நிலங்களின் நெடுங்கணக்கு வாசகர் விமர்சனம் 2- இந்துஜா ஜெயர்ராமன்
மதியழகனின் ‘நிலங்களின் நெடுங்கணக்கு’
முகநூல் அறிமுகமாகத்தான் திரு. மதியழகனை எனக்குத் தெரியும். நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் சமயத்தில் அவரது அரசியல் பதிவுகளை/கட்டுரைகளைப் படித்துள்ளேன். பிறகு, அவருடைய எழுத்துருவாக்கத்தில் ‘நிலங்களின் நெடுங்கணக்கு’ என்ற நாவல் அவரின் முதல் நூல் படைப்பாக வெளிவந்ததை அறிந்தேன். நூலின் முகப்பு மற்றும் பின் அட்டைகளைப் பதிவிட்டிருந்தார். ‘கோத்தா கெலாங்கி எனும் காணாமல் போன (Lost City) நகரத்தைத் தேடிக் கொண்டு சரித்திர ஆய்வாளர் செல்லதுரை என்பவர் மலேசியா வருகிறார். ஜொகூர் காடுகளில் தேடும் பணியில் காணாமல் போகிறார்’ என்ற விவரிப்பினைப் படித்தவுடன் இந்த நாவலைப் படித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னைத் தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டது.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன் கட்டுரைகளின் வழியாகத்தான் ‘கோத்தா கெலாங்கி’ புராதன நகரைக் குறித்து முதன் முதலில் நான் அறிந்து கொண்டேன். பள்ளிப் பாடப் புத்தகங்களில் கடாரத்தின் பூஜாங் பள்ளதாக்கு குறித்துதான் உள்ளது.
கோத்தா கெலாங்கி என்பது உண்மையிலேயே காலத்தால் கரைந்துபோன ஓர் இந்து சாம்ராஜ்யம். ‘அங்கோர் வாட்’-யை விட பழைமையானதாக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் பெற்றது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் பழைமையானது எனும் தகவல்களை அறிந்தவுடன் எனக்குத் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் முன் நிற்பதைப் போன்றொரு மலைப்பு; சிலிர்ப்பு. அங்கு நின்றபோது கண்களைக்கூட மூட மனமில்லாமல் அகல விரித்து இராஜராஜ சோழன் கம்பீரமாக நடந்து கருவறையை நோக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். உடன் கருவூராரும் மங்கலாகத் தெரிவார். காரணம், இராஜராஜ சோழனாக நடிகர் திலகத்தை நான் உருவேற்றி வைத்திருந்தேன். இந்தக் காட்சி ஒவ்வொரு முறையும் நான் தஞ்சை பெரிய கோயிலின் முன் நிற்கும்போதெல்லாம் மனத்தில் தோன்றி விலக ஓரிரு நாள்கள் எடுத்துக் கொள்ளும். இதே உணர்வுதான் கோத்தா கெலாங்கியை நினைக்கும்போதும் என்னுள் இயல்பாகத் தோன்றும்.
இத்துணை நெடிய அதிசய வரலாற்றுச் சுவடைத் தாங்கிக் கொண்டிருப்பது உண்மையிலேயே நம் நாட்டுக்குத்தானே பெருமை. அதை ஏன் வெளிக்கொணர முயற்சி செய்யவில்லை? நாவலில் இதே நியாயமான கேள்வியை, ‘நம்மிடம் ஒரு பெரிய சிவிலிசேஷன் இருந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்ல ஏன் தயங்க வேண்டும்?’ என்று மங்கை கேட்கிறாள். அவள் கேட்ட இந்தக் கேள்விக்கு எப்படி விஜயன் பதில் தெரிந்தும் அதைச் சொல்லாமல் மெளனமாகக் கடந்து செல்கிறானோ அந்த மாதிரிதான் நாமும் கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.
இருப்பினும், இதனையே கருவாக எடுத்துக் கொண்டு சரித்திர நாவல் படைக்கும் முயற்சியை முன்னெடுத்த எழுத்தாளர் மதியழகனுக்கு நாம் வாழ்த்துக்களைச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரைத் தொடர்பு கொண்ட இரு நாள்களுக்குள் புத்தகம் கையில் கிடைக்கப் பெற்றது. முகப்பு அட்டையையே 5 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒன்றிற்கான ஏக்கம், தவிப்பு, வேதனை, பெருமிதம், மகிழ்ச்சி, அழுத்தம், மலைப்பு அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து மனத்தைப் பிசைந்தது. அனைத்திற்கும் வடிக்காலிட்டு நாவலுக்குள் செல்ல சற்று நேரம் தேவைப்பட்டது.
