Monday, 2 April 2018

மிஸ்டர் வேதா!

1. இந்து உரிமைகள் போராட்ட படை(Hindu Rights Action Force) என்பதன் சுருக்கம்தான் ஹிண்ட்ராஃப். கோவில்கள் உடைப்பை முன்நிறுத்தி; நமது உரிமைகள் மீட்கபட வேண்டும்; நமக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், நாம் ஒடுக்கபடுகிறோம்; நம் தேவைகளை கேட்டு வாங்குவோம் என்கிற கோரிக்கையை முன் வைத்து ஹிண்ட்ராப் உதயமானது.
2. மிக குறுகிய காலத்தில் ஹிண்ட்ராப் எழுச்சி பெற்றது. 2007-ஆம் ஆண்டு மிக பெரிய பேரணியை இண்ட்ராப் ஏற்பாடு செய்தது. பிரிடிஷ் அரசாங்கம் மீது வழக்கு போட்டு; நம் நாட்டில் வாழும் அனைத்து இந்திய மக்களுக்கு; தலைக்கு ஒரு மில்லியன் வாங்கி தருவதாக சொன்னார்கள். அதற்காக மனு கொடுக்க பிரிடிஷ் தூதரகத்தின் முன் ஒன்றுகூட நம் அனைவரையும் அழைத்தார்கள்.
3. யாரும் எதிர்ப்பார்காத அளவுக்கு லட்ச கணக்கான மக்கள் திரண்டார்கள். கோலாலம்பூரே திணறிப் போனது. மிகப்பபெரிய வெற்றி. அதுவரை நம்மை அலட்சியமாக பார்த்தவர்கள்; நமக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன் இப்படி ஒரு பேரணியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். கெத்தாக வந்து நின்றோம்.
4. நம் மக்கள் மீது கண்ணிர் புகையை வீசியும், தண்ணீர் அடித்தும் விரட்டினார்கள். யாரும் பின் வாங்கவில்லை. அடியை வாங்கிக் கொண்டு அங்கேயே நின்றார்கள். அல்ஜிரா முதற்கொண்டு பல டிவி சேனல்கள் லைவ்வாக காட்டினார்கள்.
5. இண்ட்ராப் பேரணியின் வெற்றியை, அடுத்து வந்த 2008 பொது தேர்தலில் எல்லோரும் அறுவடை செய்தார்கள். வெண்ணையை திருடியவன் ஒருத்தன்; விரலை சூப்புபவன் இன்னொருவன் என்பது போல், ஹிண்ட்ராப் பேரணியின் சக்தியை காட்டி பலரும் 2008 பொது தேர்தலில் வெற்றி பெற்று வந்தார்கள்.
6. 2008 பொது தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஹிண்ட்ராப் பேரணி. அதன் பிறகு நடந்தது எல்லாம் வேதனையாக சம்பவங்கள்.
7. உதயமூர்த்தி, கணபதி ராவ், வசந்தகுமார், மனோகரன், கங்காதரன் ஐவரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் வேதமூர்த்தி லண்டன் போய் சேர்ந்தார். தமிழ் நாட்டிலிருந்து நமக்கு ஆதரவு கிடைக்கும் என்கிற குருட்டு நம்பிக்கையில் வேதமூர்த்தி சென்னை போனார். பிரஸ் மீட் வைத்ததுதான் மிச்சம். தமிழ் நாட்டில் நம்மை கண்டுக் கொள்ளவே இல்லை. அது உங்கள் பிரச்சனை; நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று விரட்டி விட்டார்கள்.
8. ஆடியோ, டிரைய்லர் வெளியீடுக்கு மலேசியாவுக்கு வரும் ரஜினி, கமல், அஜித், விஜய் என எந்த ஸ்டார்களும் நமக்காக வரவில்லை. அங்கிருக்கும் அரசியல்வாதிகளில் ஒருசிலர் ரெண்டு வரி ஸ்டேட்மெண்ட் விட்டார்கள். கடுப்பாகி மீண்டும் லண்டனுக்கே போனார் வேதமூர்த்தி.
9. நஜிப் பிரதமர் பதவி ஏற்ற பிறகு மலேசியா வந்தார். 2013 தேர்தல் சமயத்தில்; இந்தியர்களுக்காக ப்ளுபிரிண்ட் ஒன்றை தயார் செய்து நஜிப்-யிடம் கையெழுத்து வாங்கினார். அதன் பலனாக கொஞ்ச நாட்கள் நஜிப்பின் கேபினெட்டில் பிரதமர் துறை துணை அமைச்சராக இருந்தார்.
10. ஹிண்ட்ராப் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நஜிப் முன் வரவில்லை. நஜிப் ஏமாற்றி விட்டார் என்று கூறி, துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
11. கடந்த ஆண்டில் மகாதீரை சந்தித்து; ஹராப்பானின் தோழமை கட்சியாக ஹிண்ட்ராப்-பை இணைத்துக் கொண்டார்.
வேதமூர்த்தியை நம்பலாமா?
12. குடியுரிமை பிரச்சனையை தீர்ப்பதில் டேவிட்-டின் பங்கு அளப்பரியது என்று, ஒரு முறை மேடையில் சம்பந்தன் நேரடியாகவே ஒப்புக் கொண்டார். டேவிட் இறந்த பிறகு, 1995-களுக்கு பிறகு குடியுரிமை(நீல ஐசி) பிரச்சனை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. குடியுரிமை பிரச்சனையில் நம்மவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலை உருவானது.
13. மஇகா குடியுரிமை பிரச்சனையை கையாண்ட விதமே ரொம்ப தமாசாக இருக்கும். குடியுரிமை பிரச்சனையை தூக்கிக் கொண்டு மஇகா கட்டடம் பக்கம் போனால், நெகராகூ பாடுங்கள், ருக்குன் நெகாரா தெரியுமா என்று கேட்டு கடுப்பேத்துவார்கள். 60/70 வயசு கிழவனும் கிழவிகளும் ஒன்னும் புரியாமல் விழிப்பார்கள். ஐசி எல்லாம் கே.டின்,என்(KDN)-இல்தான் கொடுப்பார்கள். இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டு விரட்டியடிப்பார்கள். இல்லை, MIC அப்படி செய்ததே இல்லை என்று யாராவது சொன்னார்கள் என்றால்; அவர்கள் கண்ணை சாமி குத்தும். வாயை கிழிக்கும்.
13. 90-களின் இறுதியில் நம் இந்தியர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சரியான சேனல்கள் இல்லை. எங்கே போய் முறையிடுவது என்று தெரியாமல் சிக்கிக் கொண்டிருந்தோம். இந்த நிலை 2005 வரை தொடர்ந்தது. ஆட்சி(மகாதீர் போய் படாவி வந்தும்) மாற்றம் ஏற்பட்டும் நமக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. செனரியோ மாறவில்லை. காட்சியும் கோலமும் ஒரே மாதிரியாகவே இருந்தது. பிரச்சனைகள் இன்னும் அதிகமானது.
14. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான் ஹிண்ட்ராப் வந்தது. உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபமும், ஆதங்கமும் வெடித்து வெளியே வந்தது. நமது கோபத்தை வெளியே காட்டுவதற்கு ஹிண்ட்ராப் சரியான பாதையை அமைத்துக் கொடுத்தது. இண்ட்ராப் பேரணி மிக பெரிய வெற்றி அடைந்தது.
அதன் பிறகு நடந்த மாற்றங்களை சொல்ல வேண்டியது இல்லை. தேர்தல் சுனாமி, ஐவர் கைது, மக்கள் சக்தி பிரிந்து போனது, தனேந்திரன் பாரிசானின் பக்கம் போய் முட்டுக் கொடுத்து நின்றது என்று பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டது. எல்லோருக்கும் தெரியும்.
குடியுரிமை பிரச்சனையை மீண்டும் ஆரம்பித்து வைத்தது ஹிண்ட்ராப்தான். இன்று இரு கூட்டணிகளும் நமது குடியுரிமை பிரச்சனையை தீர்க்க போவதாக வாக்கு கொடுப்பதற்கு, ஹிண்ட்ராப் முன்னெடுத்த முயற்சிகள்தான் காரணம்.
15. குடியுரிமை போலவே நமது பல பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டியது இண்ட்ராப்தான்.
16. இண்ட்ராப் மூன்று நான்காக உடைந்து போனது; பாரிசான், பக்காதான் கூட்டணி என்று வேதமூர்த்தி மாறி மாறி ரவுண்ட் அடித்தது; என்று மக்களுக்கு ஹிண்ட்ராப் மீது வெறுப்பு ஏற்ப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று நமக்கு உரிய மரியாதை கிடைத்திருப்பதற்கும்; வாய்புகள் அதிகரித்திருப்பதற்கும்; இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை கூடி இருப்பதற்கும்; நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கும்; ‘நம்பிக்கை’ என்கிற தமிழ் வார்ததையை பிரதமர் உச்சரிப்பதற்கும்; ’அன்வார் தி போஸ்’ என்று அன்வார் நம்மை பார்த்து கையசைப்பதற்கும்; இன்னும் பல சலுகைகளுக்கும் இண்ட்ராப் மட்டுமே காரணம். இதை யாராவது மறுக்க முடியுமா?
17. ஹிண்ட்ராப் நம்க்கு துரோகம் செய்து விட்டதாக சொல்லும் நாம், அவர்களுக்கு என்ன மாதிரியான மரியாதையை செய்தோம் என்று யோசித்து பாருங்கள். உதயமூர்த்தி கடைசிவரை நேர்மையாகதானே இருந்தார். அவரிடம் குறை காண என்ன இருந்தது. ஆனால் நாம் என்ன செய்தோம்? போன தேர்தலில் அண்டலாஸ் தொகுதியில் நின்ற உதயமூர்த்திக்கு ஓட்டு போடாமல் தோற்கடித்தோம். உதயாவிடம் செலவு செய்ய பணம் இல்லை என்பதால், அவரை நிராகரித்தோம். நாம் மட்டும் மனது வைத்திருந்தால் நிச்சயம் உதயா வெற்றி பெற்றிருக்க முடியும். அவர் பெற்ற மொத்த ஓட்டு 614. நமக்காக சிறை சென்று, பல வருடங்கள் சிறையில் வாடிய ஒரு நல்ல மனிதருக்கு, நாம் கொடுத்த வரவேற்பு என்ன மாதிரியாக இருந்தது. இன்று நாம் எல்லோரும் உதயாவையும் கங்காதரனையும் மறந்து விட்டோம்.
18. நமக்காக போரடக்கூடியவர்களுக்கு நாம் என்ன மாதிரியான கைமாறு செய்கிறோமோ; அதை பொறுத்தே அவர்கள் நம்மிடம் பிரதிபலிப்பார்கள். இது உலகம் கற்றுக் கொடுக்கும் பாடம். நாம் என்ன கொடுக்கிறோமோ, அதுதான் நமக்கு வந்து கிடைக்கும்.
19. நாம் சரியில்லாத போது; நமக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன மாதிரியான மனநிலை?
20. மஇகா எப்போதூம் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்காது. அம்னோ என்ன கொடுக்கிறதோ அதை வாங்கிக் கொண்டு கம்முன்னு இருந்து விடுவார்கள். போரட்ட குணமும்; தேவையானதை கேட்டும் வாங்கும் தைரியமும் மஇகா-வுக்கு கிடையாது. அவர்கள் அடங்கி போகிறவர்கள். அடக்கியாளும் அம்னோவின் சிஸ்டம்-மில் சிக்கிக் கொண்டு; நம்மை பார்த்து கர்ஜிப்பார்கள். அவர்களின் வீரத்தை ஏமாளியான; எதிர்த்து போரிட திராணியற்ற ஏழை மக்கள் மீது காட்டுவர்கள். நாம் அவர்களுக்கு வாய்த்த திறமையான அடிமைகள்.
21. கேவியஸ் ஒரு அரசியல் வர்த்தகர். அவருக்கு என்ன தேவையோ அது அவருக்கு கிடைத்துவிட்டால் போதும் என்று இருப்பவர். பிச்சை ஏந்திகள்.
22. எதிர்கட்சியில் இருக்கும் இந்திய அரசியல் தலைவர்களும் ஏறத்தாள மஇகா தலைவர்கள் போலவே.இருக்கிறார்கள். கட்சிக்கு அடங்கிய செல்லப்பிள்ளையாக. சார்லஸ், ராமசாமி, கணபதி, காமாட்சி போன்றவர்கள் துடிப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு என்ன தேவையோ அதை கேட்டு பெற தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ராஜிவ், சுரேஸ், கோவிண்ட், ராம் போன்றவர்கள் இந்திய பிரதிநியாக இல்லை. அவர்களுக்கு நம்முடைய பிரச்சனையும் புரியாது. நமக்காக குரல் எழுப்புவது அநாவாசியம் என்று நினைபபார்கள்.
22. நமக்காக குரல் கொடுக்க கூடிய; தைரியமாக பேசக்கூடிய; நம் தேவையை பெற்று கொடுக்க கூடிய தைரியமானர்கள் நமக்கு தேவை. தற்போது பாரிசான், பக்காத்தான் கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, வேதமூர்த்தி பல மடங்கு சிறப்பானவராகவே தெரிகிறார்கள். மற்றவர்களைவிட இவர் எவ்வளவோ தேவலாம்.
23. தனிப்பட்ட முறையில் வேதமூர்த்தி மீது எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் விமர்சனம் உண்டு.
24. பொதுவில் பார்க்கும் போது மற்றவர்களைவிட இவர் தேவலாம் என்கிற நிலையில்தான் உள்ளார். போன தேர்தலில் நஜிப் நமக்கு செய்து தருவதாக சொன்ன வாக்குறுதிகள் பலவும் வேதமூர்த்தி முன் வைத்து போராடியது. 60 வருடங்களாக யாரும் கேட்காததை வேதமூர்த்தி கேட்டார்.
25. நஜிப் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது வேறு விசயம். ஆனால், யாரும் கேட்காத விசயத்தை வேதமூர்த்தி கேட்டார் என்பதுதான் பாராட்டுக்குறியது.
26. எதிர்கட்சிகள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை(Manifesto)-வில் முக்கிய ஐந்து அம்சங்களில் ஒன்று இந்திய சமூதாயம்(Kaum India). இதுநாள் வரை எந்த ஒரு Manifesto-விலும் நாம் இப்படி ஒரு முக்கியத்துவம் பெறவில்லை. இது வேதமூர்த்தி பக்காதானில் இணைந்த பிறகு நடந்துள்ளது.
27. பக்காதான் தேர்தல் அறிக்கையில் முக்கிய ஐந்த அம்சமாக கூறப்பட்டுள்ள இந்திய சமூகத்தின்(Kaum India) கீழ் வரும் 30 வாக்குறுதிகளில், ஏறத்தாள 14 வாக்குறுதிகள் இதுநாள் வரை வேதமூர்த்தியும் ஹிண்ட்ராப்-பும் கேட்டு வந்தவை. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், இது எல்லாம் நமக்கு தேவை என முன் வைக்கும் தைரியமே, இது எல்லாம் நடப்பதற்கான ஆரம்பம்.
28. இன்று நஜிப் நமக்கு கொடுத்துக் கொண்டிருப்பது, முன்பு வேதமூர்த்தியால் கேட்கப்பட்டது. இண்டியன் ப்ளுபிரிண்ட் என்பதே, வேதா நஜிப்புக்கு கொடுத்தது. அதையே மாற்றி நஜிப் திருப்பி நம்மிடமே கொடுக்கிறார்.
29. குடியுரிமை பிரச்சனை, கல்வி கூடங்களில் அதிக வாய்ப்பு, அரசாங்க துறையில் அதிக வாய்ப்பு, பெல்டா, பெல்ரா, தோட்ட பிரச்சனைகள், இந்தியர்களின் அடிப்படை சம்பளம், தோட்ட மறு வாழ்வு திட்டம், கோவில்களுக்கு நிரந்தர தீர்வு போன்றவைகள் கடந்த காலங்களில் வேதமூர்த்தியால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்.
30. தற்போது நாட்டில் உள்ள இந்திய தலைவர்களுடன் ஒப்பிடுகையில், வேதா தைரியமாக பேசக்கூடிய ஆள். குரல் கொடுக்க தயங்க மாட்டார். பிற இன தலைவர்களோடு ஈடு செய்யக்கூடியவர்.
31. He is more much better then other Indian Leaders, Mr Whytha ……

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews