Monday, 11 April 2022

புதன் உகந்ததா?

புதன் உகந்ததா?

1. இப்போது உச்சம் பெற்றிருப்பது புதன். நமது நாட்டின் தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல், நாடு முழுக்க புதன்கிழமை பேசும் பொருளாக உலாவி வருகிறது. 

2. மகாதீர் ஆட்சி காலத்தில் திங்கட்கிழமைகளில் இருமுறையும், வியாழக்கிழமை ஒரு முறையும் தேர்தல் நடந்துள்ளதை குறிப்பிட்டு; வாரநாட்களில், வேலை நாட்களில் தேர்தல் நடைபெறுவது ஒன்றும் புதிது இல்லை என்று பரவலாக பேசி வருகிறார்கள்.

3. பொதுவாக வார இறுதிநாட்களில் அல்லது; வார இறுதிநாட்களோடு இணைந்து வரும் நாட்களில் தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்காது. மகாதீர் காலத்தில் அப்படித்தான் நடக்கும். பெர்லிஸ், கெடா,கிளாந்தான்.திரெங்கானு,ஜொகூர் போன்ற மாநிலங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வார இறுதிநாட்களாக இருந்தது. வியாழக்கிழமை என்பது நமது நாட்டின் சில மாநிலங்களுக்கு வார இறுதி நாட்களோடு இணைந்து வருபவை.

4. நமது நாட்டில் துங்கு காலத்திலும், ரசாக் காலத்திலும் வேலை நாட்களில் தேர்தல்கள் நடந்துள்ளது. தேர்தலுக்கு முழுநாள் விடுமுறை கொடுக்க மாட்டார்கள். ஒரு மணி நேரம் ஒதுக்கீடுதான் கொடுப்பார்கள். நேர விடுப்பு எடுத்துக்கொண்டு, ஓட்டு போட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு போக வேண்டும். 

5. நமது நாட்டில் வார இறுதிநாட்கள் மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுப்பட்டிருந்தது. இப்போதும் சில மாநிலங்களில் வார இறுதி என்பது வெள்ளி மற்றும் சனிக்கிழமை.

6. வேலை நாட்களில் தேர்தல் நடத்துவதால் அசௌகரியங்கள் ஏற்படும். முடிந்த வரையில் வார இறுதியில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தது. அதுவே ஓட்டு போடும் மக்களுக்கு இலகுவாக இருந்தது.

7. இந்த முறை முற்றிலும் மாறுப்பட்ட ஒரு கிழமையை தேர்தெடுத்துள்ளார்கள். இங்கிட்டும் அல்லாமல்; அங்கிட்டும் அல்லாமல் நடுவில் ஒரு கிழமையை தேர்தெடுத்து மக்களை அல்லாட விட்டிருக்கிறார்கள்.

8. வியாழக்கிழமையாக இருந்தால் கிளந்தான், திரெங்கானு, ஜொகூர் போன்ற மாநிலங்களின் வாரஇறுதி நாட்களில் இணைத்திருக்கலாம். திங்கட்கிழமையாக இருந்தால் மற்ற மாநிலங்களின் வார இறுதியோடு இணைத்திருக்கலாம். எதிலும் சேர்க்க முடியாதப்படி நடுவில் துண்டாக நிற்கும் புதன் கிழமையில் தேர்தல் வைத்திருப்பது பலரையும் கோபப்படுத்தியுள்ளது.

9. இது நிச்சயமாக வாக்களிக்கும் மக்களின் மனநிலையையும்; சௌகரியத்தையும் பாதிக்கும். 

10. தகுதி வாய்ந்த மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று. 

11. நேர்மையாகவும் அமைதியாகவும் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தேர்தெடுத்து கொடுப்பது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது. மக்களாட்சியில் மக்கள் அனைவரும் பங்கெடுக்கும் வகையில்; மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கும் முக்கிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

12. வாக்களிக்கும் உரிமையை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த; மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொறுப்பை உணர்த்துவதற்கு தேர்தல் ஆணையம் நாடு தழுவிய நிலையில் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் தேர்தலில் வாக்களிக்க முன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். 100 விழிக்காடு ஓட்டு பதிவாக வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்கிறது.

13. ஆனால் தன் கொள்கைக்கு முரணாக தேர்தல் நடக்கும் நாளை மக்களுக்கு தூரமாக நகர்த்தி, மக்கள் ஓட்டு போடும் வாய்ப்பை தட்டி பறிப்பது ஜனநாயக கொலை. இது வெற்று கூச்சல் இல்லை.

14. மக்கள் ஓட்டு போடுவதற்கு சிரமங்களை ஏற்படுத்தி; மக்கள் ஓட்டு போடும் சிஸ்டத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தினால் நமது நாட்டின் ஓட்டு போடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விடாதா?

15. மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு என்பது மக்கள் உரிமை என்று பிரச்சாரம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் இலக்கு இதனால் பாதிப்படையாதா? 

16. வேலை நாட்களில் தேர்தலை நடத்தினால் 90 விழுக்காடு வாக்கு எப்படி பதிவாகும்? பிறகு எதற்காக தேர்தல் ஆணையம் 90 விழுக்காடு ஓட்டு பதிவாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறது?

17. ஒரு நாட்டின் தேர்தல் என்பது, அந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்க கூடிய ஆயுதம். அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டை நிருவாகிக்க புதிய நிருவாகத்தை தேர்தெடுக்க கூடியது. தேர்தல் நாள் என்பது நாட்டின் மக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இருக்ககூடிய நாளாக இருக்க வேண்டும்.

18. ஒரு பக்கம் வாக்களிக்கும் உரிமையை பேசும் ஆணையம்; மறுபக்கம் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்காக நடவடிக்கை எடுப்பது என்ன மாதிரியான ஆணையம்? 

19. நாட்டை நிருவாகம் செய்யக்கூடிய பிரதமரையும் அரசாங்கத்தையும் தேர்தெடுக்க கூடிய அந்த மகத்தான நாள் மக்களுக்கு ஏதுவான நாளாகவும் இலகுவான நாளாகவும் இருக்க வேண்டும். 

20. மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத; எரிச்சலை ஏற்படுத்தாத; சுலபமாக மக்கள் வாக்களிக்க கூடிய நாளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடியது. மக்களின் பக்கம் நின்று கடமை செய்ய வேண்டும். மாறாக மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளக்கூடியது அல்ல. 

21. 100 விழுக்காடு மக்களும் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

22. மக்களை மக்கள் ஆட்சி செய்யும் மரபின் வழி, ஒரு சிறந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தெடுப்பதற்கு; மக்கள் வாக்களிக்க; மக்களுக்கு சுலபமான நாளில் தேர்தக் நடத்தப்பட வேண்டும். அதுவே மக்களாட்சி முறைக்கு கொடுக்கப்படும் உண்மையான மரியாதை.

23. அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத; மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க கூடியவர்கள். மக்களை கருத்தில் கொண்டு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம் கடமையை செய்ய வேண்டும்.

24. மக்கள் தங்களை; தங்கள் நாட்டை நிருவாகிக்கக் கூடிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு நல்ல நாளை தேர்தெடுக்ககூடிய அடிப்படை விதிக்கூட இல்லை என்றால்; என்ன மாதிரியான ஜனநாயகம் இது?

25. தேர்தல் நடக்கும் நாளை மக்களுக்கு தூரமாக கொண்டு போய் வைத்து, மக்கள் ஓட்டு போடும் உரிமையை பறிப்பது, மக்களுக்கு செய்யும் துரோகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் முக்கிய பொறுப்பிலிருந்து மக்களை விரட்டியடிக்கும் செயல். 

25. புதன்க்கிழமைக்கு என்ன கேடு வந்தது? புதன்க்கிழமை ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு விட்டு வந்து ஓட்டு போட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் என்று மக்களைப் பார்த்து ஏளனமாக கேள்வி கேட்காமல்; மக்கள் வாக்களிக்க ஏதுவாக; சிரமம் இல்லாத ஒரு நாளை கொடுக்க உங்களுக்கு என்ன சிக்கல்? மக்களுக்கு சௌகரியமாக இருக்கும் ஒரு நாளை கொடுத்தால் உங்களுக்கு என்ன குறைச்சல்? என்ன கேடு வந்துவிட போகிறது?

26. தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை கொடுத்து விட்டு; தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துவதும் ஒரு வகையில் தேச துரோகம். 

27. ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அனைத்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து; மக்கள் அனைவரும் தங்கள் கடமையை சரிவர செய்ய ஒரு நல்ல நாளாக பார்த்து தேர்தல் நடத்துங்கள். நாட்டை வழி நடத்த மக்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது போல்; தேர்தலில் அனைத்து மக்களும் வந்து ஓட்டு போட மக்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

மதியழகன் முனியாண்டி
11 ஏப்ரல் 2018

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews