இந்திய சமூதாயத்திற்கு மஇகா செய்தது பச்சை துரோகம்
இந்திய சமூதாயத்திற்கு மஇகா செய்தது பச்சை துரோகம்.
1. இது ஒரு மிக நீண்ட கட்டுரை. வழக்கம் போல், பொறுமை இல்லாதவர்கள், அவசரகாரர்கள், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், சுலபத்தில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் இந்த கட்டுரையைப் படிக்க வேண்டாம். ஆனால் இந்த கட்டுரையை நேரம் ஒதுக்கி, நீங்கள் கண்டிப்பாக படித்துப் பார்க்க வேண்டும்.
2. இந்த சமூகம் மஇகாவினால் எப்படி ஏமாற்றப்பட்டது; நம் துயரங்கள் என்ன என்பதனை நீங்கள் ஓரளவுக்கேனும் புரிந்து; விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று பல இளைஞர்கள் மஇகாவுக்கு மிக ஆதரவாகவும், விசுவாசமாகவும் இருக்கிறார்கள். நல்லது. ஆனால் எங்களை போன்ற மெஜாரிட்டி இந்திய மக்கள் ஏன் மஇகாவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறோம் என்பதனை கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும். நமது எதிர்ப்பின் மூலக்கரணத்தை புரிந்து, உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
3. எங்களை போன்றவர்கள் மஇகாவை மிக கடுமையாக எதிர்ப்பதற்கு ஆழமான; வலுவான காரணங்கள். உண்டு. கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. இந்த கட்டுரையில் நான் பல சம்வங்களை தொடராக அடுக்கிக் கொண்டு போக போகிறேன். நிறைய சம்பவங்கள்; பல ஆண்டுகளாக நடந்து கொண்டு வருவதால்; சம்பவங்கள் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் இந்த சம்பங்கள் அனைத்தும் மகா உண்மை. பொய் இல்லை. ஒருக்கால் நான் பொய்யான ஒரு செய்தியை இந்த கட்டுரையில் எழுதியிருந்தால் என் வாய்க்கு போஜனம் கிடைக்காது.
4. சாமிவேலு மஇகாவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட சில ஆண்டுகளில், இந்த நாட்டில் வாழும், நமது இந்தியர்களின் பொருளாதரத்தை உயர்த்துவதற்கும், இந்திய சமூதாயத்தின் சொத்துடமையை அதிகரிப்பதற்கும் மைக்கா ஹொல்டிங்கஸ்(Maika Holdings Berhad) என்கிற பெயரில் கூட்டறவு கழகம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த மைக்கா ஹொல்டிங்ஸ் நிருவனம் முழுக்க முழுக்க சாமிவேலுவின் நிருவாகத்தின் கீழ் இயங்கியது.
5. ஒரு பங்கு RM1 வெள்ளி என்று விற்க ஆரம்பித்தார். இந்த குருட்டுத்தனமான வாக்குறுதியை நம்பி நம் இந்திய மக்கள்; அதாவது நமது தாத்தா பாட்டி, அப்பா அம்மா என நமது குடும்பத்தில் உள்ளவர்கள் RM 100 வெள்ளி முதல் RM 1000 வெள்ளி வரை கொண்டு போய் சாமிவேலுவிடம் கொடுத்தார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம், நகைகளை அடமானம் வைத்து இந்த பணத்தை மைக்கா ஹொல்டிங்ஸ்-இல் கொண்டு போய் போட்டார்கள். ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒரு மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்கள் நிச்சயமாக இருப்பார்கள்.
4. நாடு முழுவதும் 66,000-க்கும் அதிகமான இந்திய மக்கள் மைக்கா ஹோல்டிங்கஸ் பங்குகளை வாங்கினார்கள். இதில் அப்பாவியான என் அப்பாவும் ஒருவர். 90-களில் இந்திய சமூகம் சாமிவேலுவை நம்பி கொடுத்த மைக்கா ஹொல்டிங்ஸ் நிருவனத்தில் போட்ட மொத்த பணத்தின் அளவு 106 மில்லியன். இதில் சாமிவேலு போட்ட பணம் வெறும் 2.8 மில்லியன்தான்.
