இரண்டு முழு அமைச்சர்களும் மகாதீரும்.
# எனக்கு சுமார் 16 வயது இருக்கும்.
ஒரு வழியாக அரசியல் கட்டுரைகளை படிக்கவும்; அரசியல் கதைகள் கேட்கவும் ஆரம்பித்திருந்தேன்.
எங்கள் எஸ்டேட்டில் கேப்டன் கடை என்று ஒன்று இருந்தது. அங்கேதான் மலேசியாவின் அரசியலை
மிக நுண்ணியமாக அலசி ஆராயப்படும்.
# எல்லாம் வயசு கட்டைகள். தினமும்
மூன்று தமிழ்ப் பத்திரிக்கைகளும் தூதனும் படித்து கறைத்து குடித்து வைத்திருப்பார்கள்.
போதாத குறைக்கு ராக்கெட்; எம் ஐ சி- காரர்களும் இருப்பார்கள். மேலிடத்து கதைகளைப் பக்கத்தில்
நின்று கேட்டது போல் தத்ரூபமாக சொல்வார்கள். கேட்பதற்கு சுவரசியமாக இருக்கும். அந்த
மாதிரி சுவராசியமாக கதைகளை இன்று வரை நான் எந்த சினிமாவிலும் பார்த்ததும் கிடையாது.
புத்தகத்திலும் படித்தது கிடையாது.
# நான் நல்ல சின்ன பையன் என்பதாலும்;
எஸ்டேட்டில் ஓரளவுக்கு படிக்கும் பையன் என்கிற பெயர் வாங்கியிருக்கிறப்படியாலும் என்னையும்
சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் கேட்கும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. திருப்பி
பதில் எல்லாம் பேசக் கூடாது. தெரியாததை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் நம்ம
லிமிட்.
# அப்போதிலிருந்து இப்போது
வரை ஒரே ஒரு விசயத்தை மட்டும் திரும்ப திரும்ப என்னிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிலர் சண்டையும் போடுகிறார்கள்.
# நம் சமூக்கத்தில் இருந்த
இரண்டு முழு அமைச்சர் பதவிகளில் ஒரு முழு அமைச்சர் பதவியை மகாதீர் பிடுங்கிக் கொண்டார்
என்பதே. ஆனால் இப்போது வரை அந்த முழு அமைச்சர் பதவி பறி போனதற்கும் மகாதீருக்கும் சம்பந்தமே
இல்லை.
# இப்படி கோஸிப் நம் சமூகத்தில்
உலாவுவதற்கு விஸ்கி மணியம் என்கிற சுப்ரமணியம் சின்னையா என்கிற முன்னாள் மா இ கா துணைத்
தலைவரும் அப்போதைய மா இ கா தலைவர் மாணிக்காவும் தான் முழு காரணம். இதற்கு ஒத்து ஊதியது
ஆதி.குமணன்.
# ஓவ்வொரு தேர்தல் முடிந்ததும்
தமிழ் ஓசையிலும், பிறகு மலேசிய நண்பனிலும் பிற சுப்ரா சப்போர்ட் பத்திரிக்கையிலும்
ஒரு தலையங்கம் இப்படி போடுவார்கள்; ‘இந்த முறையும் நமக்கு ஒரு முழு அமைச்சர் தான்’, ‘இன்னொரு முழு அமைச்சர் பதவி கனவுதான்’ என்றுதான்
போடுவார்கள். படித்து படித்து எனக்கு சலித்து போகும்.
# ஏன் இப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
என்று; எங்கள் எஸ்டேட்டின் அரசியல் மேதை கேப்டனிடம் கேட்டபோது சில தகவல்கள் சொன்னார்.
பிறகு என் தந்தையும் இதை உறுதி செய்தார். அதன் பிறகு நானே தேடிப் படித்து சில தகவல்களை
தெரிந்துக் கொண்டேன்.
# 1955-இல் அமைந்த துங்கு அப்துல்
ரகுமான் தலைமையில் அமைந்த முதல் காபினெட்டில் இந்தியர் சார்ப்பில் வி.தி.சம்பந்தன் ஒருவரே- தொழிலாளர் அமைச்சராக இடம் பெற்றார்.
# 1959-இல் துங்கு அப்தூல்
ரஹ்மான் அமைச்சரவையில் வி.தி. சம்பந்தம் மட்டுமே இந்தியர் சார்பாக சுகாதார அமைச்சராக
பதவி வகித்தார்.
# 1964-இல் துங்கு தலைமையில்
அமைந்த மூன்றாவது கபினெட்டில்தான் இரு இந்தியர்களுக்கு முழு அமைச்சர் பதவி கிடைத்தது.
பொதுப்பணி, அஞ்சல், தொடர்ப்பு துறை அமைச்சராக சம்பந்தனும், தொழிலாளர்கள் துறை அமைச்சராக
மாணிக்கவாசகனும் பங்கு வகித்தார்கள்.
# துங்குவின் நான்காவது அமைச்சரையிலும்
சம்பந்தனும் மாணிக்கவாசகமும் முழு அமைச்சர்களாக இருந்தார்கள். போக்குவரத்து அமைச்சும்,
பொதுப்பணி, அஞ்சல், தொலை தொடர்ப்பு துறை அமைச்சும் நமக்கு ஒதுக்கப்பட்டது.
# 1969-இன கலவரத்துக்கு பிறகு;
1970-ஆம் ஆண்டு துன் அப்தூல் ரசாக் தலைமையில் அமைந்த முதல் கபினெட்டில் சம்பந்தன் –
பொதுப்பணி, அஞ்சல், தொலை தொடர்ப்பு அமைச்சராகவும், மாணிக்கா – தொழிலாளர் அமைச்சராகவும்
இடம் பெற்றனர்.
# மறு சீரமைப்பு செய்ய பட்ட
அமைச்சரவையில் சம்பந்தன் – தேசிய ஒற்றுமை அமைச்சராகவும். மாணிக்கா – தொழிலாளர் அமைச்சராகவும்
ரசாக்கால் நியமிக்கப்பட்டனர்.
# 1974-ம் ஆண்டு நடந்த பொது
தேர்தலுக்கு பிறகு ரசாக் காலத்தில் தான் முழு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு; ஒரு முழு
அமைச்சரும், ஒரு துணை அமைச்சர் பதவியும் நமக்கு தரப்பட்டது. இவருடைய காலத்தில்தான்
நமது நாட்டின் முதல் இந்திய துணை அமைச்சர் நியமிக்கப்பட்டார்.
# ரசாக்கின் இரண்டாவது கெபினெட்டில்
மாணிக்கா- தொலை தொடர்பு அமைச்சராகவும், ஆதி நாகப்பன் செனட்டர் ஆக்கப்பட்டு சட்டத்துறை
துணை அமைச்சர் பதவிக் கொடுக்கப்பட்டது.
# 1976-ஹுசேன் ஓன் பிரதமராக
வந்தார். இவர் அமைத்த முதல் கபினெட்டில் மீண்டும் நமக்கு இரண்டு முழு அமைச்சர் பதவி
கொடுப்பப்பட்டது.
# மாணிக்காவுக்கு – தொலை தொடர்பு
அமைச்சராகவும், ஆதி நாகப்பனுக்கு பிரதமர் துறை அமைச்சராகவும் பதவிகள் வழங்கப்பட்டது.
# ஆதி நாகப்பன் பதவிக்கு வந்த
இரண்டே மாதத்தில் ஒரு பெரிய பிரளயம் நடந்தது. ஆதி நாகப்பன் அமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட
இரண்டே மாதத்தில் இறந்து போனார். இங்கு தான் ஒரு பெரிய சிக்கல் வந்தது.
# மா இ காவில் ஆதி நாகப்பனுக்கு
அடுத்த நிலையில் இருந்தவர் சாமிவேலு. ஆதி நாகப்பனுக்கு பதிலால சாமிவேலுவுக்குதான் முழு
அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்.
# ஆனால் சாமிவேலுக்கு முழு
அமைச்சர் பதவிக் கொடுக்க கூடாது என்பதில் மாணிக்கா மிக உறுதியாக இருந்தார். இதற்கு
வேறு சில மறைக்கப்பட்ட உண்மைகளும் இருந்தது.
# சாமிவேலு, கோவிந்தராஜு, பண்டிதன்
மூவரும் ஓரணியில் இருந்தார்கள். மா இ காவில் கோஷ்டி பூசல் வெடித்தது.
# அப்போதைக்கு பிரச்சனையை முடித்து
வைக்க எண்ணிய பிரதமர் ஹுசேன் ஓன் முழு அமைச்சர் பதவியை ரெண்டாக உடைத்து இரண்டு துணை
அமைச்சர் பதவி கொடுத்தார்.
# நகராட்சி மற்றும் கூட்டரசு
பிரதேச துணை அமைச்சராக சுப்ரமணியம் சின்னையாவுக்கும்(விஸ்கி), தொழிலாளர் துறை துணை
அமைச்சராக கு.பத்மநாதனும் நியமிக்கப்பட்டார்கள்.
# 1978-ஆம் ஆண்டு தேர்தலுக்கு
பிறகு ஹுசேன் ஓன் தலைமையில் அமைந்த அமைச்சரையில் மாணிக்கா – போக்குவரத்து துறை முழு
அமைச்சராகவும், கு. பத்மநாபன் – தொழிலாளர் துறை துணை அமைச்சராகவும், சாமிவேலு – வீடமைப்பு
மற்றும் நகராட்சி துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
# இவை அனைத்தும் மகாதீர் காலத்துக்கு
முன் நடந்தவை. மாணிக்காவின் மோசமான அரசியலுக்காக இரண்டு முழு அமைச்சர் பதவிகளில் ஒரு
முழு அமைச்சர் பதவி பறிபோனது. நாமே கேட்டு இரண்டு துணை அமைச்சர்களை வாங்கி கொண்டோம்.
# இந்த சம்பவத்துக்கு பிறகு
சுப்ரா(விஸ்கி)-க்கு முழு அமைச்சர் பதவி கிடைக்க கூடாது என்பதில் மிக காட்டமாக இருந்தார்
சாமிவேலு. தனக்கு முழு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த செய்த சுப்ரா, பத்மா இருவருக்கும்
முழு அமைச்சர் பதவி கிடைகாமல் துணை அமைச்சராகவே வைத்திருக்க ஆசைப்பட்டார்.
# அதன் பிறகு நடந்தது அனைவரும்
அறிந்ததே.

0 Comments