Friday, 25 February 2022

A Day(2017) – Psychokinesis(2018)

1. A Day 2017-ஆம் ஆண்டு வெளிவந்த கொரியன் படம். ஹீரோ ஒரு பெரிய டாக்டர். வெளிநாட்டிற்கு சென்று விட்டு விமானத்தில் நாடு திரும்புவார். விமானத்தில், விமான பணிபெண் டாக்டரிடம் ஆட்டோகிராப் வாங்குவார். விமானம் விட்டு வெளியே வரும்போது, டாக்டரின் மகள், ஏறத்தாள பன்னிரெண்டு வயது, அப்பாவுடன் போனில், சரியாக பன்னிரெண்டு மணிக்கு வந்து விடும்படியும், பன்னிரெண்டு மணிக்கு ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் தாம் காத்திருக்க முடியாது. கிளம்பி விடுவேன் என்று கட்டளையிடுவாள். 

2. பன்னிரென்டு மணிக்கு அரைமணி நேரம்தான் இருக்கும். அவசரமாக கிளம்புவார். அந்த நேரம் பார்த்து, விமான நிலையத்தில் ஒரு குழந்தை பையன் சாக்லேட் மிட்டாயை விழுங்கி விடுவான். அந்த பையனை டாக்டர் காப்பாற்றுவார். விமான நிலையம் விட்டு வெளியே வருவார், அங்கே பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அங்கிருந்து எஸ்கேப் ஆகி, கார் நிறுத்தும் இடத்திற்கு வந்தால், பக்கத்து கார்காரர் ரம்பத்தைப் போடுவார். அவரிடமிருந்து தப்பித்து நெடுஞ்சாலையில் போவார்.

3. டோல் சாவடியில் ஆயிரம் வோன் பணம் கொடுப்பார். சில்லரை இருக்காது. மணி ஆகிக் கொண்டே இருக்கும். அடித்து பிடித்து பன்னிரென்டு பத்துக்கு, மகள் காத்திருக்கும் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள டிராபிக் லைட்டில் வந்து நிற்பார். வலப்பக்கம் அப்போதுதான் ஒரு விபத்து நடந்திருக்கும். ஒரு டாக்சி தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும்.

4. மகள் காத்திருக்கும் பஸ் ஸ்டாப் இருநூறு மீட்டரில் இருக்கும். மகளை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு, விபத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்ற, காரை விட்டு இறங்கி, விபத்து நடந்த இடத்திற்கு செல்வார். டாக்சியில் பயணித்த பயணியும் டாக்சி ஓட்டுனரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, தூரத்தில் ஒரு பெண் அடிப்பட்டு நடுசாலையில் கிடப்பதாக கத்துவார்கள். அதற்குள், ஆம்புலன்ஸ் வந்துவிடும். 

5. நடுசாலையில் கிடக்கும் பெண்ணை நோக்கி டாக்டர் ஓடுவார், காலணி ஒன்று தனியாக சாலையில் கிடக்கும். அது டாக்டர் மகளின் காலணி. பதற்றத்தில் ஓடுவார். நடுசாலையில் அவரின் மகள் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பாள். ரிப்பிட்டு. கண் விழித்து பார்ப்பார் விமானத்தில் இருப்பார்.

6. அடித்து பிடித்து ஓடுவார், மகள் டாக்சியில் அடிப்பட்டு நடுசாலையில் இறந்து கிடப்பாள். ரிப்பிட்டு. இந்த முறை ஆம்புலன்ஸ் டிரைவர் டாக்டரின் சட்டையைப் பிடித்து, நீ எப்படி ஒவ்வொரு முறையும் இதே நேரத்தில் இங்கு வருகிறாய்? என்று கேட்பான். டாக்சி பின்சீட்டில் பயணித்து, அடிப்பட்டு செத்து கிடப்பது, ஆம்புலன்ஸ் டிரைவரின் மனைவி. அவள் கர்ப்பமாக இருப்பாள். 

7. இந்த டைம் லூப்பில் சிக்கிக் கொண்ட டாக்டரும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் ஒன்று சேர்ந்து ஓர் உண்மையைக் கண்டு பிடிப்பார்கள். நடப்பது விபத்து இல்லை. திட்டமிட்ட கொலை. டாக்டரின் மகளையும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மனைவியையும் யார்? எதற்காக? கொலை செய்கிறார்கள் என்பதனை கண்டுபிடிப்பார்கள்.

8. டாக்டரின் மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும்போது, டாக்டரோடு சேர்ந்து நாமும் பதறுவோம். கர்ப்பமாக இருக்கும் மனைவி இறந்து கிடக்கும்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் சேர்ந்து நாமும் அழுவோம். 

9. ஒவ்வொரு டைம் லூப்பிலும் ஒரு டுவிஸ்ட் வைத்திருப்பார்கள். திரைக்கதையின் நுணுக்கங்களை அப்படியே படம் பார்க்கும் நம் மீது இறக்கி, கதையோடு அழைத்து செல்வார்கள். வலி, சுயநலம், வேதனை மூன்று உணர்வுகளையும் நமக்குள் கடத்தி செல்வார்கள். ஒரு கதை சொல்லல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் A Day கொரியன் படம். 

10. Psychokinesis என்பது 2018-ஆம் ஆண்டு வெளிவந்த முதல் கொரியன் சூப்பர் நேச்சுரல்(Supernatural) படம். விண்ணிலிருந்து கல் ஒன்று பூமிக்கு பாயும். அப்படி பூமிக்கு பாயும் கல்லில் உள்ள திரவகம் பூமிக்கு அடியில் ஓடும் தண்ணிரில் கலந்து விடும். அதை குடிக்கும் ஹீரோவுக்கு இருமல் மற்றும் வயிற்று வலி ஏற்படும். பிறகு, தனக்கு சூப்பர் பவர் கிடைத்திருப்பதை அறிந்து கொள்வான்.

11. தனக்கு சூப்பர் பவர் கிடைத்த அதே தினத்தில், விவாகரத்து ஆகிவிட்ட தன் முன்னாள் மனைவி இறந்து விட்டதாக ஹீரோவுக்கு செய்தி கிடைக்கும். ஹீரோவுக்கு இருபது வயதில் ஒரு மகள் இருப்பாள். மகளுக்கு ஒரு சிக்கல் வரும். இறந்து போன அம்மாவும் மகளும் ஒரு சாப்பாட்டு கடை நடத்திக் கொண்டிருப்பார்கள். அந்த ஏரியாவில் ஒரு ஷாப்பிங் மால் கட்டுவதற்காக, இவர்களை அடித்து துரத்துவதற்கு வில்லன் ஆட்கள் பெரிய ரவுடிகள் கூட்டத்தை கூட்டிக் கொண்டு வருவார்கள். அந்த சண்டையில்தான் ஹீரோவின் முன்னாள் மனைவி அடிப்பட்டு இறந்து விடுவாள். ஹீரோவின் மகள் வில்லன் கூட்டத்திற்கு எதிராக போராடுவாள்.

12. மகளின் பிரச்சனை அறிந்து, அவளுடனேயே தங்கி அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஹீரோ முடிவெடுப்பார். ஆனால், மகள் அப்பாவை ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆனாலும், ஹீரோ தன் சூப்பர் பவரைக் கொண்டு வில்லன்களையும் போலிசையும் தூக்கி பந்தாடுவார். நூறு இருநூறு பேர்களை தன் கையாலேயே தூக்கி பந்தாடுவார்.

13. ஒரு கட்டத்தில் போலிஸ் ஹீரோவை கைது செய்து லாக்காப்பில் அடைத்துவிட்டு, ஹீரோவின் மகளையும் பிற கடைகாரர்களையும் ஒரு கட்டடத்தில் அடைத்து, கட்டடத்தில் தீ மூட்டி விடுவார்கள். லாக்காப்பில் இருக்கும் ஹீரோ விசயம் அறிந்து, லாக்காப்பை உடைத்துக் கொண்டு வந்து, மகளையும் மக்களையும் காப்பாற்றுவார். 

14. வில்லன் ஆட்களையும் போலிஸையும் அடித்து தும்சம் செய்வார். இறுதியில், தன் குற்றத்தை உணர்து போலிசில் சரண்டர் ஆவார். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வரும் ஹீரோ தன் மகளையும் மக்களையும் காப்பாற்ற மகளுடனேயே தங்கி விடுவார். மகளும் அப்பாவை ஏற்று கொள்வாள். வில்லன் கும்பலுக்கு எதிராக, அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து, அவ்வூர் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கும். 

15. சூப்பர் ஹீரோ கதை என்றால், சூப்பர் ஹீரோ சாகசம் செய்ய வேண்டும். சூப்பர் ஹீரோ கதைகளின் அடிப்படை விதியே சாகசம்தான். சூப்பர் ஹீரோ கதைகளுக்கு சில அடிப்படை elements இருக்கிறது. அதனால்தான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க் போன்ற கதைகள் நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ராமாயணத்தில் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் விட, அனுமான் கதாபாத்திரம் நமக்கு மிகவும் பிடித்து போகிறது.

16. எப்போவாவது நேரம் இருந்தால்; சூப்பர் ஹீரோ கதைகள் எழுதும் முறை குறித்தும், சூப்பர் நேச்சுரல் கதைகளின் விதி, element குறித்தும் ஒரு கட்டுரை எழுதும் ஆர்வம் உள்ளது. 

17. இப்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். மாநாடு படமும் மின்னல் முரளி படமும் என்னால் அரைமணி நேரம்கூட பார்க்க முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews