நிலங்களின் நெடுங்கணக்கு விமர்சனம் - 5 ஆசிரியர் சண்முகநாதன்
"நிலங்களின் நெடுங்கணக்கு"
இது காண்போரை வியக்கச் செய்யும் நூலின் தலைப்பு.ஐவகை நிலங்களை இலக்கியத்தின் வழி கண்டிருக்கின்றோம். நெடுங்கணக்கை மொழி வழி அறிந்திருக்கின்றோம்.ஆக வெவ்வேறு சூழலில் அறிந்தவற்றை ஒன்றிணைத்து நாவலின் வழி புதிய ஒன்றினைச் சொல்ல முயற்சிப்பது ஒரு புதிய முயற்சி.
நூலின் முகப்பு அட்டையை வைத்து அதன் தரத்தை உறுதிசெய்யக் கூடாது எனும் வரிகளில் உண்மை இருந்தாலும், தலப்பினைத் தாங்கிய முகப்பு வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் கிஞ்சீற்றும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் "நிலங்களின் நெடுங்கணக்கு" எனும் நூலின் தலைப்பு காண்போரை வாசிக்கத் தூண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவதொரு இலக்கியப் படைப்பினை உலகிற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்று நமது நாட்டின் மூத்த கல்வியாளரும் இலக்கியவாதியுமான ஐயா மன்னர் மன்னன் அவர்கள் அடிக்கடி கூறுவார். அவரது கூற்றில் உண்மை இருக்கிறது. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர் தான் பாடமாக உள்ளனர். வாழ்ந்தவரின் வாழ்வியல் பார்வை, அதன்வழி பெற்ற பட்டறிவு, அதனால் நிறுவப்படும் சிந்தனத் திறன் ஆகியன ஒவ்வொரு மனிதனையும் சிறந்த படைப்பாளியாக மாற்றுகின்றது. இவ்வகையானவர்களால் உருவாக்கப்படும் படைப்புகள் வாழ்வியல் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கு பயனாக அமையும் என்றால் தவறில்லை. அவ்வகையில் நூலாசிரியர் மதியழகன் பிஞ்சிலே பழுத்த பழமாகத் திகழ்கின்றார்.இளவயதிலேயே பலதுறை அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார் என்பதை அவருடன் அளவளாவிய பொழுது நன்கு அறிய முடிகின்றது. அவற்றை முதலாக வைத்து நல்ல பேச்சு மற்றும் எழுத்து ஆளுமையோடு படைப்புலகில் அடியெடுத்து வைத்திருப்பது அவரது ஆற்றல் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
அரசியல்வாதிகளை வைத்தே இந்நாட்டில் இலக்கியப் படைப்புகளை அரங்கேற்றிய மரபு உடைத்தெறியப் பட்டு , இலக்கியம் மற்றும் மொழியினைப் பின்புலமாகக் கொண்டவரை வைத்து இலக்கியப் படைப்பினை வெளியீடு செய்வது, படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரம் என்றே கருதப்பட வேண்டும். அதுவும் பள்ளிபருவத்திலிருந்தே தன் சொல்லிய கதைகளைச் சலிக்காமல் கேட்டு வந்த நண்பர்கள் , காலப்போக்கில் ஒருவர் விரிவுரைஞராகவும் , மற்றொரு கல்வி அதிகாரியாகவும் இருக்கும் சூழலில் அவர்களை வைத்தே நூலை வெளியீடு செய்து, இலக்கியத்தில் கண்ட நட்பின் ஆழத்தை அரங்கேற்றம் செய்கின்றார் பன்முகப் படைப்பாளரான நூலாசிரியர் மதியழகன். ஆக நூல் வெளியீட்டின் போது அரங்கமே நட்பால் மணத்தது என்றால் மறுப்பாரில்லை !
எந்தவொரு அச்சு ஊடகத் துணையுமின்றி பரபரப்பான விளம்பரமின்றி நடத்தப்பட்ட இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை மனநிறைவை அளிக்கின்றது. அது எப்படி சாத்தியமானது என்று வினவிய போது, முழுக்க முழுக்க மின்னூடகங்களான முகநூல் மற்றும் புலனக் குழுக்களின் வழியே தம்மால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்த தென்று பெருமையாகக் கூறுகின்றார் படைப்பாளர் மதியழகன். இவர் சமுகத் தகவல் ஊடகங்களை முறையாகப் படுத்தத் தெரிந்தவர் என்றால் மிகையில்லை.
படைப்பாளன் ஏதோ ஒரு "தேடல் நோக்கத்திற்காக" ஒன்றைப் படைக்கின்றான். வாசகன் ஏதோ ஒன்றைத் தேடும் முயற்சியில் அதனை வாசிக்கின்றான்.இறுதியில் படைப்பாளன் வென்றானா அல்லது வாசகன் வென்றானா என்பதே வாசிப்பின் உச்சமாக உள்ளது.எது எவ்வாறாக இருப்பினும் தேடல் மட்டும் தொடர்கிறது. தேடல் தானே வாழ்க்கை !
நிலங்களின் நெடுங்கணக்கில் உங்கள் தேடலைத் தேடுங்கள்.
வாழ்த்துகள் ஐயா மதியழகன் அவர்களே .
நன்றி.
இரா.சண்முகநாதன் நடேசன்.
மலேசியா
17.3.2019.
https://www.facebook.com/shanmuganathan.nadeson?__tn__=%2CdCH-R-R&eid=ARCTliV2Dhn-GtBZmXIFNAdZPSPRlIKPQrF6T2NHwy8CyEombAl-L7iFyTp4zlE1BuI8esHj6HdFaJho&hc_ref=ARR0WG0UEuVLApPlsVMjX_qUA-SsyGnWpl5vs6ystCQ21rE6dhLIFKYF1RRJxtkuDvs&fref=nf
0 Comments