இருக்கும் உறவை குறிப்பிடுவது.

8. நகரத்தில் பொதுவாக முருகன், சிவன், பெருமாள், விநாயகர் கோவில்கள் இருக்கும். இவைகள் பட்டணத்தில் வசித்த தமிழ்/இந்திய மக்களால் எழுப்பப்பட்டும் நிருவாகிக்கப்பட்டும் வந்தது. 

9. இது தவிர கம்பங்கள் உருவான போது; கம்பத்தில் கோவில்கள் கட்டிக் கொண்டார்கள். பொதுவாக உடைப்படும் கோவில்கள் அனைத்தும் கம்பத்தில் கட்டிக் கொண்ட தற்காலிக கோவில்களாகத்தான் இருக்கும்.

10. எஸ்டேட்டில் இருந்த கோவில்களுக்கு, தமிழ்ப்பள்ளிகள் போல் நிரந்தர இடம் ஒதுக்கி தரப்பட்டது. ஒரு சில எஸ்டேட்டில் மட்டும் வேறு மாதிரியான சூழல்கள் இருந்தது. நாட்டில் 99 விழுக்காட்டு எஸ்டேட் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சில இடம் மாற்றம் நிகழ்ந்தது. சில அதே இடத்தில் தொடர அனுமதி கொடுக்கப்பட்டது.

11. பட்டணத்தில் அமைந்த கோவில்கள் பொதுவாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டும்; திறமையான நிருவாகம் இருந்ததாலும் எந்த சிக்கலும் இல்லாமல் இப்போது வரை தொடர்ந்து அதே இடத்தில் இருந்து வருகிறது. சில மேம்பாடு காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

12. கம்பத்தில் குடியேறிய போது கட்டப்பட்ட கோவில்கள்தான் பெரும்பாலும் சிக்கலை ஏற்படுத்தியது. கம்பத்தில் கட்டப்பட்ட கோவில்கள் முறையாக கட்டப்படவில்லை. அதை முறையாக எங்கும் பதிவும் செய்யப்படவில்லை. இந்த கம்பத்து கோவில்களில் மஇகாவினர் புகுந்துக் கொண்டு செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பல கோவில்களின் நிலங்களை அவர்களே பறித்துக் கொண்டார்கள். அப்படி மஇகாவினால் ஏற்ப்பட்ட சிக்கல்தான் கம்போங் ஜாவா கோவில் பிரச்சனை. அது முழுக்க முழுக்க மஇகா செய்த கோளாறு. 

13. கம்பத்து கோவில்கள் குறித்து தனி நீண்ட கட்டுரை பிறகு எழுதுகிறேன்.

14. 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு நமக்கு வேறு சில சிக்கல்கள் வந்தது. அது Sdn.Bhd கோவில்கள். 2007-ஆம் ஆண்டில் நடந்த ஹிண்ட்ராப் பேரணியின் முக்கிய அம்சங்களில் ஒன்று கோவில் உடைப்பு. கோவில்கள் உடைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்ட வெறுப்பு இண்ட்ராப் பேரணியில் எதிரொலித்தது.

15. அதனை தொடர்ந்து 2008-ஆம் நடந்த பொது தேர்தலில் இரு மாநிலங்களில் பக்காத்தான் ஆட்சி அமைத்தது. கடந்த 10 வருட பக்காத்தான் ஆட்சி காலத்தில் சிலாங்கூரிலும் பினாங்கில் புதிது புதிதாக பல கோவில்கள் முளைத்தன. 

16. செடிக் நிதிக்காக NGO-க்கள் உருவானது போல்; பல இடங்களில் கோவில்கள் கட்டிக் கொள்ளப்பட்டது. பக்காத்தான் அரசும் இதை கண்டுக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டது.

17. இரண்டு விதமாக புது கோவில்கள் உருவானது. ஒன்று புறம்போக்கு, காலியான, யாரும் பயன்படுத்தாத இடங்களில் சில தங்கள் வியாபார வசதிக்காக கோவில்கள் கட்டிக் கொண்டார்கள். அந்த கோவில்களில் பொதுவாக தங்கள் வியாபாரம் சம்பந்தமான பொருட்களையோ அல்லது லாரி போன்றவைகளை நிறுத்தி வைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த கோவில்களுக்கு ஒரு எஜமானர் இருப்பார். அவரே நாட்டாமையாகவும் இருப்பார்.

18. இன்னொன்று, டாக்சி ஓட்டுபவர்கள், லாரி ஓட்டுபவர்கள் தங்கள் போர்ட்-க்கு பக்கத்தில் இருக்கும் மரத்தின் அடியில் சாமி சிலையை அல்லது படத்தை வைத்து கும்பிட்டு வந்தார்கள். கார் கழுபவர்கள் தங்கள் கார் கழுவும் இடத்துக்கு பக்கத்தில் சீன சாமி மேடை வாங்கி வைத்து, அதில் சாமி படம் வைத்து கும்பிட்டு வந்தார்கள். நாளடைவில் அதை கோவிலாக பிரகடப்படுத்தி திருவிழா, கெடா வெட்டுதல் என அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.

19. இது போன்ற கோவில்களில் நாலு நம்பர் கேட்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பல கோவில்களில் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை இரவுகளில் நம்பர் கேட்கும் சடங்களும் நடந்து வருகிறது. இதில் யாருக்காவது ஒருவருக்கு நம்பர் அடித்து விடும். உடனே சிமிண்டு போட்டு கல்லு கட்டி கோவிலாக உருவாக்கி விடுவார்கள்.

20. இது போன்ற கோவில்களில் சிலைகள் வைக்கும் முறையும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ரத்தம் சொட்ட சொட்ட கையில் மனித தலை, நாக்கு ஏழு முழத்துக்கு வெளியில் வந்து தொங்கிக் கொண்டிருக்கும், கையில் எம் 16 பிஸ்டலை தவிர அத்துனை ஆயுதங்களை வைத்திருக்கும். நமக்கே பார்ப்பதற்கு பயமாக இருக்கும்.

21. இது போன்ற பல கோவில்களில் பீர் போத்தல்கள் கொட்டிக் கிடக்கும். கோவிலில் உட்கார்ந்தே குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி குடித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சாமி வந்துவிடும்.

22. பக்காத்தான் அட்ட்சியில் கோவில்கள் மீது கை வைக்க கொஞ்சம் பயந்தார்கள். பாரிசான் ஆட்சி காலம் போல் அல்லாமல், பக்காத்தான் ஆட்சியில் கோவில்களை உடைப்பதற்கு கொஞ்சம் யோசித்தார்கள். இது நம்மவர்களுக்கு சாதமாக போய் விட்டது.

23. மூலைக்கு மூலை, மரத்துக்கு மரம், முச்சந்திக்கு முச்சந்தி கோவில்களை கட்டிக் கொண்ட பலரும் அதற்கு ஓனர்கள் ஆனார்கள். அப்படியும் இது போன்ற கோவில்கள் மீது கை வைக்க பக்காத்தான் ஆட்சியில் முயன்ற போது ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து கலாட்டா செய்தார்கள். இவர்களை அடக்கவும் தடுக்கவும் முடியாமல் போய் விட்டது. இதற்கெல்லாம் என்ன முடிவு என்று தெரியாமல் பக்காத்தான் அரசு மட்டும் அல்ல தமிழ் சமய ஆர்வலர்களும் குழம்பிப் போய் உள்ளார்கள்.

24. இந்த சமயத்தில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் நாடு தழுவிய நிலையில் இந்து சமய வாரியம் அமைப்பது குறித்து அலோசனை தெரிவித்திருப்பது கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

25. இந்து சமயத்திற்கான அரசாங்க வாரியம் அமையும் போது கோவில்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாட்டில் சமய வளர்ச்சி ஏற்படுவதோடு தமிழர்களின் கௌரவமும் நிலை நிறுத்தப்படும். 

26. புதிது புதிதாக கோவில்கள் உருவாகாது. பிறகு அந்த கோவில்களை உடைக்க வேண்டிய அவசியமும் உருவாகாது. கோவில் நிருவாகங்கள் தனிமனித எஜமான தனத்திலிருந்து விடுப்பட்டு முறையாக நிருவாக குழு அமைவதற்கான சூழல் ஏற்படும்.

27. கோவில்களை முறைகேடாக பயன்படுத்துவதும், சுய தேவைக்கானவும், Sdn Bhd கோவில்களும் தடைசெய்யப்படும். கோவில்கள் ஒரு ஒழுங்கு முறையின் கீழ் இயங்கும் உன்னத நிலை ஏற்படும்.

28. நமது நாட்டில் தமிழ் மக்களின் எண்ணிக்கையைவிட கோவில்கள்தான் அதிகமாக இருக்கிறது. அதைவிட இது போன்ற கோவில்கள் முறையாக பராமரிக்கவும் படுவதில்லை. பல வேளைகளில் பல இன மக்கள் வாழும் நாட்டில்; மற்ற இனங்களின் முன் அவமானம் படும்படியே ஆகிறது. 

29. பீர் பாடிலை முதுகில் குத்திக் கொண்டும், சுருட்டை கடித்து துப்பிக் கொண்டும் நாம் ஆடிக் கொண்டிருப்பது நமது சமூகத்தின் சமூக விழிப்புணர்வை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

30. எப்படி யோசித்து பார்த்தாலும் கோவில்களுக்கு வாரியம் அமைப்பது மிக அவசியமானது. காலத்திற்கு உகந்தது. காலத்தின் கட்டாயம். நம் சமூகத்தை நாம் சுய பரிசோதனை செய்துக் கொள்வதற்கு இது அவசியம். இந்து சங்கம் போன்ற அமைப்புகளின் எதிர்ப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு; சமூதாய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம். அத்தியவாசியம்.

31. கோவில்களுக்கு வாரியம் அமைப்பதை யார் எதிர்ப்பார்கள் என்றால்; கோவில்கள் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள், கோவில் நிலங்களையும் தளங்களையும் முறைகேடாக பயன்படுத்துபவர்கள், தவறான போதனை செய்கிறவர்கள், நமது தமிழர் பண்பாடு சமய அறிவு இல்லாதவர்கள். இவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளவே கூடாது. இடித்து தள்ளிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

32. நமது நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு வாரியம் அமைவதால் என்ன நன்மைகள் ஏற்படும்? கோவில் உடைப்புகள் ஏன் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான கோவில்களைக் கட்டிக் கொள்வதால் சமய அறிவு வளர்ந்து விடுமா? அதிகமான கோவில்கள் கட்டிக் கொள்வதால் யாருக்கு ஆதாயம்? போன்ற கேள்விகளுக்கு தனி நீண்ட கட்டுரை அடுத்த பகுதியில்.

20 மே 2018

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews