பொறந்த சூராவில் தமிழ்
FLASHBACK
1. என் மூத்த மகன் பிறந்த சமயத்தில், பிறப்பு பத்திரத்தில் ‘Keturunan’ பகுதியில் ‘தமிழ்’ என்று போட வேண்டும் என்கிற கோரிக்கையை பதிவிலாக அதிகாரியிடம் முன் வைத்தேன். அவர் மறுத்து விட்டார். நானும் விடாபிடியாக ‘தமிழ்’ என்றுதான் போட வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதினேன்.
2. நான் ‘Keturunan India’-வாக இருப்பதால், என் மகனுக்கும் ‘India’ என்றுதான் போட முடியும் என்றார். என்னுடைய ‘Keturunan’ மாற்றினால் மட்டுமே மகனுக்கும் ‘Keturunan’ மாற்ற முடியும் என்றார்கள். நான் என்னுடைய ‘Keturunan’ மாற்ற வேண்டும் என்றால், என் அப்பாவுடைய ‘Keturunan’ மாற்ற வேண்டும். அதாவது அப்பா, அம்மாவுடைய ‘Keturunan’ பின்பற்றியே குழந்தைகளுக்கு ‘Keturunan’ அமைகிறது. அதுவே நம் நாட்டு வழிமுறையாக இருப்பதாக சொன்னார்கள்.
3. ‘Keturunan’ என்பது இனவழி அல்லது வம்சாவளி என்றும், நான் தமிழ் இனவழியைச் சார்ந்தவன் என்று விளக்கி மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். ‘Indian Paspport’ வைத்திருப்பவர்களே இந்தியர்கள். நான் மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பதால், நான் ஒரு மலேசியன். மலேசியனாக இருக்கும் நான் இனத்தால் தமிழன் என்றும், நான் இந்திய நாட்டை சேர்ந்தவன் அல்ல என்று மேலும் விளக்கினேன்.
4. பதிவதிகாரிக்கு நான் சொல்வது புரியவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், சீக்கியர்கள் என்கிற அனைவரும் இந்தியர்கள் என்கிற அளவில் அவரது புரிதல் இருந்தது. மலேசியர்கள் என்பது நாட்டின் அடிப்படையில் குறிப்பிடுவது. இனம் என்பது வழி தோன்றலில் அடைப்படையில் குறிப்பிடுவது. பொதுவாக இந்தியர்கள் என குறிப்பிட்டாலும், நான் வழி தோன்றலில் அடிப்படையில் தமிழன் என்று விளக்கினேன்.
5. ‘Orang India’ என்பதற்கும் ‘Sekolah Tamil’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினேன். ‘Keturunan’ பகுதியில் சீக்கியர்கள் தங்களை ‘Sikh’ என்று எழுதுவதை சுட்டிக் காட்டினேன். கடைசியாக புரிந்துக் கொண்ட பதிவிலாகாதிகாரி என் மனுவை ஏற்றுக் கொண்டு, இறுதியில் என் மகன் பிறப்பு பத்திரத்தில் ‘Keturunan’ பகுதியில் ‘Tamil’ என்று பதிவு செய்து பத்திரத்தை என்னிடம் கொடுத்தார். அது ஒரு பெரும் பூரிப்பு.
6. அதுவரை என் வீட்டில் இருந்த அனைத்து பொறந்த சூராவிலும் ‘Keturunan India’ என்றே பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, என் மகன் பொறந்த சூராவில் ‘Keturunan Tamil’ என்று பார்த்த போதும் இனம் புரியாத ஒரு சந்தோசம் வந்தது. பத்து பதினைந்து நாட்கள் பதிவிலாக அலுவலகத்திற்கு அலைந்த கஷ்டமெல்லாம் போய் நிஜமாகவே ஒரு குதூகலம் வந்தது. அது சாதித்த பெருமை.
7. அதன் பிறகு என்னுடைய அடையாள அட்டையிலும் ‘Keturunan Tamil’ என்றே பதிவு செய்யப்பட்டது. நான் எந்த பாரம் பூர்த்தி செய்தாலும் தானாகவே ‘Keturunan Tamil’ என்றே காட்டுகிறது.
8. ‘Keturunan Tamil’ என்று பதிவு செய்து விட்டதால், நானும் என் குழந்தைகளும் ‘Lain-lain Kategori’-க்கு போய்விடுவோம் என்றும், அதனால், இந்தியர்கள் கோட்டாவின் கீழ் கிடைக்கும் எந்த சலுகையும் எங்களுக்கு கிடைக்காது என்றும், அப்போது நண்பர்களாக இருந்த சிலர் என்னிடம் கூறினார்கள். தமிழ் என்பது என் மொழி, இனம். என் இனத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதினால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் எதிர்கொள்ள நான் தயாராக இருந்தேன்.
Back To Present
1. வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில், இன்று வரை இந்தியர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் எனக்கு கிடைக்கிறது. ‘Keturunan Tamil’ என்று போட்டிருந்தாலும் நான் இந்தியன் கோட்டாவின் கீழ்தான் வருகிறேன். ‘Keturunan Tamil’ என்று போட்டதால் இன்றுவரை எனக்கு எந்த ஒரு சிக்கலும் வந்தது இல்லை.
2. பதினேழு வருடங்களுக்கு முன் ‘Keturunan Tamil’ என்று போடுவதில் பல சிக்கல்கள் இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. பதிவிலாகாவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அன்று நான் போராடி பெற்ற ஒன்று, இன்று இலகுவாக கிடைக்கிறது. ஆனால், இன்று பிறப்பு பத்திரம் எடுக்கும் எத்துனை தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் பிறப்பு பத்திரத்தில் ‘Keturunan Tamil’ என்று போடுகிறார்கள்? நம் உரிமையை நாம்தான் கேட்டு பெற வேண்டும். அப்படி கொடுக்கப்படும் உரிமையை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
3. மலேசியாவை பொறுத்த வரையில் இந்தியர்களின் பொது மொழியாக இருப்பது தமிழ். இந்தியர்களுக்கான வானொலி தொலைகாட்சி நிலையங்கள், பத்திரிக்கைகள், பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இயங்குகிறது. அரசாங்கமும் இந்தியர்களின் பொது மொழியாக தமிழ் மொழியையே ஏற்றுக் கொண்டுள்ளது.
4. தமிழ் என்பது நம் இனத்தின் மொழி. அந்த மொழி நம் உணர்வு. அந்த உணர்வு நம் அடையாளம். அடையாளத்தை தொலைத்துவிட்டு நாம் எதை சாதிக்கப் போகிறோம்?
M.மதியழகன்
6 ஏப்ரல் 2020
0 Comments