மிக நேர்த்தியான எழுத்து நடையும் விறுவிறுப்பான கதையோட்டமும் நாவலைக் கண்டிப்பாக ஒரே இரவினில் படித்து முடிக்கச் செய்யும். ஒவ்வொரு கதைமாந்தர்களின் பாத்திர வார்ப்பும் தேவைக்கேற்ப கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. இந்த நாவலின் வெற்றிக்கான ஆசிரியரின் உழைப்பு, அவரின் எழுத்துக்களில் நன்றாகவே தெரிந்தது. மேலும், வரலாற்றுக் குறிப்புகளைக் கையாண்ட பாணி, சித்தர் இலக்கியம்-அரசியல் நுட்பங்கள் குறித்த ஆசிரியரின் தேடலும் தெளிவும் வியப்பூட்டுகின்றன. மலேசிய, தென்கிழக்காசிய வரலாற்று-அரசியல் செய்திகளைக் கொண்ட மிக முக்கிய படைப்பிலக்கியமாக இந்த நாவலைக் கருத முடிகிறது.
இந்நாவலின் முடிவு ஒரு தொடர்கதையின் துவக்கம் என அறிந்த நேரத்தில் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அந்த இரண்டாம் பாகம் முழுக்க கோத்தா கெலாங்கியைக் குறித்த அற்புதத்தைச் சுமந்து வரக்கூடும்; செல்லதுரை அந்தத் தொலைந்(த்)த நகரத்தைப் பற்றி தாம் கண்டுபிடித்து வைத்திருக்கும் மொத்த வித்(ந்)தையையும் இறக்கப் போகிறார் என எண்ணும்போதே ஆர்வம் தாங்க முடியவில்லை.
எனக்குத் தெரிந்து இந்த நாவலில்தான் ‘கெலிங்’ என்னும் பதத்தை இந்தியர்களை நோக்கி மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கருதுகிறேன். நடப்பியலைக் குறித்த ஆசிரியரின் பார்வை அவரின் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது. குறிப்பாக, செல்லதுரையைத் தேடும் முயற்சியில் இறங்கும் விஜயனுக்குப் பல தொல்லைகள் நேருகின்றன. அவற்றுள் ஒன்று, அவன் உறங்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த தொப்பேங் குழுவின் கும்பல் அவனைப் பயமுறுத்தும் நோக்கத்தில் வீட்டுப் பொருள்களையெல்லாம் இடமாற்றி வைக்கின்றது. பூட்டிய வீட்டில் நடக்கின்ற இந்தச் செயலின் மூலம் ஆசிரியர் முன்வைக்கின்ற தத்தவம் அவரின் எழுத்தின் மேலுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகின்றது. அவர் அந்த நிகழ்வைப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்:-
“இந்த உலகில் யாருக்கும் எங்கும் வேலிகள் கிடையாது. பூட்டுகள் கிடையாது. பூட்டிய வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது மாயை. பொதுவெளியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…நாமாகப் போட்டுக் கொண்டது கூரை. அந்தக் கூரையை யார் வேண்டுமானாலும் பிய்த்துக் கொண்டு உள்ளே வரலாம். நம்மைத் தொட்டுப் பார்க்கலாம்.”
அறியாமையைக் குறித்து இந்தப் புரிதலை தந்த அவரின் எழுத்துக்கள் மேலும் பல புரிதல்களைக் கொடுக்க வல்லவை என்றே நான் கருதுகிறேன். மதியழகனின் இந்த நாவலை மலேசியத் தமிழ்ப் படைப்பு எனச் சுருக்க வேண்டியதில்லை. நம் மண்ணின் கதையைப் பேசும் அனைத்துலகப் படைப்பிது. அந்த வரிசையில் ‘நிலங்களின் நெடுங்கணக்கு’ நிச்சயம் முக்கிய இடம்பெறும். வாழ்த்துக்கள்!
https://www.facebook.com/hinduja.jayerraman/posts/10211284819316242
0 Comments