5. 106 மில்லியன் என்பது 1006 லட்சம் ரிங்கிட். இன்றைய மதிப்பின் படி அது த்ரில்லியனுக்கு சமம். இவ்வளவு பணம் இந்திய சமூதாயத்திடம் இருந்தது என்பதே மிக பெரிய ஆச்சர்யம். இந்திய சமூதாயத்தால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியும் என்பதனை அரசாங்கமே வியப்பாக பார்த்தது.
6. 106 மில்லியனை வைத்துக் கொண்டு சாமிவேலு என்ன செய்தார்? இப்போது வரை அதற்கான பதில் கிடைக்கவே இல்லை. சொந்துக்களை வாங்கினார்கள் விற்றார்கள். பங்குகளை வாங்கினார்கள் விற்றார்கள். இப்போது வரையில் பணம் போட்ட நமது அப்பா அம்மாவிடம் . எந்த கணக்கும் காட்டப்படவே இல்லை.
7. கணக்கு கேட்கும் போதெல்லாம் ரவுடி கும்பல்களை வைத்து நம்மை அடித்து காயப்படுத்தினார்கள். இதற்கு பயந்துக் கொண்டே பலரும் மைக்கா ஹோல்டிங்ஸ் கூட்டத்துக்கு போக மாட்டார்கள். பினாங்கில் நடந்த மைக்கா ஹோல்டிங்ஸ் கூட்டத்தில் கேள்விகள் கேட்ட YB குலசேகரனை மஇகா ரவுடிகள் மிக கடுமையாக தாக்கினார்கள். இது குறித்து அப்போது YB குலசேகரன் போலிசில் புகார்கூட செய்தார். சிவநேசனனும் இதில் பாதிக்கப்பட்டிருந்தார்.
8. மஇகா ரவுடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் மெல்ல மெல்ல மைக்கா ஹொல்டிங்கஸ்-இல் இருந்து விலகிக் கொண்டோம். 106 மில்லியன் ரிங்கிட் பணத்தை கொடுத்த நமக்கு ஏமாற்றமே மிஞ்ஞியது.
9. இதற்கிடையில் உலக பொருளாதர மேதையான வேள்பாரியை மைக்கா ஹோல்டிங்ஸ் நிருவனத்தின் தலைவராக சாமிவேலு நியமித்தார். மைக்கா ஹொல்டிங்ஸ்-இல் மிச்சம் இருந்த சொந்துக்களையும் வேள்பாரி விற்க ஆரம்பித்தார். அதில் பிரிக்பில்ட்ஸ்-இல் இருந்த ஹோட்டல், அந்தோணியன் புக் ஸ்டோர் போன்றவையும் ஆகும்.
10. இந்த காலகட்டத்தில் வேள்பாரி மைக்கா மியூசிக் என்கிற இசை நிருவனத்தை ஆரம்பித்தார். சாமி பாடல்கள் கொண்ட ஒரு இசை தொகுப்பும், தேவா இசையமைப்பில் வெளிவந்த ஒரு படத்தின் பாடல் கேசட்டும் வெளியிட்டார்கள். 1 மில்லியன் நட்டம் என கணக்கு காட்டினார்கள். பிறகு இதே வேள்பாரி, மைக்கா மியூசிக் நிருவனத்தில் வேலை செய்த, இந்திய நாட்டுகாரரான பூவனை வைத்து சுவாரா நெட்வர்க் என்கிற இசை நிருவனத்தை தொடங்கினார். ரஜினி நடித்த சிவாஜி படத்தின் மொத்த உரிமையயும் வாங்கி வெளியிட்டார்கள். நல்ல லாபம்.
11. மீண்டும் மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை வெடித்தபோது, மைக்கா ஹோல்டிங்ஸ்-இல் பணத்தை போட்ட 66,000 இந்திய மக்களுக்கும் நூறு நாளில், RM1 வாங்கிய ஒரு பங்குக்கு RM1.30 வெள்ளி விதமாக அந்த பணத்தை திருப்பி தருவதாக சபதம் செய்தார். அதாவது 106 மில்லியன் ரிங்கிட்டை 136 ரிங்கிட் மில்லியனாக திருப்பி தருவதாக சொன்னார். சாமிவேலு சொல்வார் செய்ய மாட்டார் என்பதனை மீண்டும் நிருப்பித்தார். நூறு நாட்களை தாண்டி மாத கணக்கானது.
12. இந்த சமயத்தில் ஒரு மிக பெரிய உண்மையை நம்மிடம் சொன்னார்கள். அதாவது மைக்கா ஹொல்டிங்கஸ்-க்கும் சாமிவேலுவுக்கும் சம்பந்தம் இல்லை. சாமிவேலு வேறு மைக்கா ஹொல்டிங்ஸ் வேறு என்றார்கள். மைக்கா ஹோல்டிங்ஸ் தலைவர் வேள்பாரி. வேள்பாரியே அனைத்துக்கும் பொறுப்பு என்றார்கள். வாய் மூடி நின்றோம். பிறகு வேள்பாரியை நீக்கி விட்டு ரசாக் என்கிற மலாய்காரரை மைக்கா ஹோல்டிங்ஸ்-யின் தலைவராக கொண்டு வந்தார் சாமிவேலு. ஹிண்டார்ப் பிரச்சனைக்கு பிறகு, ஆக கடைசியாக 2013-ஆம் ஆண்டில், 106 மில்லியன் ரிங்கிட் பங்குகளை வெஸ்ட் போர்ட் ஞானலிங்கத்திடம் விற்றார்கள். ஆனால் பணம் போட்ட நமக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சணமான உண்மை.
13. மைக்கா ஹோல்டிங்கஸ் குறித்து நாம் எழுதும் தெரிந்துக் கொள்ளும் அதே வேளையில் டெலிகாம் பங்குகள் குறித்த அநியாயத்தையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
14. 1990-ஆம் ஆண்டு நமது நாட்டின் நிதியமைச்சு 10 மில்லியன் டெலிகோம் பங்குகளை இந்திய சமூகத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தது. அப்போது தான் ஸ்ரீ டைம் சைனுடின் நிதியமைச்சராக இருந்தார். நமது இந்திய சமூகத்தின் பொருளாதர விகிதத்தை உயர்த்துவதற்கு, இந்த பங்குகள் நேரடியாக மைக்கா ஹோல்டிங்ஸ்க்கு ஒதுக்கப்பட்டது.
16. சாமிவேலுவுக்கு மூக்கு வேர்த்தது. 1 மில்லியன் பங்குகளை மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கி விட்டு, மீதம் உள்ள 9 மில்லியன் பங்குகளை மூன்று தனியார் கம்பனிகளுக்கு சாமிவேலு ஒதுக்கி; அப்படியே நகர்த்திக் கொண்டு போனார்.
17. 1990-ஆம் ஆண்டுகளில் ஒரு டெலிகாம் பங்கு விலை RM 5 வெள்ளி சொச்சம். 10 மில்லியன் பங்குகள் 50 மில்லியன் ரிங்கிட். இது குறித்த மிக தெளிவான கட்டுரைகளை அப்போதுள்ள அலிரான் மாத இதழும்(Aliran Monthly) தூதன் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வந்தது.
18. 10 மில்லியன் டெலிகோம் பங்குகள் குறித்து பொது மக்களுக்கு உண்மை தெரிந்து; பிரச்சனைகள் வெடித்த போது, இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று, மைக்காவின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த டி.பி.விஜேந்திரன் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிட்டார்.
19. இந்திய சமூதாயத்துக்கு ஒதுக்கிய டெலிகோம் பங்குகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுந்த போது; 9 மில்லியன் பங்குகள் இந்திய சமூகம் சார்ந்த கம்பனிகளுக்கே ஒதுக்கப்பட்டது. அது இந்திய சமூகத்துக்கு போய் சேர்ந்ததாக நிதியமைச்சு நம்பியது என அப்போதைய நிதியமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதில் கொடுத்தார்.
20. ‘ministry’s knowledge, the three companies reppresented the interest of the Indian community’- Dato Sri Anwar Ibrahim, Finace Minister(The Star,30/41992). இதில் ஒரு வேடிக்கை இருக்கிறது மிக சரியாக 26 ஆண்டுகளுக்கு முன், இன்றைய இதே தேதியில்தான்(29/04/1992) டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடளுமன்றத்தில் மைக்கா குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்.
21. சாமிவேலுவின் பதிலுக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதற்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. நிதியமைச்சு 10 மில்லியன் பங்குகள் மைக்காவுக்கு ஒதுக்கிக் கொடுத்த போது; ஒரு மில்லியன் பங்குகள் போதும் என்றும் மீதம் 9 மில்லியன் பங்குகளை மைக்கா நிராகரித்ததாகவும் நாடாளுமன்ரத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-ஆல் மேலும் சொல்லப்பட்டது.
22. அப்போது மைக்கா ஹோல்டிங்ஸ் இயக்குனர்களில் ஒருவராக இருந்த பாசமாணிக்கம் இதை முற்றிலும் மறுத்தார். 10 மில்லியன் பங்குகளை வாங்குவதற்கு வங்கி மூலம் 50 மில்லியன் ரிங்கிட்டை கடன் பெறுவதற்கு மைக்கா ஏற்பாடு செய்திருந்தது. அந்த பங்குகளை வாங்குவதற்கு மைக்கா தயாராக இருந்தது என்று பாசமாணிக்கம் கூறினார்.
23. அப்போது மைக்காவின் இயக்குனராக இருந்த ராம ஐயர் அதிரடியான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார். தனக்கு அதிகாலையில் போன் போட்டு அழைந்த சாமிவேலு; நிதியமைச்சு 10 மில்லியன் டெலிகோம் பங்குகளை மைக்காவுக்கு ஒதுக்கி உள்ளது. இந்த பங்குகளை வாங்குவதற்கு அராப்-மலேசியன் வங்கி 50 மில்லியன் ரிங்கிட் ஃபூல் லோன் தருவதாக ஒத்துக் கொண்டுள்ளது. மொத்த பங்குகளையும் மைக்காவின் பெயரில் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும்; மறுநாள் அம்-பேங்க் 50 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆப்பர் லெட்டர் ஒன்றை மைக்காவுக்கு கொடுத்ததாகவும் அந்த பத்திரிக்கை செய்தியில் மேலும் கூறினார்.
24. உடனே இதற்கு மறுப்பு கொடுத்தார் சாமிவேலு. மைக்காவுக்கு 1 மில்லியன் பங்குகள்தான் கொடுப்பப்பட்டதாகவும், மீதம் 9 மில்லியன் பங்குகள் பிற மஇகா(MIC) நிருவனங்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொன்னார். ராம அய்யர் புரியாமல் உளறுகிறார் என்றும் சொன்னார்.
25. டெலிகோம் பங்குகள் வாங்கும் போது RM 5 வெள்ளி. 1992-ஆம் ஆண்டில் அதன் மதிப்பு RM 11-முதல் 13 வெள்ளியாக உயர்ந்தது. இந்த ஒன்பது மில்லியன் பங்குகளை வாங்கி விற்றதன் மூலம் சாமிவேலு 120 மில்லியன் ரிங்கிட்டை மைக்காவிலிருந்து கொள்ளை அடித்து விட்டதாக அலிரான் பத்திரிக்கை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது.
26. I could have given all the shares to Maika Holdings if not for their past business record. They don’t deserve 10 million shares because of the dismal performance of the Maika Holdings. They have to learn to do business on their own and not depend on shares and make money out of it – Sami Vellu, New Straits Times, 16 May 1992.
28. நான் 10 மில்லியன் பங்குகளையும் மைக்காவுக்கு கொடுத்திருப்பேன். ஆனால் மைக்காவுக்கு பிசினஸ் செய்ய தெரியாது. அவர்கள் பிசினஸ் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரெயிட் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். மைக்காவுக்கு 106 மில்லியன் போட்ட நம்மை செருப்பால் அடித்தார் சாமிவேலு.
29. SB Management Sdn Bhd, Advanced Personal Computers Sdn Bhd, Clearway Sdn Bhd என்கிற மூன்று கம்பனிகளுக்கு நிதியமைச்சு கொடுத்த 9 மில்லியன் பங்குகளை சாமிவேலு திருப்பிவிட்டார்.
30. இந்த மூன்று கம்பனிகளில் ஒரு கம்பனிக்கு; மைக்காவின் இயக்குனர்களில் ஒருவரான செல்வேந்திராவுக்கு சொந்தமானது என்பதனை லிம் கிட் சியாங் அம்பலப்படுத்தினார். மீதம் இருந்த இரண்டு கம்பனிகளும் ஒரே முகவரியில் முகவரியில் இயங்கியது. மூன்று கம்பனிகளுக்கும் ஒரே கம்பனி செக்ரட்டரி. பாலசுப்ரமணியம்.
31. Advanced Personal Computers Sdn Bhd, SB Management Sdn Bhd இந்த இரண்டு கம்பனிகளின் இயக்குனர்களாக பாலசுப்ரமனியமும் சோதிநாதனும்(முன்னாள் மஇகா உதவி தலைவர், முன்னாள் தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினர்) இருந்தார்கள்.
32. RM 5 வெள்ளிக்கு விற்க்கப்பட்ட டெலிகோம் பங்குகளின் இன்றைய மதிப்பு RM 100-க்கும் மேல். இந்த பத்து மில்லியன் டெலிகோம் பங்குகள் மூலம் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய லாபம் மட்டும் 100 மில்லியனுக்கும் மேல்.
33. மைக்கா ஹோல்டிங்ஸ் மட்டும் மிக சரியாக செயல்ப்பட்டிருந்தால் இன்று ஏர் ஆசியா, பெர்ஜாயா போன்ற பெரிய முதலீட்டு கம்பனியாக மாறியிருக்கும். சாமிவேலுவும் மஇகாவும் இந்த சமூகத்தை சுரண்டுவதிலும் ரவுடிகள் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் மட்டுமே கவனமாக இருந்தார்கள்.
34. ஏழை மாணவர்கள் சட்டம் படிக்க ஏதுவாக டெண்டோ கல்லூரி பெட்டாலிங் ஜெயா, ஜலான் 222-வில் கட்டப்பட்டது. பல கோடி மதிப்புள்ள அந்த கல்லூரியை சாமிவேலு ஏன் விற்றார்? எதற்காக விற்றார் என்று இப்போது வரை தெரியவில்லை. அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.
35. மைக்கா வாங்கிய 1 மில்லியன் டெலிகோம் பங்குகள் மூலம் கிடைத்த 10 மில்லியன் பணத்தை MIED மூலம் டேப் கல்லூரி கட்டுவதற்கும், தேவையான தளவாட பொருட்கள் வாங்குவதற்கும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்போதும் ஒரு பேராசிரியர் இருந்தார். மாரிமுத்து.
36. அம்னோ அரம்பித்த ITM இன்று UiTM-ஆக உயர்ந்து நிற்கிறது. மசீச ஆரம்பித்த Kolej Tar இன்று Unitar-ஆக உயர்ந்து நிற்கிறது. ஆனால் நாம் ஆரம்பித்த The oldest Law School in Malaysia- Vanto இன்று காணமல் போய்விட்டது. டேப் எதற்கும் பயன்படாமல் கிடக்கிறது. அங்கு படித்துவிட்டு, அந்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டு எங்கும் வேலைக்கு போக முடியாது.
37. ஏய்ம்ஸ்ட் பலகலைகழகம் கட்டுவதற்கு மகாதீரின் அரசாங்கம் நிலம் கொடுத்தது. ஒவ்வொரு மஇகா கிளையும் ஒரு லட்சம் நிதி திரட்டி கொடுத்தார்கள். அப்படி திரட்டி கொடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்டமாக கூறினார். இன்று அதுவும் நம்மிடம் இல்லை.
38. அம்னோ அரம்பித்த UiTM இன்றும் அது அம்னோவிடம்தான் இருக்கிறது. மசீச ஆரம்பித்த Unitar இன்றும் அது மசீசவிடம்தான் இருக்கிறது. மஇகா ஆரம்பித்த எதுவும் நம்மிடம் இல்லை.
39. மஇகாவிற்கு ஜலான் ஈப்போவில் நிலம் வாங்கி இருப்பதாகவும்; அங்கு பிரண்டமான பில்டிங் கட்டபோவதாக வரைப்படம் எல்லாம் வரைந்து காட்டினார் சாமிவேலு. நிலமும் வாங்கப்பட்டது. அந்த நிலம் எங்கே போனது?
40. எப்பிங்காம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கிய நிலத்தில் பாதியை அபகரித்துக் கொண்ட சாமிவேலு; அந்த நிலத்தில் நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட, உலக தரத்துக்கு இணையான கட்டடம் கட்டப்போவதாக வெளிநாட்டு இன்ஞினியர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்தார். அப்படியும் அந்த கட்டடம் எழவில்லை. மஇகா தலைமையகம் இன்னும் அந்த முட்டு சந்தில்தான் நிற்கிறது.
41. இதுவரை நான் எழுதியது இந்த சமூகத்தை மஇகா எப்படி ஏமாற்றியது என்பது குறித்துதான். இதில் இன்னும் சில கொள்ளை சம்பவங்களை நான் எழுதவில்லை. எழுதி என்ன ஆக போகிறது? இந்த மஇகா இன்று வரை நம்மை ஏமாற்றி, நடு தெருவில் நிற்க வைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
42. இன்றையை திகதியில் ரவுடிகள் தவிர வேறு யார் மஇகாவில் இருக்கிறார்கள். நம்முடைய பணத்தை அபகரித்துக் கொண்டு; கேட்டால் நம்மை அடித்து உதைப்பது என்று இன்னமும் நம்மை அடிமைகளாகத்தான் வைத்திருக்கிறார்கள்.
43. நமக்கு சேர வேண்டியதை அபகரித்துக் கொண்டு இன்று பதவியில், அதிகாரத்தில் சுகமாக இருக்கிறார்கள். நம்மை பார்த்து முட்டாள் என்கிறார்கள்.
44. உண்மையில் நாம் முட்டாள்தான். மில்லியன் கணக்கில் பணத்தை கொள்ளை அடித்து விட்டு; அந்த பணத்தில் ஏகபோக வாழ்வு வாழ்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் அத்துனை மஇகா தலைவர்களும், மஇகாவுக்கு வந்துதான் இவ்வளவு பெரிய கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள். மஇகா என்பது இவர்கள் கோடி கோடியாக பணம் சேர்க்க உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் மாட்டுக் கொட்டாய். அவர்கள் மாடுகள் மேய்ப்பவர்களாக, நாம் மாடுகளாக ....
மதியழகன் முனியாண்டி
30 ஏப்ரல் 2018
0 Comments