ஆட்சி மாற்றம் பகுதி 1
1. நமது நாடு 1957-இல் சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடைந்த போது பாரிசான் கூட்டணி நாட்டை ஆட்சி செய்து வந்தது. அது முதல் நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவே இல்லை. பாரிசான் கூட்டணி தொடர்ந்து நமது நாட்டை பல்வேறு தலைமையின் கீழ் ஆட்சி செய்து வந்தது. மலேசியா என்றால் பாரிசான். பாரிசான் என்றால் மலேசியா. 60 ஆண்டுகளாக ஒன்றை ஆட்சியில் மலேசியா தொடர்ந்து நகர்ந்துக் கொண்டே வந்தது.
2. 2013-ஆம் ஆண்டில் நடந்த 13-வது பொது தேர்தலின் போது ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டும் அது நடக்காமல் போனது. 13-வது பொது தேர்தலில் அன்வார் இப்ராஹிம் தலைமையில் பக்காத்தான் ரக்யாட் அணி, பாரிசான் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டது.
3. வழக்கம் போல் அம்னோவே 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 13-வது பொது தேர்தலில் பாரிசான் கூட்டணியை தலைமை தாங்கியது. அம்னோவின் தலைவராகவும், பாரிசான் கூட்டணியின் தலைவராகவும் நஜிப் துன் ரசாக் தலைமையில் எதிர்கொண்ட முதல் பொது தேர்தல் அது.
4. 13-வது பொது தேர்தலில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அன்வார் இப்ராஹிமின் தலைமையில் அமைந்த பக்காத்தான் ரக்யாட் முன்னணியில் இருந்தது. பல இடங்களில் பக்காத்தான் ரக்யாட் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற(Unofficial) முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தது.
5. இரவு மணி 12-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. தேர்தல் ஆணையம்(SPR) அதிகாரபூர்வமாக தன் முடிவை அறிவிக்கவில்லை. ’நாங்கள்(பக்காத்தான் ரக்யாட்) வெற்றி பெற்றும் விட்டோம். எங்கள் வெற்றியை அபகரித்துக் கொள்ளாதீர்கள்’ என அன்வார் இப்ராஹிம் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
6. மறுநாள் காலையில் மாட்சிமை தங்கிய பேரரசரை சந்திக்க போவதாக அன்வார் அதிகாரபூர்வமாக அறிவித்தார். நள்ளிரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது வரை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நள்ளிரவு இரண்டு மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணிக் கொண்டிருந்த பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
7. ஓட்டு எண்ணிக் கொண்டிருந்த பல இடங்களில் சச்சரவுகள் வெடித்தது. நாடே பரப்பரப்பானது. விடியற்காலையில் நான்கு மணிக்கு பிறகு எல்லாம் தலைகீழ் ஆனது. வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் முன்னணியில் இருந்த பக்காத்தான் ரக்யாட் கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டது. பாரிசான் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
8. மறுநாள் காலை(6 மே 2013) 8.20-க்கு நஜிப் துன் ரசாக் பேரரசரை சந்தித்து தன் வெற்றியை உறுதி செய்து, அன்று மாலை 4.07-க்கு பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். எல்லாமும் சுபமுமாக நடந்தது. நாடு வழக்கம் போல் தன் இயல்வு நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
9. அனைத்துலக நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக அன்வார் அறிவித்தார். உலக முழுவதும் உள்ள மீடியாக்கள் பாரிசானின் வெற்றியை குறித்தும் அன்வாரின் தோல்வியையும் குறித்தும் பல்வகையான ரியாக்ஷனை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
10. அந்த சமயத்தில் வெளிநாட்டு பத்திரிக்கையில் கார்ட்டூன் ஒன்று வந்திருந்தது. குத்து சண்டை போட்டியில் நஜிப் பலமான அடிவாங்கி சோர்ந்து போயிருப்பது போலவும், அன்வார் பலமாக இருப்பது போலவும், நடுவர் வீங்கி போயிருக்கும் நஜிப்பை வெற்றியாளராக அறிவிக்கும் பொருட்டு நஜிப் கையை பிடித்து உயர்த்திக் கொண்டு நிற்பது போல பிரபலமான அந்த கார்ட்டூன் அனைத்து மீடியாவிலும் உலா வந்தது.
11. ஆங்காங்கே கொஞ்சம் சலசலப்பு. ஒரு மாபெரும் பேரணியை நடத்த போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பக்காத்தான் தோல்வியை ஒப்புக் கொண்டது போல் அமைதியானார்கள். எல்லாமும் இயல்பு நிலைக்கு திரும்பியது. அவரவர் வேலையை அவரவர் பார்க்க போய் விட்டார்கள். பாரிசான் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
12. இந்த சம்பவத்துக்கு பிறகு நமது நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும் பாரிசான் கூட்டணியே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று நம்பினார்கள். எதிர்கட்சிகள் 200 இடங்கள் வரை வெற்றி பெற்றாலும் நமது நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்கவே நடக்காது என்று எல்லோரையும் நம்ப வைக்கப்பட்டார்கள்.
13. என்ன நடந்து என்ன பயன் நமது நாட்டில் கடைசி வரைக்கும் பாரிசான்தான் ஆட்சியில் இருக்கும். மின்சாரத்தை துண்டித்து, விளக்கை அணைத்து, பெட்டிகளை மாற்றி தேர்தல் முடிவுகளை மாற்றலாம் என்கிற எண்ணத்தை ஆழமாக விதைத்தார்கள்.
14. அப்படியும் ஓட்டுக்களை மாற்றி வெற்றியை தற்க வைத்து கொள்ள முடியாவிட்டால், 1969-ஆம் ஆண்டில் நடந்தது போல் பாதுகாப்பு மன்றத்தை(MKN)Majlis Keselematan Nagara) தோற்றுவித்து தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற பாரிசானின் வியூகத்தை மக்கள் மத்தியில் பேசி வந்தார்கள். இதனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் பெரிதும் விரும்பவில்லை என்றில்லை, அது நடக்காது என்று நம்பினார்கள்.
15. ஆட்சி மாற்றம் நடக்காது என்று நம்பிய மக்களுக்கு ஆட்சி மாற்றத்தை பற்றி யோசிப்பதற்கும் பேசுவதற்கும் சோம்பலாக இருந்தது. ஆகையால் யாரும் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்க்கவில்லை.
16. மலேசிய மக்கள் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைவரின் கணிப்பையும் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கி மலேசியாவில் சரித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆட்சி மாற்றம். மலேசியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்துள்ளது என்பதனை இன்னும் சிலரால் நம்ப முடியாமல் தங்களையே கிள்ளி பார்த்துக் கொள்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு நடக்காத ஆட்சி மாற்றம் 2018-இல் நடந்தது. முதல் முறையாக.
17. மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நடக்க இயலாத காரியம் என்று உலகம் முழுவதும் ஒரு பார்வை உண்டு. தற்போது மலேசியாவில் ஏற்படுள்ள இந்த மாற்றம், தென்கிழக்காசியா நாடுகளின் மிக முக்கியமான இந்த நூற்றாண்டின் நகர்வு. இதன் தாக்கம் இங்குள்ள பிற நாடுகளின் போக்கும் அரசியலும் மாற்றவல்லது.
18. இந்த 14-வது(2018) பொது தேர்தலில் பல புதுமைகளும் அதிசயங்களும் நடந்தன. மலேசிய வரலாற்றில் பல விநோத சம்பவங்கள் நடந்தது. அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்றத்தை கலைத்தது, புதன்கிழமையில் தேர்தலை அறிவித்து, பிறகு பொது விடுமுறையாக அறித்தது.
19. தேர்தலுக்கு அடுத்த இரண்டு நாட்களை கூடுதல் விடுமுறையாக துன் மகாதீர் அறிவித்தது, தேர்தல் தினத்தன்று பேரரசரின் வெளிநாட்டு பயணம் இப்படியாக பல சம்பவங்கள் நடந்தது. இவை அனைத்தும் காலத்தால் மறக்கடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மாற்றத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை இந்த கட்டுரையின் வழி தொகுத்துள்ளேன்.
20. எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பலவித ஆருடங்கள் நடந்துக் கொண்டிருந்த வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஏப்ரல் 6, 2018 அன்று காலை சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
21. நாடாளுமன்ற கலைப்பது குறித்த இந்த அறிவிப்பை செய்யும் போது முன்னாள் துணை பிரதமர் மற்றும் பாரிசான் கூட்டணி தலைவர்கள் நஜிப் பின்னால் நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருடைய முகத்திலும் சந்தோசம் இல்லை. சாவு வீட்டில் இழவு செய்தி சொல்வது போல் எல்லோரும் மிகவும் கவலையும் பீதியும் கொண்டு இருந்தார்கள்.
22. பொதுவாக நாட்டின் பிரதமர் மாமன்னரை சந்தித்து அனுமதி வாங்கி விட்டு, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு செய்வது என்பதுதான் நமது நாட்டின் வழக்கமாக இதுவரை நாள் வரை இருந்து வந்தது. ஆனால் மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக நாடாளுமன்றம் கலைக்க போவதாக முன் கூட்டியே அறிவித்தார் நஜிப்.
23. சனிக்கிழமை(7 ஏப்ரல் 2018) நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக வெள்ளிகிழமை(6 ஏப்ரல் 2018) காலையில் அறிவித்தார் நஜிப். அறிவிப்பை செய்துவிட்டு மாமன்னரை சந்திக்க சென்றார். இது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தையும் கேள்வியையும் எழுப்பியது. ஏன் நஜிப் இப்படி செய்தார் என்கிற கேள்விக்கு இப்போது வரை பதில் இல்லை.
24. இந்த அறிவிப்புக்கு பிறகு நாடு பரபரப்பானது. தேர்தல் காய்ச்சல் ஒட்டிக் கொண்டது. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சுறுசுறுப்பானார்கள். எங்கும் தேர்தல் குறித்த பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திகதி குறித்த அறிவுப்புக்கு எல்லோரும் காத்திருந்தார்கள்.
25. 10 ஏப்ரல் 2018 அன்று தேர்தல் ஆணையம் 9 மே 2018-ஆம் திகதியை தேர்தல் தினமாக அறிவித்தது. மே 9-ஆம் திகதி புதன்கிழையில் வந்தது. வேலை நாளில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாட்டில் கொந்தளிப்பு எற்பட்டது. புதன்கிழமை வேலை நாளில் தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு பல வகையில் இடையூறு ஏற்படும் என கருத்துகள் வலுக்க தொடங்கியது.
26. நமது நாட்டில் துங்கு அப்தூல் ரஹ்மான் காலத்திலும் துன் அப்தூல் ரசாக் காலத்திலும் வேலை நாட்களில் தேர்தல்கள் நடந்துள்ளது. தேர்தலுக்கு முழுநாள் விடுமுறை கொடுக்க மாட்டார்கள். நேர விடுப்பு எடுத்துக் கொண்டு, ஓட்டு போட்டு விட்டு மீண்டும் வேலைக்கு வந்துவிட வேண்டும்.
27. துன் மகாதீரின் முதல் ஆட்சி காலத்தில்(1981-2003) திங்கட்கிழமைகளில் இரு முறையும், வியாழக்கிழமை ஒரு முறையும் தேர்தல் நடந்துள்ளது. ஆனால் வியாழகிழமையும் திங்கட்கிழமையும் வார இறுதி நாட்களோடு இணைந்து வரும் நாட்களில் தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்காது. துன் மகாதீரின் முதல் ஆட்சி காலத்தில் அப்படித்தான் நடக்கும்.
28. பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திரங்கானு, ஜொகூர் போன்ற மாநிலங்களில் வெள்ளி மற்றும் சனி வார இறுதிநாட்கள். இந்த மாநிலங்களுக்கு வியாழக்கிழமை வார இறுதி நாட்களோடு இணைந்து வரும் நாள். மற்ற மாநிலங்களில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்கள். திங்கட்கிழமை பிற மாநிலங்களுக்கு வார இறுதி நாட்களோடு இணைந்து வரும் நாள்.
29. இங்கிட்டும் அல்லாமல், அங்கிட்டும் அல்லாமல் புதன்கிழமை நடுவில் வந்து சிக்கிக் கொண்டது. சிங்கப்பூர் மற்றும் பிற மாநிலங்களில் வேலை செய்யும் வாக்காளர்களுக்கு இது நிச்சயம் அசௌகரியத்தை கொடுக்கும். இதனால் ஓட்டு போடும் வாக்காளர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறையும் என்று எல்லா தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுக்க தொடங்கியது.
30. புதன்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவிக்க கோரி மாமன்னருக்கு மகஜர் ஒன்று சமர்பிக்கும் நோக்கில் இணையத்தில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை ஆரம்பமானது. பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக, வேறு வழி இல்லாமல் 9 மே 2018 தேர்தல் தினத்தை பொது விடுமுறையாக பிரதமர் துறை அலுவலகம் அறிவித்தது.
31. துன் மகாதீரின் பக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் வியாழனும் வெள்ளியும் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என துன் மகாதீர் அறிவித்தார். புதன்,வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு என ஐந்து நாட்கள் நீண்ட விடுமுறை எல்லோரையும் குதூகளப்படுத்தியது. வாக்காளர்கள் மத்தியில் உற்சாகம் பெருக தொடக்கியது. நாடே திருவிழா கோலம் பூண்டது.
32. பிரச்சார கூட்டமும், தேர்தல் பரப்புரைகளும், வேட்பாளர்கள் அறிமுகமும், துண்டு பிரச்சாரங்களும், போஸ்டர்களும் பேனர்களும் எங்கும் பறக்க தொடங்கியது. புதிதாக முளைத்த இணைய ஊடகங்களான வாட்சாப், ஃபேஸ்புக், டிவிட்டர் என எங்கும் தேர்தல் செய்திகளும் வைரல்களும் சூடுபறக்க பகிரப்பட்டது. பாரிசான் ஆட்சியில் பொது ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அதனால் பக்காத்தானின் முக்கிய பிரச்சாரம் இணைய ஊடங்களில் பரப்பப்பட்டது.
33. பாரிசானின் பிரச்சார செய்திகள் டிவி நிறுவனங்கள் மற்றும் அச்சு பத்திரிக்கைகளின் வழி பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்காத்தான் ஃபேஸ்புக் லைவ், வாட்சாப் வழியாக மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
34. இதற்கிடையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பதிவை தேசிய பதிவு இலாகா(ROS) Registerar of Society) நிராகரித்தது. இதனால் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை பதிவி செய்ய முடியாமல் போனது. இது பக்காத்தான் கூட்டணி கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது. ROS-இன் இந்த முடிவினால் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் பிகேஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட ஒருமனதாக முடிவு செய்தார்கள்.
35. தீபகற்ப மலேசியாவில் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற்ற பெரிபூமி, பிகேஆர், டிஏபி மற்றும் அமானா நான்கு கட்சிகலும் பி.கே.ஆர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.
36. சபா மாநிலத்தில் ஷபி அப்டாலின் சபா வாரிசான் கட்சி ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அவர்கள் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே சபாவில் போட்டியிட்டனர். சரவாக் மாநிலத்தில் ஹரப்பான் கூட்டணி முழுமை பெறாமல் இருந்ததால், பாரிசான் கூட்டணியை எதிர்த்த கட்சிகள் அவரவர் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
37. இந்த தேர்தலில்(2018) பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியை தடுப்பதற்கு நஜிப் பல குறுக்கு வழிகளை கையாள்வார் என துன் மகாதீர் பொதுவில் குற்றம் சாட்டினார். பக்காத்தான் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு, கள்ள ஓட்டு, Undi Pos-களில் சதி, ஓட்டு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லுகள் செய்வது என பல காரியங்களை செய்து நஜிப் இந்த தேர்தலில் பக்காத்தானின் வெற்றியை தடுக்கப் பார்க்கிறார் என தொடர்ந்து குற்றசாட்டி வந்தார்.
38. மகாதீர் குறிப்பிட்டது போலவே, வேட்பு மனு தாக்கல் தினத்தின் போது பல இடங்களில் தில்லுமுல்லு சம்பவங்கள் நடந்தது. தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாக நடந்துக் கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆறு இடங்களின் பக்காத்தான் ஹராப்பானின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பத்து, பெனாகா, ரந்தாவ், புக்கிட் பாசிர், தவாங், கோல பாலா ஆகிய இடங்கள் ஆகும். மூன்று இடங்களில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் திவாலானவர்கள் என்றும், நீதிமன்ற தண்டனை, அடையாள அட்டையில் முகவரி மாற்றம், அனுமதி சீட்டு(Pas Calon) போன்ற காரணங்களுக்காக பிற இடங்களிலும் நிராகரிக்கப்பட்டது.
39. பத்து நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
40. முன்னாள் நெகிரி மாநில மந்திரி பெசார், முகமட் ஹசான் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் பாரிசான் வேட்பாளரான ஹசான்-னை எதிர்த்து போட்டியிட பி.கே.ஆர் கட்சியை சேர்ந்த ஸ்ரீராம் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்தின் உள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டப்பத்தின் உள்நுழைவதற்கு அனுமதி சீட்டு இல்லை என காரணம் சொல்லப்பட்டது.
41. மெலாவத்தி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற சிவமலர் அடையாள அட்டையில்(IC) உள்ளூர் முகவரி இல்லை என்று காரணம் சொல்லி வேட்புமனு நிராகரிப்பட்டது. மெலாவாத்தில் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் உடனடியாக மாற்று வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்கள். தவாங் தொகுதிக்கு வேட்புமனுதாக்கல் செய்த முகமட் அசிசான் சே செமான் இதே போல் முகவரி மாற்றத்தை காரணம் காட்டி மனு நிராகரிக்கப்பட்டது.
42. பெனாகா சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பி.கே.ஆரின் வேட்பாளர் யாக்கோப் ஒஸ்மான் திவாலானவர் என்று காரணம் கூறி நிராகரிக்கப்பட்டது. ஆனால் இவர் திவாலானவர் இல்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் முகமட் ஹபிட்ஸ் ரிசால் அம்ரான் வேட்புமனுவும் திவாலானவர் என்கிற காரணத்தால் நிராகரிக்கப்பட்டது.
43. இதற்கிடையில் ஒரு தமாசான சம்பவம் ஒன்று நடந்தது. வங்ச மாஜூ பிகேஆர் கட்சி வேட்பாளர் டத்தின் படூக்கா தான் யீ கீவ் வேட்புமனு தாக்கலின் போது தனது மைகாட்(IC) எடுத்து வர மறந்து விட்டார். பிறகு அவரின் உதவியாளர் அடித்து பிடித்து மைகாட்-டை எடுத்து வந்து கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது.
44. இப்படியாக பல சிக்கல்களுக்கு நடுவில் வேட்புமனு தாக்கல் வைபவம் ஒருவழியாக நடந்து முடிந்து தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் படலம் தொடங்கியது. மீடியாக்களுக்கு தினமும் தீனிகள் ஏராளம் கிடைத்தது. தினம் தினம் பல சுவையான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தது.
45. பல சுவரசியமான சம்பவங்களில் அனைவரையும் கவர்ந்த விசயம் ஒன்று இருந்தது. புதிதாக ஓட்டுக்கு பதிந்தவர்கள் எப்படி ஓட்டி போட வேண்டும் என்கிற பிரச்சாரம் ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற இணைய ஊடங்களில் நடந்துக் கொண்டிருந்தது. அதே போல் செல்லாத ஓட்டுக்கள்(Undi Rosak) குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் பொதுமக்கள் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஓட்டு போடுவதற்கு எப்படி செல்ல வேண்டும்?, என்ன மாதிரியான உடைகள் உடுத்தியிருக்க வேண்டும்?, ஓட்டு சீட்டில் எப்படி டிக் செய்வது?, நேர விபரங்கள் போன்ற பயனுள்ள தகவல்களை பொது மக்களிடையே வீடியோவாகவும், ஆடியோவாகவும் ஆர்முள்ள இளைஞர்கள் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
46. சிலது தகவல் பிழைகள் இருந்தாலும், இளைஞர்களின் இந்த ஆர்வம் வியப்பை ஏற்படுத்தியது. எந்த கட்சியும் சாராமல் பல இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை இந்த தேர்தலில் வெளிப்படுத்தினார்கள். பொதுமக்கள் பலரும் தங்களை இந்த தேர்தல் பணியோடு இணைத்துக் கொண்டார்கள். இந்த நாட்டின் அரசாங்கத்தை தேர்தெடுப்பதில் இருக்கும் முக்கிய பொறுப்பை எல்லோரும் உணர்ந்ததாகவே இது உணர்த்தியது.
47. ஒவ்வொரு தேர்தலின் போது பாரிசான் பிரச்சார கூட்டங்களில்தான் களைகட்டும். ஹரிராயா,தீபாவளி,சீன பெருநாள் போல் இனிப்புகள் அதிகம் புலங்கும் இடமாக இருக்கும். பாரிசான் கூட்டங்களை பார்க்க ஜெகஜோதியாக இருக்கும். ஆனால் இந்த முறை(2018) பாரிசானின் பெரும்பாலான கூட்டங்கள் பொலிவிழந்திருந்தது. பல இடங்களில் பாரிசான் பிரச்சாரத்தில் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது. இதனால் உற்சாகம் குறைந்தே காணப்பட்டது.
48. பக்காத்தான் பிரச்சாரங்கள் ரொம்பவும் ஜோராக நடந்துக் கொண்டிருந்த்து. பல நட்சத்திர பேச்சாளர்கள் களம் இறங்கினார்கள். டத்தோ அம்பிகா சீனிவாசன், ஹிசாமுடின் ராய்ஸ் போன்ற அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் களத்தில் பக்காத்தானுக்கு சார்ப்பாக இறக்கிவிடப்பட்டார்கள். துன் மகாதீர், மாட் சாபு, அஸ்மின் அலி, ரபிசி, நூருல், நிக் ஓமார் போன்றவர்களின் பேச்சுகளின் போது கூட்டம் அலை மோதியது. பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இவர்களின் பேச்சு மக்களை பெரிதும் ஈர்த்தது.
49. பாரிசான் நேசனல் – பக்காத்தான் ஹரப்பான் நேரடி போட்டியாக இந்த தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும் என்றே துன் மகாதீர் உட்பட பலரும் விரும்பினார்கள். கடைசி நிமிடம் வரை பக்காத்தான் ஹரப்பான் பாஸ் கட்சிக்காக காத்திருந்தார்கள். பாஸ் தனி கூட்டணியாக காகாசான் செஜாதிரா-வை(Gagasan Sejahtera) அமைத்தார்கள்.
50. காகாசான் செஜாதிரா கூட்டணிக்கு பாஸ் கட்சி தலைமை தாங்கியது. இக்காத்தான் பங்சா மலேசியா(Ikatan Bangsa Malaysia(IKATAN), பெர்ஜாசா(BERJASA) Pan-MaLaysian Islamic Front போன்ற கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றது. இவர்களோடு தோழமை கட்சியாக பி.சி.எம்(Parti Cinta Malaysia), பி.ஏ.பி.(PAP-People’s Alternative Party, பி.எச்.எம்.(Parti Harapan Malaysia), போன்ற கட்சிகளும் இணைந்துக் கொண்டது. குமார் அம்மனின் நியு ஜென்(Parti Genarasi Baru) கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்துக் கொண்டார்கள்.
51. மும்முனை போட்டியாக இந்த தேர்தல் விளங்கியது. பாரிசான், பக்காத்தான், காகாசான் செஜாத்ரா என மும்முனை போட்டியாக உருவானது.
52. Semananjung Malaysia; Barisan Nasional-166,
Pakatan Harpan-165
Gagasan Sejahtera-160
53. எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு முக்கிய அம்சமாக இந்த முறை கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசும் பொருளாக இருந்தது. இந்த தேர்தலில் அனைத்து கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளும் வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. பொது மக்களை பெரிதும் ஈர்த்தது பக்காத்தான் ஹரப்பான் வெளியிட்ட 100 நாளில் பத்து வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கை. எங்கும் இது குறித்து பெரிதும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.
54. இந்த தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்கு பாரிசான் மற்றும் பக்காத்தான் கூட்டணிகள் சிறப்பு வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமானதாக கருதப்பட்டது, 100 நாளில் இந்தியர்களின் குடியிருமை பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்பது. இந்தியர்களின் குடியிருமை பிரச்சனை என்பது நீண்ட காலமாக இந்தியர்களின் மத்தில் நிலவி வந்த பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது.
55. இது போக, பாரிசானில் அங்கம் வகித்த இந்தியர்களின் தனி பெரும் கட்சியான மஇகா இந்தியர்களுக்காக தனி தேர்தல் அறிக்கை ஒன்றை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையில் வெளியிட்டது. இந்தியர்களுக்கு என தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல் தேர்தலாகவும் இது விளங்கியது. இதற்கு முன் 2013-ஆம் வேதமூர்த்தி தலைமையில் Blue Print ஒன்று முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடன் கையெழுத்து ஆனது. பிற்கு அது செயல்ப்படுத்த முடியாமல் போன காரணத்தை கூறி வேதமூர்த்தி பாரிசான் கூட்டணியிலிருந்து விலகினார்.
56. பாஸ் கட்சியின் தலைமையில் அமைந்த காகாசான் செஜாத்திரா 20 முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் பிரச்சார அறிக்கையில் வெளியிட்டது. GST-யை அகற்றுவது, குறைந்த விலை வீடுகள், இலவச மருத்துவம், பிரசவிக்கும் தாய்மார்களுக்கு கூடுதல் விடுமுறைகள், இலவச பள்ளி பேருந்து கட்டணம், டோல் வரியை அகற்றுவது, மருத்துவ சலுகைகள் போன்றை அதில் அடங்கியிருந்தது. புறநகர் பகுதி வாக்காளர்களை இந்த தேர்தல் அறிக்கை பெரிதும் கவர்ந்தது.
57. தேர்தல் பிரச்சாரம் வெகு ஜோராக நடந்துக் கொண்டு இருந்த வேளையில் துன் மகாதீர் கெலிங் எங்கிற வார்த்தையை பொதுவில் பயன்படுத்திய பிரச்சனை வெடித்தது. இது இந்தியர்களின் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. முதலில் அம்பிகா தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கெலிங் என்கிற வார்த்தையை பொதுவில் பயன்படுத்தியதற்கு துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் கோரிக்கையையும் முன் வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட துன் மகாதீர் மன்னிப்பும் கேட்டார்.
58. தேர்தல் தினம் வந்தது. இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரைகள் நடந்துக் கொண்டிருந்தது. தேர்தலுக்கு முதல் நாள் இரவு பதினொரு மணியோடு அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
59. தேர்தலுக்கு முதல் நாள் இரவு(8 மே 2018) 10 மணிக்கு துன் மகாதீர் நாட்டு பொதுமக்களுக்கு சிறப்பு உரை ஒன்று நிகழ்த்த போவதாக அறிவிப்பு செய்தார். அதே நேரத்தில், அப்போது பிரதமர் பதவியில் இருந்த பாரிசான் கூட்டணியின் தலைவர் நஜிப் துன் ராசாக்-க்கும் பொதுமக்களுக்கு சிறப்பு உரையாற்ற போவதாக அறிவித்தார். இரு பெரு அணிகளின் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு ஒரே நேரத்தில் உரையாற்றுவது நமது வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றது.
60. நஜிப் துன் ரசாக் TV3 மூலமாக டிவியிலும், துன் மகாதீர் இணையத்தின் வழியாக உரை நிகழ்த்த போவதாக முடிவு செய்யப்பட்டது. இருவரும் என்ன செய்தியை மக்களுக்கு சொல்ல போகிறார்கள் என்கிற ஆவல் நாட்டு மக்களுக்கு பெரிதும் ஆர்வத்தை கொடுத்தது. பல இடங்களில் பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் பேச்சுகளையும் கேட்பதற்கு மக்கள் ஆங்காங்கே கூடியிருந்தார்கள். துன் மகாதீர் உரையை கேட்பதற்கு பெரும்பாலும் மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். மக்கள் அந்த கடைசி நிமிடத்துகாக காத்திருந்தார்கள்.
61. இரவு மணி 10. வரலாற்றின் மிக முக்கியமான அந்த உரை தொடங்கியது. துன் மகாதீர் பேச ஆரம்பித்தார். 15 நிமிடம் பேசினார். துன் மகாதீரின் பேச்சு பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான போரட்ட்த்தை மையமாக கொண்டிருந்த்து. நஜிப் துன் ரசாக் தலைமையில் நாடு சீரழிந்து விட்டதாகவும், நாட்டை சீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். கிளப்தோகரசி ஆட்சிக்கு ஒரு முடிவை கொண்டுவரும்படியும், இந்த நாட்டை காப்பற்றுவதற்கும் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
62. போலிஸ் தங்கள் கடமையை சரிவர செய்ய வேண்டும் என்றும், அதிகாரங்களை மீறிய செயல்களை செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
63. நஜிப் துன் ரசாக் உரை பொதுவாக சிறப்பு வாக்குறுதி பேச்சாக இருந்த்து. நாட்டில் டோல் கட்டணம் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்றும், மேலும் சில சிறப்பு சலுகைகளையும் அறிவித்தார்.
64. தேர்தல் பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு மாத காலம் திருவிழா கோலம் பூண்டிருந்த நாடு அமைதியானது. இரவு எங்கும் நிசப்தம். சூரியோதயத்திற்கு எல்லோரும் காத்திருந்தார்கள். விடிந்தது. வாக்களிக்கும் வாக்கு சாவடிகள் காலை எட்டு மணிக்கு திறக்க வேண்டும். மணி எட்டு ஆனது. வாக்கு சாவடிகள் திறக்கப்பட்டது.
-மதியழகன் முனியாண்டி
09/05/2018
0 Comments