Friday, 25 February 2022

கெடாகாரர்கள்

1. இது சும்மா ஜாலியான ஒரு பதிவு. யாரும் சீரியஸாகப் படித்து விடாதீர்கள். இந்தப் பதிவைப் படித்துவிட்டு என் மீது யாரும் கேஸ் போடும் அளவுக்குப் போய் விடாதீர்கள். இந்தப் பதிவில் சம்பந்தப்பட்ட பலரும் என் முகநூலில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நாளைக்கே என் வீடு தேடி வந்து ‘ஏண்டா படவா ராஸ்கோல்!’ என்று என்னை திட்டாமல் இருந்தால் சரி. 

2. ‘கெடாகாரர்கள்’ என்பது எங்கள் கம்பத்தின் பிரசித்தி பெற்ற சொல்லாடல்களில் ஒன்று. ‘கெடாகாரர்கள்’ என்பது சகஜமாக எங்கள் கம்பத்தில் புழங்கும் ஒரு வட்டார வழக்காகிப் போனது. அதற்கு ஒரு சுவரசியமான முன் கதை காரணமாக உண்டு. 

3. தோட்டத் துண்டாடலுக்குப் பிறகு பெரும்பாலான நம் மக்கள் புறம்போக்கு நிலங்களில் குடியேற ஆரம்பித்தோம். அதன் தொடர்ச்சியாக, பூச்சோங் ஆறரை மைலில் இருந்த எங்கள் கம்போங் முகிபாவிலும் அதிகமான பிற மாநில இந்திய மக்கள் வந்து குடியேறினார்கள்.

4. அந்தக் காலகட்டமான 80-கள் மத்தியில் எங்கள் கம்பத்தில் குடியேறிய பிற மாநிலத்தவர்களில் கெடாகாரர்கள் அதிகமாக இருந்தார்கள். அப்படி குடியேரியவர்களில் எங்கள் வயதொத்த (80-களில்) இளசுகளும் குட்டி வாண்டுகளும் நட்பானோம். அதில் சில நட்பு இன்றும் நீடிக்கிறது. சிலர் எங்கள் குடும்பத்தில் உறவினர்களும் ஆகி போனார்கள். கெடாகாரர்களோடு 'பொண்ணு கொடுத்து பொண்ணு' எடுத்திருக்கிறோம்.

5. ஆரம்பத்தில் எங்கள் கம்பத்தில் வந்து குடியேறிய பெரும்பாலோர் கம்பெனிகளில்தான் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வயதொத்த மூன்றாம் தலைமுறை தலையெடுத்தபோது சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். 

6. அந்தக் காலகட்டத்தில் ‘லோரி பிசினஸ்’ என்பது இந்தியர்களிடையே ரொம்ப பிரபலம். ஆகவே, பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தவர்கள் ‘ஒரு டன் லாரிகள்’ வாங்கி தொழில் தொடங்கினார்கள். இந்த லாரி வியாபாரத்தின் போதுதான் கெடாகாரர்களின் ‘ஒற்றுமை’ குறித்து எனக்கு ஆழமாக தெரிந்தது.

7. எங்கள் இடத்திலிருந்த கெடாகாரர்கள் வாங்கும் லாரிகளுக்குப் பின்புறம் இருக்கும் பலகை பாடியில்(Body) பச்சை கலர் சாயம்தான் பூசுவார்கள். அதுவரையில் சாக்லேட் நிறத்தில் இருக்கும் வார்னிஷ் கலர் பலகை பாடியைப் பார்த்து பழக்கப்பட்ட எங்கள் கண்களுக்குப் பச்சை கலர் பலகை பாடி வித்தியாசமாக இருந்தது.

8. நான் என் மாமாவிடம், ‘ஏன் இவர்கள் பச்சை கலரையே அடிக்கிறார்கள்?’ என்று கேட்டேன். ‘அது கெடா மாநில கலர். கெடாவில் ஓடும் லாரிகளில் பலகை பாடியில் பச்சை கலர்தான் அடிப்பார்கள். அது கெடாவின் அடையாளம்’ என்று கூறினார்.

9. என் மாமா ஒரு சீன கம்பனியில் டிரன்ஸ்போர்ட் சேவையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரின் மிக நெருங்கிய கெடாகார நண்பர் ஒருவருக்கு அந்தக் குத்தகையில் ஒரு பகுதி ஏரியாவை கொடுத்தார். அதன் பின், பச்சை கலர் பலகை பாடிகள் அந்த சீன கம்பனியில் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே நுழைந்து மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டார்கள்.

10. மீண்டும் நான், ‘எப்படி மாமா?’ என்று கேட்டேன். ‘அதுதான் கெடாகாரர்களின் ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் அவர்களின் பலம். அந்தப் பலத்தினால் அவர்கள் மிகவும் துரிதமாக முன்னேறுகிறார்கள்.’ என்றார். ‘நாம் ஏன் அவர்களைப் போல் ஒற்றுமையாக இருப்பதில்லை’ என்று இன்னொரு கேள்வி கேட்டேன். ‘வந்தவர்களை வாழ வைக்கும் ஊர்; சிலாங்கூர். நாம் அப்படிதான்.’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

11. கெடாகாரர்களின் ஒற்றுமையையும் குழுவாக இணைந்து செயல்படுவதையும் நான் அசந்து போய் பார்த்தேன். எங்கள் கம்பத்திலிருந்து சுயமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று உன்னத நிலையில் இருக்கும் பலரையும் நான் வியந்து பார்க்கிறேன். அவர்களின் ஒற்றுமை என்பது அசைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

12. இது ஒரு புறம் இருக்க; இந்த எழுத்து துறைக்கு நான் ரொம்பவும் புதியவன். 2019-ஆம் ஆண்டு தொடங்கியே நான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இப்போதுதான் நம் நாட்டின் எழுத்தாளர்கள், எழுத்து சார்ந்து இயங்குபவர்கள், இலக்கிய வட்டங்கள் என கொஞ்ச கொஞ்சமாகச் சிலரின் அறிமுகங்கள் கிடைத்துள்ளன. 

13. கொஞ்ச தீவிரமாக எழுத்து துறைக்குள் நுழைந்திருக்கும் நான், இங்குள்ள இலக்கிய அரசியலைப் பார்த்து அரண்டு-மிரண்டு போயிருக்கிறேன். அரசியலைக் காட்டிலும் இந்த இலக்கியத்துறை மிகவும் மோசமாக இருக்கிறது. கட்சிக் கட்டிக் கொண்டிருப்பது, கூட்டு முறையில் இயங்குவது, தேவைப்பட்டவர்-தேவைப்படாதவர், ரவுடிஸம், பொறுக்கிதனம், துரோகம், வஞ்சனை, போட்டி, பொறாமைகள் எனப் பார்த்து தெறித்து போயிருக்கிறேன்.

14. எங்கள் கம்பத்தில் தனி அடையாளமாக இருந்த ‘கெடாக்காரர்கள்’ என்ற சொல்லாடல் எழுத்து துறையிலும் சகஜமாக பவனி வருகிறது. எழுத்து துறையிலும் கெடாகாரர்களின் பலமான ஒற்றுமையை என்னால் பார்க்க முடிகிறது. கெடாவின் ‘இலக்கிய நகர்வு(Literature Movement)’ என்று வரும்போது, தங்கள் சுய வெறுப்பு விருப்பு என்பதை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அதனாலேயே கெடாகாரர்களை எழுத்து துறையில் அசைக்க முடியவில்லை. இந்த ஒற்றுமையினாலேயே அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.

15. என்ன, எங்கள் கம்பத்தில் நாங்கள் வெளிப்படையாகப் பேசிக் கொண்டோம்; எழுத்து துறையில் திரைக்குப் பின்னால் அதை ஒரு ‘இலக்கிய நகர்வாக’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

16. உலக அரங்கில் பல விருதுகளைப் பெற்ற நம் நாட்டின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர், சமீபத்தில் அவர் எடுத்தப் பேட்டி ஒன்றில், ‘இலக்கிய நாதாரியை’ மிகவும் புகழ்ந்து ஒரு வரி எழுதியிருந்தார். அவர் எனக்கு நல்ல நண்பர் என்பதால், அவரிடம் நேரடியாகவே கேட்டேன், ‘அந்த ‘இலக்கிய கழிசடையால் நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது, எப்படி உங்களால் இந்த வரிகளை எழுத முடிந்தது’ என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

17. ‘கெடாவில் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. இலக்கியம் என்று வரும்போது நாங்கள் எங்களுக்குள் பகையைக் காட்ட முடியாது. கெடா இலக்கிய வட்டம் வேறு மாதிரி’ என்றார்.

18. ‘இலக்கிய திருடன் என்றும் காப்பி அடித்து கவிதை எழுதுபவர்’ என்றும் கெடாவிலிருக்கும் மூத்த எழுத்தாளர் ஒருவரை ‘இலக்கிய சாக்கடை’ கழுவி ஊத்தினான். பிறகு அந்த மூத்த எழுத்தாளர் வெட்கமோ, மானமோ, கூச்சமோ இல்லாமல் அந்தச் சாக்கடையோடு இணைந்துக் கொண்டார்.

19. அது குறித்து அந்த மூத்த எழுத்தாளரிடமே நான் கேட்டபோது, ‘கெடா எழுத்தாளர்களோடு ஆயிரம் பிணக்கம் இருக்கலாம். இலக்கியம் என்று வரும்போது நாங்கள் யாரையும் விட்டு கொடுக்க முடியாது. கெடாவின் இலக்கிய கலாச்சாரம் என்பது வேறு’ என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது.

20. அதேபோல், எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறார். நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர். தீவிர வாசிப்பில் இருக்கும் சிறந்த கல்விமான். இப்போதுவரை தடை செய்யப்பட்ட ‘பேய்ச்சி’ நாவலை சிலாகித்தே பேசுவார். கெட்ட வார்த்தைகள், ஆபாசமாக இருப்பதால் அதை நாம் நிராகரித்து விட முடியாது. நம் நாட்டின் வரலாற்றை பேசும் முக்கியமான நாவலது’ என்பார்.

21. மிகவும் மோசமான கெட்டவார்த்தைகளும் ஆபாசத்தையும் சேர்த்து ஒரு வரலாற்று சம்பவத்தை எழுதினால் அது நவீன இலக்கியமாகி விடுமா?’ என்று விடாமல் நானும் கேட்பேன், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் உருட்டு உருட்டு என்று உருட்டுவார். கெடாகாரர்கள் என்பதால் ’இலக்கிய சாக்கடைக்குப்’ பயங்கர முட்டு கொடுப்பார். அவர் கொடுக்கும் முட்டு ரொம்ப தமாசாக இருக்கும்.

22. நம் நாட்டில் ஓய்பெற்ற ஒரு கல்வி அதிகாரி, இலக்கிய நாதாரியோடு சேர்ந்து நாசமாய் போகிறாரே என்று எனக்கு வருத்தம் உண்டு. பிறகுதான் சாகவசமாக தெரிந்தது அவரும் கெடாகாரர்கள் என்பது. 

23. அண்ணன் – தம்பி போன்று ஒரு நெருங்கிய பந்தத்தில் எனக்கு கெடாவில் ஒர் இளம் எழுத்தாளர் இருக்கிறார். அவர் அடிக்கடி, ‘அண்ணா! பிரச்சனை என்று வந்தால் நான் கெடாகாரர்களோடு சேர்ந்து கொள்வேன்’ என்று சொல்லி சிரிப்பார்.

24. நவீனால் சண்முகசிவாவுக்கு இலக்கியத்தில் பெரிய சோதனை எல்லாம் வந்திருக்கிறது. தயாஜியின் கழிவறையும் பழிவாங்குதல் முறையும் சிறுகதையால், சண்முகசிவா குறித்து பத்திரிக்கையில் செய்தி எல்லாம் வந்தது. பிறகு, தான் வல்லினத்தில் ஆலோசகராக இல்லை என்று பத்திரிக்கை அறிக்கை எல்லாம் கொடுத்தார்.

25. இருந்தாலும், நவீனுக்கு வற்றாத அதரவை இன்றுவரை வழங்கி வருவது அந்த ‘கெடாகாரர்கள்’ என்கிற சொல்லாடலா? என்று கேள்வி எழுப்புகிறேன். 

26. நன்றாகக் கூர்ந்து கவனித்தால், நம் நாட்டின் இலக்கிய நகர்வு கெடாவிலிருந்தே தொடங்குவது போல ஒரு கட்டமைப்பு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் முக்கியமான எழுத்து ஆளுமைகள் எல்லாம் கெடாகாரர்கள் போலவே நம் கண்களுக்குத் தெரியும். தங்காக் மா.ராமையா, முரசு நெடுமாறன் போன்ற ஓரிருவரை போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார்கள்.

27. கெடாவும் பினாங்கும் எல்லை மாநிலமாக ஒட்டி இருப்பதாலும், கூலிம்-பட்டர்வெர்த் உறவினாலும் கெடா எழுத்தாளர்களும் பினாங்கு எழுத்தாளர்களும் எப்போதும் ஒரு தாய் வயிற்று மக்களாக இருப்பார்கள். அப்படியே கொஞ்சம் நகர்ந்து பேராக் எழுத்தாளர்களைச் சித்தப்பா-பெரியப்பா மக்களாகத் தங்களோடு இணைத்து கொள்வார்கள்.

28. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு அடுத்து மலேசியாவிலேயே மிகவும் வலுவான, முக்கியமான எழுத்தாளர் சங்கம் என்றால் அது கெடா எழுத்தாளர் சங்கம்தான்.

29. மலேசியாவிலேயே என்னுடைய நாவல்கள் அதிகம் விற்பனையாவது கெடாவில்தான். 250-யிலிருந்து 300 நாவல்கள் வரை கெடாவில் மட்டுமே விற்பனையாகும். அதில் பெரும்பாலும் இளைஞர்கள் ஆதரவுதான் அதிகமாக இருக்கும். 

30. இரண்டே இரண்டு கெடா எழுத்தாளர்கள்தான் இன்று வரை என் நாவல்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறார்கள். இதுவரை கெடாவில் எந்த ஒரு மூத்த எழுத்தாளர்களும் என் நாவலை வாங்கியது இல்லை. வல்லினத்தையும், இலக்கிய சாக்கடையையும் நான் கடுமையாக எதிர்ப்பதால் அவர்கள் என் நாவலை வாங்குவதில்லையா? இல்லை, குழு சார்ந்து இயங்குவதால் அவர்கள் என் நாவலை வாங்குவதில்லையா? என்று தெரியவில்லை.

31. ‘நீ அவர்களின் நாவலை வாங்கி இருக்கிறாயா?’ என்று பதிலுக்குக் கேட்கலாம். 2019-ஆம் ஆண்டு நான் என் முதல் நாவலை வெளியிட்ட பிறகு, பெரும்பாலும் மலேசியாவில் வெளியிடப்படும் நாவல்கள்/புத்தகங்களை வாங்கிவிடுவதுண்டு. 

32. எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் புத்தகம் வாங்குதல் என்பது ‘மொய் கணக்கு’ போன்றது. என் அப்பா-சித்தப்பா ஏகப்பட்ட மொய் எழுதியிருக்கிறார்கள். நம் நாட்டில் வெளியிடப்பட்ட பெரும்பாலும் புத்தகங்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிய மொய்க்காவது என் நூல்களை வாங்கி வாசிக்கலாம்.

33. கெடாகாரர்களின் இந்த இலக்கிய நகர்வு எனக்கு அசூயை ஏற்படுத்தவில்லை. மாறாக, எனக்கு பொறாமையைக் கொடுக்கிறது. கெடாகாரர்களிடம் இருக்கும் ஒற்றுமை சிலாங்கூரிலோ, மற்ற மாநிலத்திலோ இல்லை. 

34. கெடாகாரர்களின் ஒற்றுமை அவர்களுக்கு பலமாக இருக்கிறது. அந்த பலம் அவர்களை எழுத்து துறையில் மிகவும் துரிதமாக முன்னேற வைக்கிறது. சுய அடையாளத்தோடு தனித்த இலக்கியங்களை நிறுவி வருகிறார்கள்.

மதியழகன் முனியாண்டி
7/10/2021

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews