மஇகா என்கிற புரோக்கர்
1. நடந்த முடிந்த 14-வது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் மஇகாவைப் பற்றியும் மஇகாகாரர்கள் குறித்தும் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம் அது செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம். மேலும் தோல்வி அடைந்தவர்களை எள்ளி நகையாடுவது தமிழர் பண்பாடு இல்லை என்று கருதினேன்.
2. ஆனால் இரண்டு நாள்களாகச் சில வாட்சாப் குரல் பதிவுகளும், ஃபேஸ்புக் கருத்துகளும் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. முக்கியமான இரண்டு வாதங்களை மஇகா சார்ந்தவர்கள் முன் வைக்கிறார்கள். ஒன்று, மஇகாவை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டீர்கள். இனி இந்தியர்களின் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள்? இந்தியர்களின் பிரச்சனையை யாரிடம் கொண்டு செல்வீர்கள்? இரண்டு, தமிழ்ப்பள்ளிகளுக்கு யார் உதவி செய்யப் போகிறார்கள்? இந்த நாட்டில் இருக்கும் கோவில்கள், தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகளைக் களைவதற்குச் சரியான வழிகள் (சேனல்கள்) இல்லாமல் போய்விட்டது.
3. மஇகா இதுவரை செய்து வந்தது முகவர் (புரோக்கர்) தொழில். அதில் நல்ல இலாபமும் பார்த்தார்கள். நம் மொத்த இனத்தையும் அடகு வைத்துக் கணக்கைக் காட்டி மஇகாவினர் சம்பாதித்து வந்தார்கள். நம் நாட்டில் வாழும் இந்தியர்கள், மஇகாவின் முதலீடு. நம் இந்திய மக்களின் கணக்கைக் காட்டி நிதியை வாங்கினார்கள். நமக்குச் சேர வேண்டியதை நடுவில் நின்று அபகரித்துக் கொண்டிருந்தார்கள். இனி அப்படி இல்லாமல் நமக்குச் சேர வேண்டியது, நடுவில் எந்தப் புரோக்கர் கும்பலும் இல்லாமல் நேரடியாக வந்து சேரப் போகிறது.
4. பாரிசான் ஆட்சி காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவை என்றால் மஇகாவிடம் போய் நிற்க வேண்டும். சிகப்பு ஐசி பிரச்சனை என்றால் மஇகாவிடம் போய் நிற்க வேண்டும். கல்வி நிதி வேண்டும் என்றால் மஇகாவிடம் போய் நிற்க வேண்டும். மலிவு விலை வீடு (Rumah Kos Rendah) வேண்டும் என்றால் மஇகாவிடம் போய் நிற்க வேண்டும். அவர்கள் எடுத்துக் கொண்டது போக, மீதம் உள்ளதை, எலும்பு துண்டுகளாக நமக்கு பிச்சை போடுவார்கள். அதைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். எல்லா நிலையிலும் நம்மைக் கையேந்தும் நிலையிலேயே வைத்திருந்தார்கள்! நாமும் தொட்டதற்கெல்லாம் அவர்களிடம் கையேந்தியே வாழ வேண்டி இருந்தது. இந்நிலைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
5. நமது நாட்டில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி பக்காத்தான் அரசாங்கத்தால், பினாங்கில் கட்டுவதற்கு இருந்தார்கள். ஆனால் அப்போதைய மத்திய பாரிசான் அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. நமது நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மஇகா என்கிற புரோக்கர் தேவை இல்லை. மஇகா என்கிற புரோக்கர் இல்லாமல் நமக்கு ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி கிடைக்கும்.
6. மலேசியாவில் முதல் தங்குமிடத் தமிழ்ப்பள்ளி (Sekolah Berasrama Tamil) சிலாங்கூரில் அமையவிருந்தது. பக்காத்தான் அரசாங்கத்தால் 40 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அப்போதைய பாரிசான் அரசாங்கத்தில் துணைக் கல்வி அமைச்சராக இருந்த, மஇகாவைச் சேர்ந்த கமலநாதன் தடுத்தார். நமக்குத் தங்குமிடத் தமிழ்ப்பள்ளி அமைவதற்கு மஇகா என்கிற புரோக்கர் தேவை இல்லை.
7. கடந்த தவணைகளில் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பக்காத்தான் ஆட்சியில் நமக்குப் பல சலுகைகளும் நிதி ஒதுக்கீடுகளும் கிடைத்தன மஇகா என்கிற புரோக்கர் இல்லாமல். அந்நிதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் பல இடையூறுகளை விதித்திருந்தனர் மஇகாவினர். தமிழ்ப்பள்ளிகளுக்கு பக்காத்தான் அரசால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைப் பள்ளிகள் வாங்கக்கூடாதெனவும், முன்னாள் துணை கல்வி அமைச்சர் கமலநாதனும் அவரின் உதவியாளர் யுவராஜாவும் சேர்ந்துக் கொண்டு தடுத்தனர்.
8. தமிழ்ப்பள்ளிகளுக்கு 1 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் நஜிப், சுகாதார முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்ரமணியம், கல்வித்துறை முன்னாள் துணையமைச்சர் கமலநாதன் அறிக்கை மட்டுமே கொடுத்தார்கள். ஆனால் இன்று வரை அவ்வளவு பெரிய தொகை 524 தமிழ்ப்பள்ளிகளுக்கு வந்து சேரவே இல்லை. இது குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தீவிர விசாரணை செய்து உண்மையைப் கண்டுபிடிக்க வேண்டும்.
9. தமிழ்ப்பள்ளிகளுக்கு 1 பில்லியன் ரிங்கிட்(ஆயிரம் லட்சம்/RM 1 Billion) ஒதுக்கிய அதிகாரப்பூர்வத் தகவலை நாடாளுமன்றத்தில் கமலநாதனும், பல மேடைகளில் நஜிப்-பும் டத்தோ சுப்ராவும் சொல்லி வந்தார்கள். இந்தச் செய்தி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வந்தது. இதுவே போதுமான ஆதாரம்.
10. மஇகா என்கிற புரோக்கர்கள் இப்படித்தான் நமது சமூகத்துக்கு வர வேண்டிய நிதிகளை நடுவில் நின்று அபகரித்துக் கொண்டார்கள்.
11. இன்னும் நிறைய உதாரணங்களையும் ஆதரங்களையும் நாம் இங்கே அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அந்த ஆதாரங்களை எல்லாம் பட்டியலிட இந்த ஒரு கட்டுரை போதாது. ஆனாலும் ஒரு சின்ன உதாரணம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
12. பெற்றோர்களும் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்யலாம் (IMPAK) என்கிற தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டத்தைத் தமிழ் அறவாரியம் பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசாங்கம் நிதி ஒதுக்கிக் கொடுத்தது, மஇகா என்கிற புரோக்கர் இல்லாமல்.
13. இந்தத் திட்டத்தின் பயனையும் நன்மையையும் கண்ட என்.எஸ்.ராஜேந்திரன், 2015-ஆம் ஆண்டு சில லட்சங்களை ஒதுக்கிக் கொடுத்தார். ஆனால் 2017ஆம் ஆண்டில் நிதி கொடுக்கவில்லை. காரணம், என்.எஸ்.ராஜேந்திரன் கொண்டு வந்த இருமொழித் திட்டத்தைத் தமிழ் அறவாரியம் எதிர்த்தது என்பதே காரணமாகத் தெரிகிறது.
14. இன்னொரு காரணமும் இருந்தது. என்.எஸ்.ராஜேந்திரன் செடிக் மூலம் பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளில் என்.எஸ்.ராஜேந்திரனின் போட்டோவை பெரிய அளவில் போட வேண்டும். மேடையில் மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி புகழ்ந்து பேச வேண்டும். தமிழ் அறவாரியம் இதை செய்யவில்லை.
15. மஇகா உதவி இல்லாமல் தொடர்ந்து பல வருடம் இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் நடந்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் செடிக் மூலம் என்.எஸ்.ராஜேந்திரன் பணம் கொடுக்கவில்லை என்றாலும் இந்த திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மஇகா என்கிற புரோக்கர் இல்லாமல் இது போன்ற நல்ல திட்டங்களைத் தமிழ்ப்பள்ளிகளில் நிறைவேற்ற முடிகிறது.
16. மஇகா மற்றும் என்.எஸ்.ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட அரசு சார்ந்த இயக்கங்களுக்கு(NGO) மட்டுமே செடிக் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. செடிக் என்பது முன்னாள் பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டாலும், மஇகா என்கிற புரோக்கர்கள் கைக்காட்டும் NGO-க்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இது குறித்துக்கூட நீண்ட கட்டுரை எழுதலாம். பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.
17. பக்காத்தான் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் மாநில அரசு சார்ப்பில் நிதிகள் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்தியர்களின் பிரச்சனைகள் கவனிக்கப்பட்டும் வந்தது மஇகா என்கிற புரோக்கர் இல்லாமல்.
18. மஇகா என்கிற புரோக்கர் செடிக் மூலம் பல மில்லியன் நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். செடிக் குறித்து மலேசிய ஊழல் ஆணையம் (SPRM) தீவிர விசாரணை செய்து உணமைகளைக் கண்டுபிடித்து தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். இது இப்போது துன் மகாதீர் தலைமையில் அமைந்த பக்காத்தான் ஆட்சியின் முக்கிய கடமைகளில் ஒன்று.
19. 14-வது பொது தேர்தலில் படுதோல்வியை அடைந்துள்ள மஇகாகாரர்கள் தங்கள் பலவீனத்தையும், தவறுகளையும் மறைப்பதற்கு இது போன்ற ஆடியோக்களையும் செய்திகளையும் மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார்கள்.
20. மஇகா இல்லை என்றால் நம் இந்தியர்களுக்கு எதுவும் கிடைக்காது; நமது பிரச்சனையை தீர்க்க கூடிய சேனல் மஇகா என்கிற மாயையையும் போலித் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். இப்படியோர் அச்ச உணர்வை மக்களிடம் தூண்டி, இதுவரை மஇகா செய்து வந்துள்ள ஊழல்கள், தவறுகள், அதிகார துஷ்பிரயோகத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.
21. மஇகா இதுவரை அடித்த கொள்ளை பணத்தைத் திருப்பிக் கொடுத்தாலே போதும், இன்னும் ஆயிரம் தமிழ்ப்பள்ளிகளும், ஒரு லட்சம் தொழில் முனைவர்களையும் உருவாக்கலாம். காரணம் அது நம் பணம். மக்களின் பணம்.
22. மஇகா இதுவரை செய்து வந்தது புரோக்கர் தொழில். இவை சமீப காலத்தில் மஇகா செய்து வந்த சாதனைகளில் சில. துன் சாமிவேலு காலத்திலிருந்து ஆய்வு செய்தால் மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். இன்றைய ஆட்சி மாற்றம் நம்மினத்திற்கு நன்மையை நிச்சயம் கொண்டுவரும்! இனி நம் உரிமைகளை நாமே அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் நிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
12 மே 2018
0 Comments