கே பாலியும் மலேசியா தமிழனும்.
# ஆரம்பித்திலேயே சொல்லி விடுகிறேன் இது ரொம்பவும் பச்சையான ஒரு கட்டுரை. எந்த ஒழிவு மறைவும் இல்லாத கட்டுரை. அதோடு மட்டும் இல்லாமல் இது ஒரு நீண்ட கட்டுரையும் கூட. படிக்க விருப்பம் இல்லாதவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். படித்து விட்டு என்னை கண்டமேனிக்கு திட்ட கூடாது.
# கபாலி காய்ச்சலில் இருந்து மீண்டு வரலாம் என்று பார்த்தால், வம்படியாக வந்து சிலர் சண்டை போடுகிறார்கள்; ப்ளிஸ் எழுதுங்கள் என்கிறார்கள் சிலர். சரி
ஓப்பனாக எழுதிவிட வேண்டியதுதான். பலரும் போல் ஒழித்து மறைத்து, குறியீடுகள்
வைத்து எல்லாம் எழுதாமல்; நேரடியாகவே
எழுதிவிடுகிறேன்.
# திரைக்கதையில் இருக்கும் பிழையையோ; டெக்னிக்கல்
அம்சங்களையோ பற்றி நான் இங்கு எழுத போவதில்லை. அது
வேண்டாம். அதை
பற்றி எழுத அதிகம் பேர்கள் இருக்கிறார்கள். இங்கு நான் எழுத போவது படத்தின் content பற்றி மட்டுமே. Content என்றால் கரு. அல்லது
படத்தில் காட்சி படுத்தியிருக்கும் பொருள்.
# படத்தின் கதை 1: மக்கள்
பிரச்சனைக்காக குரல் கொடுக்கும்; சமூதாய தலைவர் ஆகக்கூடிய எல்லா தகுதியும் இருக்கும் ஹீரோவை சில கெட்ட பசங்க(அப்புறம்
எப்படி சொல்வது) தன்
சுயநலத்துக்காக சிறைக்கு அனுப்பிவிட்டு இந்த சமூதாயத்தை நாசம் செய்கிறார்கள். 25 வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரும் ஹீரோ காணமல் போன தன் மனைவி மற்றும் மகளை தேடிக் கண்டுபிடிக்கிறார். கூடவே தான் சார்ந்த சமூதாயத்தை கெட்ட பசங்களிடம் இருந்து மீட்டு; சமூதாய
மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
# படத்தின் கதை 2: ஹீரோ
சார் ஒரு கேங்ஸ்டர். ஆனாலும்
தன்னை சுற்றி நடக்கும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இது எதிரி கேங்ஸ்டர் குரூப்புக்கு பிடிக்கவில்லை. சதி செய்து ஹீரோ சாரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். 25 வருடம் கழித்து ஹீரோ சார் வெளியே வந்து பார்க்கும் போது; தன்
கேங்ஸ்டர் குரூப்பை மொத்தமாக எதிரி கேங்ஸ்டர் குரூப் அழித்து விட்டு பெரிய ஜையனாக(giant) வளர்ந்து நிற்கிறார்கள். ஹீரோ சார் காணமல் போன தன் மனைவியையும் மகளையும் கண்டுப்பிடிக்கிறார். எதிரி கேங்ஸ்டர் குரூப்பை கூண்டோடு அழித்து தன் கேங்ஸ்டர் குரூப்பின் பவரை காட்டுக்கிறார்.
# மேலே குறிப்பிட்ட கதை சுருக்கம் போல் இல்லாமல் கபாலி படம் வேறு கதை கருவில் இருந்தாலும் அதற்கு நான் பொறுப்பு கிடையாது. காரணம்
கபாலி படம் மூல கதையில் இருந்து விலகி அது பாட்டுக்கு தனி தனி ட்ராக்கில் ஓடக்கூடியது.
# கபாலி படத்தில் எங்குமே `மலேசிய
இந்தியர்கள்` என குறிப்பிட படவில்லை. படம்
முழுக்க தமிழர்களை பற்றியும் தமிழன் என்கிற வார்த்தையும் மட்டுமே காணப்படுவதால்; இது முழுக்க முழுக்க மலேசிய தமிழர்களை பற்றி சித்தரிக்கும் ஒரு படமே. இதில்
மலேசிய தெலுங்கு சங்கம், இந்து
சங்கம், மலையாளிகள்
மன்றம், தமிழ்
இளைஞர் மணி மன்றம், கூர்ட்வாரா, வங்காளிகள்(சர்தார்ஜிக்கள்) துளியும் சம்பந்தம் படாத ஒரு கதை.
# மலேசிய தமிழர்களின் வரலாறு மலாயாவில் ஏறத்தாள 230 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல்லவர்களின் சந்துபோங், ராஜ
ராஜ சோழனின் கடாரம் வரலாற்று காலத்துக்கு பின் மலாயா தமிழர்களின் வரலாறு 1788-ம் ஆண்டுகளுக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. சிவகங்கை சீமை சின்ன மருதுவின் மகன் பினாங்கு தீவுக்கு பிரிடிஷ் அரசால் நாடு கடத்தியதில் இருந்தே நம் வருகையை பதிவு செய்யலாம்.
# தமிழ் நாட்டில் இருந்து ரப்பர் எஸ்டேட்களுக்கு வேலைக்கு வந்தவர்கள் தான் இன்றைய மலாயா தமிழர்கள். கூடவே
கேமரன் மலை மற்றும் பிரேசர் மலை டீ எஸ்டேட்டுக்கும், கோலாலம்பூர், தைப்பிங், பினாங்கு, சிங்கப்பூர் போன்ற அன்றைய பெரிய நகர்களுக்கு ரயில் வே துறை, போஸ்டல்
துறை, இன்னும்
சில துறைகளில் பணியாற்றவும் தமிழர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். பிரிடிஷ் அரசாங்கத்தில் கிராணிகளாக(clerk) வேலை செய்வதற்கு யாழ்பாணத்தில் இருந்தும் தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இவர்கள் சிலோனிஸ் என்றும் பணங்கொட்டை என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் எப்போதும்; இன்று
வரை இங்கிருக்கும் தமிழ் நாட்டு தமிழர்களோடு இணையவே மாட்டார்கள். இவர்கள் தனி தீவு.
# இப்படி கொண்டு வரப்பட்ட தமிழர்கள் படிபடியாக வளர்ச்சியும்; அதே சமயம் சமூதாய வீழ்ச்சியும் அடைந்தார்கள்.
# மூன்று தலைமுறையாக சீனர்களும் தமிழர்களும் தான் முதல் இரண்டு பணக்கார்கள் நிலையை தக்கவைத்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் யாப் ஆ லோய்யும்
தம்புசாமி பிள்ளையும் பிறகு அடுத்த தலைமுறையில் ஹோண்டா பூன் சியுவும் ஆறுமுக பிள்ளையும் பிறகு தற்காலத்தில் ரோபர்ட் கோவும் ஆனந்த கிருஷணனும்.
# இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பிற தமிழர்கள் எல்லா கால கட்டத்திலும் பெரும் செல்வந்தர்களாக இங்கு உருவாகிக் கொண்டும் உழைத்து முன்னேறிக் கொண்டும் இருக்கிறார்கள்.
# முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதன் முதலில் மலாயாவில் தான் நடந்தது. ஆறாவது
தமிழ் ஆராய்ச்சி மாநாடும் இங்குத்தான் நடந்தது. 16 தமிழ் எழுத்து சீர்த்திருத்தங்கள் தமிழ் நாட்டில் சர்ச்சையில் இருக்கும் போதே; மலேசியாவில்
அமல்படுத்தி தமிழ் பள்ளிகளில் புத்தகத்திலும் அச்சடித்து அரசாணைக்காப்பட்டது. இளைஞர் மணி மன்றமும் மலேசிய திராவிடர் கழகமும் இந்த எழுத்து சீர்திருத்தத்தை அப்போ கடுமையாக எதிர்த்தார்கள். எதிர்த்தவர்களில் ஆதி குமணன் மிக முக்கியமானவர்.
# எம் ஆர் ராதா, மனோகர்
போன்ற தமிழ் நாட்டு மேடை கலைஞர்கள் மலேசியா வந்து மேடை நாடகம் போட்டார்கள். கூடவே மலேசிய மேடை நாடக துறையில் சற்றே தலைக்காட்ட தொடங்கியது.
# ரங்கையான் மேரா; ரேடியோ
என்னாம்; மின்னல்
எப்.எம்
என படி படியாக வளர்ந்து உலகிலே(தமிழ்
நாட்டில் கூட கிடையாது) முதல்
தமிழ் ரேடியோ மலேசியாவில் தான் தொடங்கப்பட்டது.
# மலேசியா தமிழ் சிறுகதைகள், வானொலி நாடகங்கள்; ஐ
உலகநாதன், காரைக்கிழார்
கடார கவிஞர் என தமிழ் இலக்கிய உலகம் தன் போக்கில் இயங்க தொடங்கியது.
# ஆங்கில மேலாதிகத்தில் இருந்த இணைய மகா உலகில்; 1980-களின் ஆரம்பத்தில் இணையத்தில் தமிழ் கொண்டுவரும் முயற்சி ஆரம்பமானது. ஆதமி, பாரதி
போன்ற தமிழ் மென்பொருள்கள் இருந்தலும்; 1985-இல் மலேசியாவை சேர்ந்த முத்து நெடுமாறன் தயாரித்த முரசு அஞ்சல் மென்பொருள்தான் உலகின் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள். Font, Editor, E-mail,
keyboard என அனைத்தும் இயங்கும் ஒரே மென்பொருளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதுவரை இருந்துவந்த தமிழ் இணைய சிக்கல்கள் அனைத்தும் முரசு அஞ்சல் மூலம் தீர்வு காணப்பட்டது. முரசு அஞ்சல் மென்பொருள்தான் இன்றைய யுனிகோட் முறைகளுக்கு முன்னோடி.
# இணையத்திலும் மலேசிய தமிழர்களின் ஈடுபாடு வளர்ந்து வந்தது.
# இப்படி ஒரு முனையில் மலேசியா தமிழர்கள் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருந்த கால கட்டத்தில் அரசியலில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களால் மலேசிய தமிழர்கள் ஒரு பெரும் சமூதாய வீழ்ச்சியை அடைந்தனர்.
# இங்குதான் பலருக்கும் கபாலி படத்தில் வரும் பல காட்சிகள் மலேசிய தமிழர்களின் நிலையை காண்பிப்பதுபோல் தோன்றியது.
# 1952-இல் ஓன் ஜபாரோடு இணைந்த மா இ கா
அரசியல் கட்சி பின் அம்னோ மா சி சாவோடு இணைந்து தேசிய முண்ணனி ஆனது. இரண்டு
தமிழ் முழு அமைச்சர்கள் மரியாதையோடு உலா வர தொடங்கினர். இந்த அரசியல் தான் மலேசிய தமிழர்களின் முழு வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்த்து.
# கோவில்கள் இடிக்கும் போது கபாலி வந்து தடுப்பதும், வெள்ளைக்கார துரையிடம் சீனனுக்கும் தமிழர்களுக்கும் சம உரிமையும் ஒரே அளவு சம்பளத்தையும் கபாலி கேட்பது தான் மலேசிய தமிழர்கள் கபாலி படத்தை இந்த அளவுக்கு தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதற்கு காரணமா?
# பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் கபாலி படத்தை பார்த்துவிட்டு மிகவும் சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தார்; மை
ஸ்கில்ஸ் நிறுவனர் பசுபதி ரஜினிக்கு மனம் திறந்த மடல் ஒன்று எழுதியிருந்தார்.
# கொடுமையிலும் கொடுமை மலாயா கணபதியை கபாலி கேரக்டருடன் ஒப்பிட்டது.
# மலாயா கணபதி ஒரு கம்னியுஸ்ட். மிக பெரிய போரட்டவாதி. சுதந்திரத்துக்காக போரடியவர். இறுதியில்; துப்பாக்கி வைத்திருந்தார் என குற்றம்சாட்டி பிரிடிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார். மலாயா கணபதி கேங்ஸ்டர் கிடையாது. வேண்டுமானாலும்
கபாலியை வாஞ்சிநாதன், கப்பல் ஓட்டிய தமிழன், வீரபாண்டிய
கட்டபொம்மன் பொன்றோருடன் ஒப்பிடலாம். தயவு செய்து மலாயா கணபதியோடு ஒப்பிட்டு அவரை கேவலப்படுத்தாதீர்கள்.
# ரஜினி என்கிற மாஸ் ஹீரோ நடிக்கும் படத்துக்கு உலகம் முழுவதும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பும்; உலகின் கோடி கணக்கான மக்கள் பார்க்கும் படமாகவும் திகழ்கிறது. அப்படி ஒரு உலகமே பார்க்கும் ஒரு படத்தை எடுக்கும் போது; குறைந்த
பட்ச research ஆவது செய்திருக்கலாம்.
# Research என்றால் உண்மையான research. முறையான ஆவணங்கள், விராசணைகள், மற்றும் உண்மை ஆய்வின் அடிபடையில் கண்டறிவதே research.
# The Last Samurai என்கிற ஆங்கில படத்தை எடுத்த ஆங்கில இயக்குனர் Edward Zwick ஒரு வருடம் காலம் ஜப்பானில் தங்கி, ஜப்பானிய
கலாச்சாரத்தையும் ஜப்பான் சமூராய்க்கள் பற்றியும் research செய்தார். அதன்
பிறகே திரைகதையின் முதல் வரி எழுதப்பட்டது.
# Dawn Brown ரெண்டு வருடத்துக்கும் மேல் ஆரய்ச்சி செய்த பிறகுதான் Da Vinci Code என்கிற புத்தகத்தை எழுதினார். பிறகுதான்
அது படமாக வந்தது. அந்த
படத்துக்கு திரைக்கதையே ஒரு வருடம் எழுதப்பட்டது.
# பா. ரஞ்சித் 230 வருட மலாயா தமிழர்களின் வரலாற்றை வெறும் மூன்றே மாதத்தில் research செய்து படம் எடுத்திருக்கிறார்கள். இதனால் தான் எனக்கு தமிழ் சினிமாவின் மீது ஒரு மிக பெரிய மரியாதை உண்டு. ஹாலிவூட், கொரியாக்காரர்கள் வருட கணக்காக செய்வதை தமிழ் சினிமாக்காரர்கள் வெறும் ஆறு மாதத்தில் செய்து முடித்து விடுவார்கள். அசால்ட்டாக.
# கபாலி எனும் சினிமா படத்துக்குள் உள்நுழைய இவ்ளோ நீளமான முன் கட்டுரை தேவைப்படுகிறது.
# முதலில் கபாலி படத்தில் வரும் கால கணக்குகள் எல்லாம் மிக பிழையாகவும் துளியும் research இல்லாமல் எழுதப்பட்டு படமாக்கப்பட்ட ஒன்று.
# ஹீரோ சார் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வருவார். இது 2016 காலகட்டம். இந்த
காலகட்டத்தில் இருந்து 25 வருடம்
முன் படத்தின் பிளஷ்பேக் நடக்கிறது. அப்படி
என்றால் 1991-இல் ஹீரோ சாரின் பிளஷ்பேக் நடக்கும் கால கட்டம். 1990-லிலே மலேசியாவின் போலிஸ் உடைகள் மாற்றப்பட்டு முழு நீல கலர் சீருடைக்கு மாற்றியாகி விட்டது.
# 1991- காலகட்டத்தில்
தோட்ட துண்டாடல் மேட்டர் வருகிறது. தோட்ட
துண்டாடல் மேட்டர் எல்லாம் 1964-இல் தொடங்கி 1980 காலகட்டத்தோடு ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
# தமிழ் நேசன் அய்யா வரும் காலகட்டம் எல்லாம் 1960-களின் எட்மோஸ்பேர்(atmosphere).
# பிளஷ்பேக்கின் காலகட்டத்தில் வரும் அனைத்து கேரக்டரின் உடைகளும் 1960-களின் வாடையே. மருந்துக்கு
கூட 1990-களின்
ஸ்டைல் இல்லை.
# படத்தில் வரும் கபாலிஸ்வரன், தமிழ் நேசன், தமிழ்
மாறன், வீரசேனன்
போன்ற பெயர்கள் எல்லாம் இங்கு யாரும் வைப்பது இல்லை. அதுவும் 1970-களில் இது போன்ற பெயர்கள் ரொம்பவும் செயற்கை.
# ஆரம்ப காலத்தில் பொதுவாக ஜாதி அடைப்படையிலும், குல சாமி பெயர்கள், சாமி
பெயர்கள் வைப்பதுதான் மலேசியா தமிழர்களின் வழக்கம். அப்பா
பெயர்; தாத்தா
பெயர்களை கேட்டே இங்கு ஜாதியை சொல்லி விடுவார்கள்.
# சுப்ரமணியம், கணேசன், கிருஷ்ணன், முனியாண்டி, முனீஸ்வரன், முருகன் இப்படித்தான் தோட்ட தமிழர்களின் பெயர்கள் இருக்கும்.
# 1970-களில் அண்ணா,எம்.ஜி.ஆர், கருணாநிதியென திராவிட அரசியல் தாக்கத்தின் எதிரொளியாக நல்ல தமிழ் பெயர் வைக்கும் நிலை வந்தது. பெயரை வைத்து ஜாதியை கண்டுபிடிக்கும் முறையில்
இருந்து மலேசிய தமிழர்கள் நிலை கொஞ்சம் மாறியது. மதியழகன்,
அன்பழகன், செல்வஜோதி, தமிழ்வாணன்,
சரவணன் இப்படி தோட்ட தமிழர்களின் நிலை மாறியது.
# அடுத்த கட்டமாக; 1990-களுக்கு பிறகு பெயர் வைப்பதில்
இந்த அய்யர்களின் தலையீடு பெருவாரியாக இருந்தது. ஜாதகம் பார்த்து,
அதன் அடிப்படையில் பெயர் வைக்கும் நிலை வந்தது. பொதுவாக அய்யர்களே குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிலை வந்தது. இப்படித்தான் ஷமிர், மிஷாலினி, ஷெல்வேந்திரன், மிருதிகா, ஷாமளா,
ஷர்மிளா, இப்படி பல வித்தியாசமான பெயர்கள் தமிழர்கள் மத்தியில் அறிமுகமானது.
# 2010-க்கு அப்புறம் மீண்டும் மறுமலர்ச்சியாக நல்ல தமிழ் பெயர்கள் வைக்கும் நிலை
திரும்பியது. கயல்விழி, கனிமொழி,
இலக்கியன், தமிழ்செல்வன், அமுதன், கபிலன் என மாற்றம் கண்டது.
# பிள்ளை ஜாதிகாரர்களுக்கு இப்போது வரை எந்த சிக்கலும் கிடையாது, அவர்கள்
தங்கள் பெயருடன் பிள்ளை அடைமொழியை வெளிப்படையாகவே இணைத்து கொள்வார்கள். இந்த ஜாதி எதிர்ப்பாளர்கள் எல்லாம் வாய் பொத்தி கைக்கட்டி நிற்பார்கள். காரணம் பணம், செல்வாக்காக
இருக்கிறவர்கள் இந்த பிள்ளை ஜாதிக்காரர்கள்.
# செட்டியார்கள் செட்டி கலாச்சாரத்திலே பெயர் வைத்துக் கொள்வார்கள். செட்டியார்களும் இங்கு மிக உயர்ந்த ஜாதிகாரர்களாக இங்கு தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். செட்டியார்கள் கோவில், செட்டியார்கள்
கடை என ரொம்பவும் கொளரவமான சொல்லிக் கொள்வார்கள். எந்த கூச்சமும் இன்றி இந்த ரெண்டு ஜாதிகாரர்களும் தங்களை ஜாதியை சொல்லி வாழ்பவர்கள் ; வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்களை எதிர்க்கும் திராணி இங்கு யாருக்கும் கிடையாது.
# ஒரு காலத்தில் இங்குள்ள சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் பெருமளவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் இந்த மலேசியா செட்டியார்கள். வட்டிக்கு இன்னொரு பெயர் செட்டி எனும் சொல்லும் அளவுக்கு இங்கு செட்டிகளின் பணம் பெரிய பெரிய அளவில் முதலீடு செய்ய பட்டிருந்தது. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் செட்டியார்கள் வட்டிக்கு பணம் தர மாட்டார்கள். தமிழர்கள் திருப்பு தர மாட்டார்கள் என்பது அவர்களின் ஐதிகம்.
# இதில் எப்போதும் கவுண்டர்களுக்கும்
தாழ்த்தப்பட்டதாக கூறி கொள்ளும் தலித்துக்கும் தான் போரே நடக்கும். செட்டியார்கள்,
பிள்ளைகள், பனங்கொட்டைகள்(இலங்கை தமிழர்கள்) இவர்கள் எப்போதும் இந்த இரண்டு சமூகத்தோடும்
இணைய மாட்டார்கள். கவுண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் தொடர்ந்து ஒரு சமூகப்போர் நடந்து
கொண்டே இருக்கும். ஆனால் அது இந்தியா போல் வெறியாக இல்லாமல், கல்யாணம், தொழில் முறையில்
மட்டுமே நடக்கும் போர்.
# ஜாதியை யார் முன்னெடுத்தாலும்
அது தவறு தான். அது செட்டியார்களாக இருந்தாலும் சரி, பிள்ளைகளாக இருந்தாலும் சரி. தன்னை
தலித் என்று முன்னிலை படுத்திக் கொள்வதும் தவறுதான். ஆனால் இங்கு அனைத்து நிலையிலும்
கவுண்டர்களைத்தான் தாக்குகிறார்கள். அதில் வேறு ஒரு அரசியலும் உண்டு.
# மலேசிய தமிழர்களில் பெயர்கள் வைக்கும் முறையிலே அரசியலும் தனி கலாச்சார வரலாறும் உண்டு.
.# எந்த காலத்தில் சீனர்களும் தமிழர்களும் ஒரே சமயத்தில் தோட்டத்தில் ரப்பர் காட்டில் வேலை செய்தார்கள்?; சீனர்களுக்கு அதிகமான கூலியும் தமிழர்களுக்கு குறைவான கூலியும் கொடுத்தார்கள்?.
# கோவில் உடைப்பதை தடுத்து நிறுத்தும் போராட்டாவாதியாக ஹீரோ சார் வருவார். ஆதுவும்
ஆங்கில அதிகாரி தான் கோவிலை உடைக்க வருவார். 1991-களில் எந்த ஆங்கில அதிகாரிகளும் நாட்டில் அரசு பதவியில் கிடையாது. சரி
மலாய்க்காரர்கள் ஆதிகத்தில் உள்ள அரசுதான் கோவிலை உடைப்பதாக வைத்துக் கொள்வோம்.,
# சாமி கும்பிட ஆளே இல்லாத கோவில்கள் எதற்கு? தடுக்கி
விழும் இடத்தில் எல்லாம் ஒரு கோவிலை கட்டி கொள்கிறார்கள். ஒரு மரத்தையோ காலி இடத்தையோ பார்த்தால் உடனே கோவில் கட்டிக் கொள்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஒரு கோவில் கட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற கோவில்கள் உடைத்தால் தான் என்ன? ஒவ்வொரு
கோவில் உடைப்புக்கு பின்னாலும் ஒரு பெரிய அரசியலிருக்கும். அதில் மலேசிய தமிழர்களோ அல்லது மலேசிய இந்தியர்களோ சம்பந்தப்பட்டிருப்பார்கள்.
# மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் கோவில்களுக்கு ஒதுக்கும் மாநியத்தையும் திருடிக் கொண்டு கோவில்களில் பொது மக்களிடம் இருந்து நிதி என்கிற பெயரில் பணத்தை கொள்ளை அடிக்க வேண்டியது. பாக்கெட்டில்
பத்து வெள்ளி இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் கோவிலுக்கு போக முடிகிறதா? அர்ச்சனைக்கு
காசு, விளக்கு
போட காசு, மாலைக்கு
காசு. பல
கோவில்களில் போர்ட்டே போட்டிருப்பார்கள். கோவில்களில் விற்கும் விளக்கும் மாலையும் தான் சாமிக்கு போட வேண்டும் என்று.
# கோவில் உடைப்பதை காட்டுவது என்பது reverse phycology. இது தமிழ்; தமிழர்களை
உணர்ச்சி நிலைக்கு கொண்டு சென்று அத மூலம் ஆதாயம் தேடிக் கொள்வது. அரசியல்
கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. சமீபத்தில் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் கோவில்கள் இடிக்கப்பட்டு வந்தன. இத்தனைக்கும்
அங்கு பாரிசான் இல்லாத அரசாங்கம்.
# ஹீரோ சார் ஒரு கேங்ஸ்டர். ஆனால்
நல்லது மட்டுமே செய்ய கூடிய கேங்ஸ்டர். மலேசிய
கேங்ஸ்டர்கள் முற்றிலும் மாறுப்பட்டவர்கள். மலேசிய கேங்ஸ்டர்களுக்கு ராஜா போல வாழ ஆசை. ஒரு
மண்ணையோ அல்லது குறிப்பிட்ட ஏரியாக்களை கட்டி ஆள வேண்டும் என்கிற ஆசை. இது
அவர்களுக்கு ஒரு போதையை கொடுக்கும். தங்கள் பவருக்கு உட்பட்ட ஏரியாவுக்குள் வேறு யாரும் வரகூடாது. எல்லாமே
அங்கு அவர்களாகத்தான் இருப்பார்கள். கட்டி ஆள்வார்கள். இந்த ஆளுமையை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பார்கள்.
#மலேசிய கேங்ஸ்டர்கள் எல்லாம் பெரிய பெரிய பணகாரர்களாக இருப்பார்கள். யாருக்கும் பயப்பட மட்டார்கள். மலேசியா கேங்ஸ்டர்கள் நல்லது செய்யவே மாட்டார்கள். அவர்கள் தேவை ஒரு ஏரியா. அது
அவர்கள் கண்ட்ரோலில் இருக்க வேண்டும். கபாலியில்
வரும் கேங்ஸ்டர் போல் இங்கு யாரும் கிடையவே கிடையாது.
# ஒரு கட்டத்தில் போலிஸுக்கு பயந்து இந்த கேங்ஸ்டர்கள் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு போவார்கள். சின்ன
கேங்கஸ்டர்களாக இருந்தால் ரேலா போன்ற அமைப்புகளில் இணைந்துக் கொண்டு; குடும்பம்
குட்டி என சைலண்ட் ஆகி விடுவார்கள்.
# பெரிய கேங்ஸ்டர்கள் என்றால் ஒன்று அரசியலுக்குள் நுழைவார்கள். இல்லை என்றால் லீகல் பிஸினஸ் செய்ய ஆரம்பிப்பார்கள். டத்தோ, டத்தோ
ஸ்ரீ வாங்கிக் கொண்டு தங்களை தாங்களே சமூகத்தில் ஒரு அந்தஸ்த்து நிலைக்கு கொண்டு போவார்கள்.
# மாணிக்கவாசத்துக்கு பின் மலேசியாவில் தமிழர் அரசியலி பெரிய மாற்றம் ஏற்பட்டது. சம்பந்தனை
பதவில் இருந்து வீழ்த்துவதற்கு அப்போது மாணிக்கவாசகத்திற்கு கேங்ஸ்டர்கள் தேவைப்பட்டார்கள். அதன் அடிப்படையில் சாமிவேலு போன்றவர்கள் அரசியலில் நுழைந்தார்கள். ரொம்பவும் மோசமான அரசியல் செய்தார்கள். மலேசிய அரசியலில் கேங்ஸ்டர்களின் ஆதிக்கம் இங்குத்தான் புள்ளி வைத்து தொடங்கப்பட்டது.
#அதன் பிறகு ஊரில் உள்ள கேங்ஸ்டர்களை எல்லாம் தமிழர் அரசியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். செயலை கூட்டம், பொது
கூட்டம் எல்லாவற்றிலும் கேங்ஸ்டர்களே நிறைந்து இருப்பார்கள். கேள்வி கேட்டால் அடி உதை; மண்டை
உடைந்து ரத்தத்தோடு தான் வெளியே வருவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மலேசிய இந்தியர் காங்கிரஸ் கேங்க்ஸ்டர்களின் கைக்கு முழுமையாக போய் சேர்ந்தது.
# அந்த அந்த ஊரில் யார் யார் பெரிய கேங்ஸ்டர்களாக இருக்கிறார்களோ; அவர்களை எல்லாம் இந்த கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிறகு மெல்ல இவர்கள் அமைச்சர்களாகவும், செனட்டர்களாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.
# இவர்களை யாரும் கேள்வி கேட்டு விட்டோ; அல்லது
இவர்களின் அட்டகாசத்தை எழுதிவிட்டோ வீடு வந்து சேர முடியாது. ஆசிட்
விட்டு அடிப்பதும்; அருவா கத்தியால் பெரிய கொடு எல்லாம் போட்டு விடுவார்கள். சில மர்ம கொலைகளும் நடந்திருக்கு. இதை எல்லாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு தமிழ் கேங்ஸ்டர்களின் ஆதிக்கம் ஆளும் அரசியலில் புகுந்து கொண்டது.
# பொதுவாக நன்கு படித்த, கேங்ஸ்டர்கள்
அல்லாதவர்கள். சமூதாய பார்வை உள்ளவர்கள் எதிர்கட்சியில் போய் புகுந்து கொண்டார்கள். ஆகவே எதிர்கட்சியில் பொதுவாகவே நன்கு படித்தவர்கள்தான் இருப்பார்கள்.
# பா.ரஞ்சித்
உண்மையாக கேங்ஸ்டர்கள் கதையை எடுக்க வேண்டும் என்றால்; இன்றைய
அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை தான் படமாக எடுத்திருக்க வேண்டும். அது
எல்லாம் சூப்பர் கதைகள். கேட்க
கேட்க அலுக்காத கேங்ஸ்டர்கள் கதை. அப்படி
ஒரு அமைச்சரின் கதையை எடுத்திருக்க வேண்டும்.
# அப்படி ஒரு அரசியல்வாதியை கதையை இங்கு எடுத்துவிட முடியுமா? அப்படியே
எடுத்துவிட்டால்; அடுத்த முறை ரஜினி மலேசியா வரும் போது ஓசியில் கார், ஹோட்டல், அமைச்சர் வீடுகளில் விருந்து எல்லாம் கிடைக்குமா …..? கேங்ஸ்டர்களுக்கும் அரசியலுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாத மாதிரி ரஞ்சித் கபாலியை படமாக்கி இருக்கிறார்கள். இதுவே அவரின் மோசமான ஆய்வைக் காண்டுகிறது.
# 2016 காலகட்டத்தில் மலாய்கார்களும் கேங்ஸ்டரிசயித்தில் வேறு லெவலுக்கு போய் விட்டார்கள். அவர்கள் தமிழ் கேங்ஸ்டர்கள் போல் இல்லாமல், கொரியன்
கேங்ஸ்டர்கள் போல் ஒரு சிஸ்டமட்டிக்கான நிறுவனமாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு தமிழ் கேங்ஸ்டர்களின் உதவி தேவையே கிடையாது. அவர்களுக்கு
அரசாங்கத்திலே இருந்தே எல்லா உதவியும் கிடைக்கிறது. ஆனாலும்
மலாய்க்கார கேங்ஸ்டர்கள் எங்காவது ஓரிடத்தில், தமிழ் கேங்ஸ்டர்களோடு லிங்க் ஆனார்கள். அது
தனி கதை.
# மலேசியாவில் தமிழர்கள் நான்கு குரூப்
வகையை சேர்ந்தவர்கள். முதாலாவது, மேலே நான் குறிப்பிட்டது போல் அறிவார்ந்த சமூதாயம்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்கள் என ரொம்பவும்
முன்னேறிய ஒரு சமூதாய தொடர்ந்து வளர்கிறது. அனைத்துலக ரீதியில் மலேசிய தமிழர்கள் தங்கள்
கவன ஈர்ப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
# இரண்டாவது; மிடிஸ் கிளாஸ். யாருக்கு
எது நடந்தால் நமக்கு என்ன என மிக சாதரணமாக, ஒதுங்கி போகிற, தன் குடும்பம், தன் பிள்ளைகளின்
படிப்பு எதிர்காலம் என யார் வம்புக்கும் போகாத சாதரண வர்கம். இவர்களின் அதிகபட்ச அரசியல்
அறிவு, பொது சேவை என்பது பொது தேர்தலில் ஓட்டு போடுவது என்பது மட்டுமே.
# மூன்றாவது குரூப். நீங்கள் கபாலியில்
பார்த்த; அதைவிட மோசமான ஒரு சமூகம். ஒழுங்காக படிக்காமல், வேலைக்கு போகாமல் குடித்துக்
கொண்டும், ரவுடியிசம் பண்ணிக் கொண்டும் திரியும் ஒரு சமூகம். இவர்களை யாரும் ஒடுக்கவும்
இல்லை. ஒதுக்கவும் இல்லை. அது அவர்களாக போய் சிக்கிக் கொள்கிற சமூகம்.
# அடுத்த ஒரு குரூப் இருக்கிறார்கள்.
ரொம்பவும் மோசமான குரூப். ரொம்பவும் extreme-ஆன குரூப். சமூதாயத்தில் நடக்கும் அனைத்து
குளறுபடிக்கும், இந்த சமூதாயதாய வீழ்ச்சிக்கு அரசாங்க மட்டுமே காரணம். அதுவும் மகாதீர்
அரசாங்கம் மட்டுமே காரணம் என்று சொல்லி கொண்டு திரியும் குமபல். மற்ற சிக்கல்களை மறந்த
குரூப். இவர்கள் எப்போதும் தமிழ் மக்களை அரசாங்கத்து எதிராக திசை திருப்பி விடுவார்கள்.
தமிழ், தமிழன் என்று மிக நுணுக்கமான அரசியல் நடத்துபவர்கள்.
# பா. ரஞ்சித் போய் சேர்ந்த முகாம்;
இந்த நான்காவதாக குறிப்பிட்ட குரூப் தமிழர்கள். சமூதாயத்தில் நடக்கும் அத்துனை பிரச்சனைகளையும்
பிறர் மீது கை காட்டி, மூல காரணமாக இருக்கும் நம்மை பிரச்சனைக்குள் கொண்டு வரவே மாட்டார்கள்.
இவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தையும் அடிப்படையாக
கொண்டே இந்த கபாலி படத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது.
# இவர்கள் ஏறத்தாள தலித் இலக்கியம்,
தலித் அரசியல் எனும் போர்வை போர்த்திக் கொண்டு செயல்படுகிறவர்கள். இந்த நான்காவது குரூப்
எழுத்துக்களையும் அரசியலையும் பார்த்தால், இவர்கள் எவ்வளவு பெரிய கோளாறுகள் என தெரிய
வரும்.
# 1969-இல் ஒரு இன கலவரம் மலேசியாவில்
நடந்தது. அது ஒரு அரசியல் இனக்கலவரம். நாங்கள் மலேசியாவுக்கு வந்த முதல் தலைமுறை காலகட்டம்
அது. இதில் பெரிதாக பாதிக்கப்பட்டது சீனர்கள் தான். தமிழர்களுக்கும் இழப்புகள் ஏற்ப்பட்டது.
அப்போது நாங்கள் இந்திய நாட்டின் ஒரு அங்கம் தான். எங்களுக்கு இந்தியா என்ன செய்தது.?
எங்கள் பாதுகாப்புக்கு தமிழ் நாடு என்ன செய்தது? இந்திரா காந்தி ஒரு அறிக்கை மட்டும்
வெளியிட்டார். அறிஞர் அண்ணாவின் வற்புருத்தலின் பேரில் மூன்று அதிகாரிகளை இங்கு அனுப்பி
வைத்தார் இந்திரா காந்தி அனுப்பி வைத்தார். அவர்களும் இங்கு வந்து ஒரு ரிப்போர்ட் செய்தார்கள்
எதற்கும் பிரஜோனம் இல்லாமல். அந்த ரிபோர்ட்டினால் இங்குள்ள தமிழர்களுக்கு வேறு ஒரு
சிக்கல் ஏற்ப்பட்டது.
# 2000 காலகட்டத்தில் இன்னொரு இன
கலவரம் நடந்தது. இது நேரடியாக தமிழர்களுக்கும் மலாய்காரர்களுக்கும் நடந்தது. இந்த முறை
இந்தியா மற்றும் தமிழ் நாடு சுத்தமாக எங்களை கைகழுவி விட்டது. ஒரு ஆதரவு குரல் கூட
கேட்கவில்லை.
# எங்களை பிரச்சனைகளை நாங்கள் தான்
தீர்த்து கொள்கிறோம். எங்கள் சிக்கல்களை களைந்து, நாங்களே சுயமாக அடுத்த கட்டம் நோக்கி
நகர்கிறோம். உங்கள் வியாபார லாபத்திற்காக எங்களை சீண்டி விடவோ; எங்களை உசுப்பி விடவோ
செய்யாதீர்கள். உங்கள் படத்தில் வரும் சில காட்சிகளாலும், வசனத்தாலும் இங்கு இன்னொரு
சிக்கல் வந்தால் அதையும் நாங்கள் தான் தீர்க்க வேண்டும். ரஜினியோ பா.ரஞ்சித்தோ வரமாட்டார்கள்.
அவர்களுக்கு பணம் கைக்கு கிடைத்து விட்டது.
# இந்தியாவில் படமாக்க உங்களுக்கு
ஆயிரம் கதைகள் உண்டு. ஹிந்திகாரன் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுங்கள், தமிழ் நாட்டு
அரசியல் வாதியை எதிர்த்து போராடுங்கள், தமிழர்களை அடக்கி ஆளும் தெலுங்கர்கள், ஹிந்திகார்கள்
என உங்கள் உலக சினிமா தனத்துக்கு தீனி போடுங்கள். உங்களுக்கு இல்லாத பிரச்சனையா
……? எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
# எங்களின் பணத்துக்காக எங்களை அசிங்கப்படுத்தவோ;
எங்களுக்குள் பிரச்சனையோ ஏற்படுத்தாதீர்கள். எங்களுக்காக நாங்கள் தான் போராட வேண்டும்.
# இறுதியாக
·
கபாலி படத்தின் ஒரு டிக்கெட் விலை அவரேஜ் RM 30.
·
ஒரு தியேட்டரில் மினிமம் 400 சீட்.
·
ஒரு நாளைக்கு 5 காட்சிகள்.
·
160 தியேட்டர்கள்
·
ஒரு நாள் கலேக்ஷன் RM9,600,000(மிக குறைந்த கணக்கு)
·
7 நாள் புல்ல்ல்ல்ல் ஹவுஸா போச்சு.
·
இப்பவும் 30 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஹவுஸ் புல் இல்லை.
0 Comments