45-வது சென்னை புத்தகக் காட்சி
1. நான் எழுதிய நிலங்களின் நெடுங்கணக்கு மற்றும் பேஎய் வழி கடிகை இரு நாவல்களும் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி 2022-யில் வானவில் புத்தகாலயம் பதிப்பின் வெளியீடாக புதிய வடிவில், புதிய பொலிவில் அச்சு நூலாக வெளியீடு காண்கிறது.
2. கடந்த இரண்டு வருட பெரும் முயற்சிக்கு பிறகு இந்த வருடம் இது சாத்தியம் ஆனதில் மிகுந்த மகிழ்ச்சியும் பேரானந்தமும். சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது நூல்கள் விற்பனையில் இருக்கிறது என்பதே மிக பெரிய கௌரவம்.
3. அந்த கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்த சினிமா பட தயாரிப்பாளர் திரு. ரமேஷ் சார் அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றியை இந்த நேரத்தில் நான் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அவர் இல்லாமல் இது எல்லாம் நடந்திருக்காது. அவரே மூலமும் முதலும்.
4. அடுத்தது, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கார்த்திகேயன் புகழேந்தி. என் இரு நாவல்களையும் வாசித்த உடனேயே என்னை அழைத்து, தமிழில் இதுபோன்ற நாவல்களை வாசித்து ரொம்ப நாள் ஆச்சு என்று மனம் திறந்து பாராட்டியதோடு, என் இரு நாவல்களையும் பதிபிக்கும் உரிமையை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். அவருடைய கனிவான பேச்சும் அன்பும் என்னை மிகவும் கவர்ந்தது.
5. தனி அக்கறை எடுத்துக் கொண்டு முகப்பு அட்டை தொடங்கி, ஒவ்வொரு பக்கமும் பார்த்து பார்த்து செதுக்கினார். இறுதி வடிவமைப்பைப் பார்த்ததும் எனக்குள் எழுந்த பேரனாந்தம் இன்னமும் அடங்கவில்லை. அது நெகிழ்வான தருணம்.
6. அமேசன் கிண்டலில் என் நாவல்களை வாசித்த வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் கூப்பிட்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ் நாட்டில் நம் எழுத்து அச்சு நூலாக வருவதில் ஏற்படும் சுகம் அலாதியானது. வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.
7. நிலங்களின் நெடுங்கணக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேசியாவில் அதிகம் விற்பனையான ஒரே தமிழ் நாவல். இதுவரை 2500 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. சோழர்களின் நூசாந்திரா(தென்கிழக்காசியா) வருகைக்கு முன்பே பாண்டியர்கள், பல்லவர்களின் வருகையைப் பற்றி இந்நாவல் பேசுகிறது. தமிழில் இது ஒரு புதிய தளத்தில், புதிய வடிவில் எழுத்தப்பட்ட நாவல்.
8. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை சிறந்த நாவல்களுக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் வழங்கப்படும் மலேசியாவின் மிக உயரிய விருதான டான் ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக விருது 2020-ஆம் ஆண்டில் பேஎய் வழி கடிகை நாவலுக்கு கிடைத்தது.
9. மலாயத் தமிழர்களின் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின் வரலாற்றை இந்நாவல் பேசும் அதேவேளையில், வட்டார மொழி நடையில் மண் சார்ந்து எழுதப்பட்ட தமிழ் நாவல் இது. சமகால மலேசியத் தமிழ் இலக்கிய நகர்வையும் போக்கையும் அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல்கள் இவை இரண்டும்.
10. என் கனவை நனவாக்கிய திரு. ரமேஷ் சாருக்கும், சிக்ஸ்த்சென்ஸ் கார்த்திகேயன் புகழேந்தி -க்கும் ஒரு ஸ்பெஷல் நன்றியும்; கூடவே ஒரு பெரிய பூச்செண்டும் இன்றைய வலைண்டைன் டே பரிசாக சமர்பிக்கிறேன். சியர்ஸ் …
0 Comments