Thursday, 10 August 2017

நினைத்தவர் புலம்பல் - சிறுகதை

மலாயப் பலகலைக்கழகம் தமிழ்ப் பேரவை நடத்திய பேரவை கதைகள் 2017 போட்டியில் ஆறுதல் பரிசுப் பெற்றக் கதை.


போன் அடிக்கும் சத்தம் கேட்டு; மாலினி தன் கையில் இருக்கும் போனின் ஸ்கிரினை பார்க்கிறாள். பரிமளா. அவளின் நெறுங்கிய தோழி. போனை ஆன் செய்து காதில் வைக்கிறாள்.  

’ஏ! உங்க அண்ணன் மோட்டரை கீழே சதிஸும் அவன் கூட்டாளிகளும் அடிச்சு உடைக்கிறாங்கடி’

போனில் பரிமளா சொன்னதும் பி.பி.ஆர் பிள்ட்ஸின் 15-வது மாடியில் இருந்து மாலினி கர்ட்டன் துணியை விலக்கி சன்னல் வழியே கீழே பார்த்தாள். மூன்று பேர்கள் சேர்ந்து கொண்டு அவன் அண்ணன் மகேந்திரன்; சுருக்கமாக மகேன்; அவனின் மோட்டார் பைக்கை உடைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். 

என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே சிலை போல் நின்று விட்டாள். அவளுக்கு மூச்சு வேக வேகமாக அடித்து கொண்டது. தன் அண்ணனுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று யோசித்து முடிப்பதற்குள் படார் என கதவை திறக்கும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் அவன் அண்ணன் மகேன் பாராங் கத்தி ஒன்றை கையில் தூக்கிக் கொண்டு வேகமாக ஆவேசம் வந்தவன் போல் வாசல் கதவை நோக்கி ஓடினான். மாலினி ஓடி போய் அவன் முன்னே வழிமறித்து நின்றுக் கொண்டாள்.

‘அண்ண …. ப்ளிஸ் …. போகாதே ….‘ மாலினி அவன் கைகளை பிடித்து கொண்டு அழ தொடங்கி விட்டாள்.

‘மாலு … சொன்னா கேளு … விடு என்னை…?

‘இப்போ நீ போனாய் என்றால், பெரிய பிரச்சனை ஆகி விடும். கொஞ்சம் பொறுமையாக இருண்ணே ….’

’அவன்க என் மோட்டாரை உடைப்பாங்க …. நான் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கணுமா? செத்தான்க இன்னைக்கு.’

‘மோட்டார் தானே; போனா போகுது. விடுண்ணே ….. உன்னை போலிஸ் புடிச்சுட்டு போகறதை என்னால் பார்க்கவே முடியாது.’

அதற்குள் அவர்களின் அம்மா லெட்சுமி; சத்தம் கேட்டு எழுந்து, படுக்கை அறையை விட்டு வெளியே வந்தாள். வந்தவள் தன் மகன் பெரிய கத்தியோடும்; மகள் அழுதுக் கொண்டு அவன் கையை பிடித்து கொண்டிருப்பதையும் பார்த்ததும் கலவரமாகி;

‘ஏ மாலினி! என்னாடி இது …? கத்தி கையுமா நிற்கிறான்.’ அலறி அடித்து கொண்டு மகேனின் அருகில் வருவதற்குள், மகேன் மாலினியை இழுத்து பிடித்து தள்ளி விட்டு வேகமாக கதவை திறந்து கொண்டு லிப்டை நோக்கி ஓடினான்.  அவனை தடுத்து நிறுத்த மாலினியும் வேகமாய் ஓடினாள்.

’டேய்! மகேன் …. நில்லுடா ….’ என்று கத்திக் கொண்டே பின்னாடியே அவன் அம்மாவும் ஓடினாள். லிப்ட் பட்டனை தட்டினான். அது 18-வது மாடியிலே நின்றுக் கொண்டிருந்தது. நகர்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. லிப்ட்டுக்காக காத்திருக்காமல் படிகட்டுகளின் வழி இறங்கி ஓடினான்.
            
மாலினியும் அவள் அம்மாவும் லிப்டுக்காக காத்திருந்தார்கள். காத்திருக்கும் நேரத்தில் தன் அப்பாவுக்கு கைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டு விசயத்தை சொன்னாள். சொல்லி முடிப்பதற்கும் லிப்ட் வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் லிப்ட் வழியாக கீழே போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் கீழே வந்து சேர்வதற்குள், மகேன் தன் மோட்டார் பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். 

வந்தவன் எதையும் யோசிக்காமல் தன் கையில் இருந்த நீண்ட பாராங் கத்தியால் சத்திஸை ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். சத்திஸ் தன் கையில் இருந்த கட்டையை கொண்டு பாராங் கத்தியை தடுக்க முயற்சிக்கும் போது; கத்தியின் நுனி சத்திஸின் முழங்கை முட்டியில் பட்டு ரத்த வர தொடங்கியது.
            
முழங்கை முட்டியில் ரத்தம் வருவதை பார்த்த சத்திஸுக்கு இன்னும் அதிமான கோவம் வந்தது.  இதற்குள் சத்திஸின் கூட்டாளி மகேனின் முதுகில் ஹெல்மெட்டால் ஓங்கி ஒரு அடி அடித்தான். விழுந்த அடியின் வலி உடம்பு முழுக்க பரவ, கையில் இருந்த கத்தி நழுவி கீழே விழுந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சத்திஸ் தன் கையில் இருந்த கட்டையால் மகேனின் தலையில் அடித்தான். மகேன் கீழே விழுந்தான். ஒட்டு மொத்த பி.பி.ஆர் பிள்ட்ஸும் வேடிக்கை பார்த்தது. சத்திஸ் கீழே கிடந்த பாராங் கத்தியை எடுத்து ஓங்கி மகேனை வெட்டப்போனான். 

அதற்குள் அங்கு ஓட்டமும் நடையுமாக பதறி அடித்து ஓடி வந்த மாலினியும் அவன் அம்மாவும் கூச்சல் போட்டு கத்தினார்கள். தன் அண்ணன் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதையும்; சத்திஸ் பாராங் கத்தியை ஓங்கி தன் அண்ணனை வெட்ட போவதையும் பார்த்து; மாலினி அழுது கொண்டே கதறினாள். தன் பலம் முழுவதும் கொண்டு கத்தினாள். குய்யோ முறையோ என்று அவள் அம்மாவும் கத்தினாள். எந்த நேரத்திலும் சத்திஸ் கையில் இருக்கும் பாராங் கத்தி மகேனின் தலையை குறி பார்த்து பாய காத்திருந்தது.
            
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மின்னல் வேகத்தில், முறுக்கிக் கொண்டு; அந்த பி.பி.ஆர் பிளட்ஸே அலறும் அளவுக்கு சத்தத்தோடு சண்டை நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது. மோட்டாரில் வந்த ஒருவன், தன் மோட்டாரை நிறுத்த கூட இல்லை அப்படியே போட்டு விட்டு; ஓடி வந்து சத்திஸ் இடுப்பை நோக்கி விட்டான் ஒரு உதை. வாங்கிய உதையில் சத்திஸ் கண்கள் கலங்கி போனது. மோட்டார் பைக்கில் வந்தவர்கள் மகேனின் கேங். இப்போ ரெண்டு கும்பலுக்கும் நேரடி சண்டை ஆரம்பமானது. 

மாலினியும் அழுதுக் கொண்டே செய்வது அறியாது நின்றாள். அவள் அம்மாவின் கூச்சல் இன்னும் நின்றபாடில்லை. தூரத்தில் போலிஸ் சைரன் சத்தம் கேட்டது. தூரத்தில் கேட்ட இந்த சத்தம் இப்போது மிக அருகில் கேட்டது. ஒரு போலிஸ் ரோந்து கார் மெல்ல அந்த பி.பி.ஆர் பிளட் உள்ளே நுழைந்தது. வேடிக்கை பார்த்து கொண்டிருந்த யாரோ ஒரு பொது ஜனம் தான் போலிஸுக்கு போன் செய்திருக்க வேண்டும். 

போலிஸ் வாகனத்தை பார்த்ததுதான் தாமதம்; சத்திஸ் கேங்கும் மகேன் கேங்கும் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார்கள். மாலினியும் அவள் அம்மாவும் கூட மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ஒன்றாவது மாடியில் ஏறி போய் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டார்கள்.
            
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வந்து நின்ற போலிஸ் வாகனத்தில் இருந்து இரண்டு மலாய் போலிஸ்காரர்கள் இறங்கினார்கள். அன்னாந்து பிள்ட்ஸை பார்த்தார்கள். கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. தங்களுக்குள் பேசிக் கொண்டவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்; பிறகு ஒக்கி டாக்கியில் கண்ட்ரோல் ரூமுடன் தொடர்ப்பு கொண்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு போலிஸ் ட்ராக் வந்தது. உடைந்து போயிருந்த மகேனின்  மோட்டார் சைக்கிள் மற்றும் மகேன் கேங்கின் இரண்டு மோட்டார் பைக்கையும் போலிஸ் டிராக்கில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.
            
மோட்டர் சைக்கிள்களை போலிஸ் டிராக்கில் ஏற்றிக் கொண்டு இருக்கும் போது மகேனின் அப்பா முனியாண்டி அங்கு வந்து சேர்ந்தார். அவரும் அந்த போலிஸ்காரர்களிடம் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். அவர்கள் காதில் போட்டு கொள்ளவே இல்லை.  மோட்டார் சைக்கிள்களை ஏற்றுவதிலே குறியாக இருந்தார்கள்.
            
மொத்த போலிஸ்காரர்களும் போன சிறிது நேரத்தில் பெரிய கோவிலின் தலைவர் குணாவும் சத்திஸின் அப்பா ராமதாஸும் மகேனின் அப்பாவை தேடிக் கொண்டு வந்தார்கள்.

புறம்போக்கு குடியிருப்புகளின் அடுத்த கட்ட நகர்வுதான் இந்த பி.பி.ஆர் பிளட்ஸுகள். புறம்போக்கு நிலத்தில் கம்பம் என்கிற பெயரில் குடியிருந்த தமிழர்கள் அங்கு ஒரு மாரியம்மன் கோவில் ஒன்றை கட்டிக் கொண்டார்கள். மாரியம்மன் கோவில் இருக்கும் கம்பத்தில்; எல்லையை காக்க அய்யா கோவில் கட்டப்பட வேண்டும் என்பது விதி. அப்படி இல்லை என்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்பதால்  கம்பத்தில் ரெண்டாவது  கோவில் உருவானது. 

மெயின் கோவில் மாரியம்மன் கோவில் என்பதால் அது பெரிய கோவில் ஆனது. அந்த பெரிய கோவிலின் தலைவர்தான் குணா. வயது 60-க்கும் மேல் இருக்கும். பெரிய கோவிலின் தலைவராக இருப்பவர்கள் தான் கம்பத்து தலைவராகவும் இருப்பது எழுத்தப்படாத சட்டம். கம்பம் உடைக்கப்பட்டு பி.பி.ஆருக்கு நகர்ந்த போது அதே இடத்தில் மாரியம்மன் கோவிலை கட்டி கொள்ள பண்டாராயா அனுமதி கொடுத்தார்கள். பி.பி.ஆருக்கு நகர்ந்த போது கம்பத்து தலைவராக இருந்த குணா; அடுத்த கட்ட நகர்வாக ருக்குன் தெத்தாங்கா தலைவராக பதவி உதவி பெற்றார்.

மகேனின் அப்பா 15-வது மாடியில் தன் வீட்டின் முன்புறம் காரிடரில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். தலைவரும் சத்திஸ் அப்பா ராமதாஸும் முனியாண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தலைவரை பார்த்ததும் சிகரெட் துண்டை தூக்கி கீழே வீசினார்.

’எண்டி !  இவர் சமாதானத்துக்கு தான் வந்திருக்கார். பிரச்சனையை பேசி முடிச்சிக்கலாம்.’ தலைவர் பேச்சை ஆரம்பித்தார்.

‘என்ன தலைவரே பேச சொல்றீங்க? என் பையன் மோட்டரை அடிச்சி உடைச்சிருக்காங்க. போதாத குறைக்கு போலிஸ் வேற எங்க மோட்டரை தூக்கி கிட்டு போயிருச்சு.’ மகேன் அப்பா கொத்தித்தார்.

‘இதோ பாரு எண்டி! தப்பு என் பையன் மேலத்தான். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாம எல்லாம் ஒரே இடத்துல இருக்கிறோம். ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிச்சுக்கணும். அதுவும் இல்லாம கம்பத்தில் இருந்து நீயும் நானும் தெரிஞ்சவங்க ….’ பணிந்து போனார் ராமதாஸ்.

‘அதுக்காக உன் பையன் எது வேணும்னாலும் செய்வான் நாங்க பொத்திகிட்டு இருக்கணுமா?’ முனியாண்டி இன்னும் கடுப்பில் தான் இருந்தார்.

‘போலிஸ் தூக்கிட்டு போன மோட்டரை திருப்பு கொண்டு வந்து கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதே மாதிரி உன் பையன் மோட்டரையும் செஞ்சி கொடுத்துடுறேன். நான் மன்னிப்பும் கேட்டுக்கிறேன்.’ ராமாதாஸ் பிரச்சனையை முடித்து வைத்தார்.

‘அப்புறம் என்ன எண்டி! தாஸ்ஸு இறங்கி வர்றப்போ நீ கொஞ்சம் ஏறி வாப்பா.’ தலைவர் முனியாண்டியை சமாதானம் படுத்திக்கொண்டிருந்தார்.
            
இவ்வளவும் நடந்துக் கொண்டிருக்கும் போது; பின்னாடி பிளாக்கில் மூன்றவது மாடி படிக்கட்டு ஓரத்தில், பரிமளா காவல் காக்க; மாலினி அழுதுக் கொண்டே சத்திஸின் காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த முழங்கை பகுதியை சுத்தம் செய்து மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஏண்டா என்னை இப்படி உயிரோடு சாகடிக்கிறாய்? எனக்கு நீயும் வேணும் எங்க அண்ணனும் வேணும்.’ சொல்லி விட்டு மேலும் அழ ஆரம்பிக்கிறாள்.

‘நானா உங்க அண்ணனை வம்புக்கு இழுக்கிறேன். அவன் தான் தேடி வந்து என்கிட்ட பிரச்சனை பண்றான். அது என்னோட மோட்டர் பார்க்கிங்ன்னு தெரிஞ்சும் அவன் மோட்டரை அங்கு நிறுத்தி வைக்கிறான். திமிருதானே? அதான் மோட்டரை உடைச்சேன். அடுத்து உங்க அண்ணன் மண்டையை உடைக்கிறேன்.’

‘டேய்! அப்படி எல்லாம் பேசாதேடா! எங்க அண்ணன்னா எனக்கு உயிரு.’ அழுது கொண்டே மாலினி சத்திஸிடம் சொல்கிறாள்.
அப்புறம் எதுக்கு என்னை லவ் பண்ற …? என்னை விட்டு போய்ரு’

‘சத்தியமா நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். ஆனால் எனக்கு என் அண்ணன்ன்னா உசிரு. என்னை புரிஞ்சுக்கடா! ப்ளிஸ்’ விசும்பி விசும்பி அழுகிறாள்.

‘ஏ! இப்ப எதுக்கு அழுவற? சும்மா என்னையே குறை சொல்லாதே ….  அன்னைக்கு போஸ்ட் பொக்ஸ் பக்கத்தில் நிற்கும் போது உன் அண்ணன்  என் மேலே பீர் டின்னை விட்டு அடிச்சான். அது பராயில்லையா?

‘என் அண்ணன் தானடா … விட்டு கொடுத்து போனா என்ன குறைச்சா போய்டுவ? எனக்காக பொறுத்துகோ. ப்ளிஸ்.’

‘எவ்ளோ விட்டு கொடுத்து போறது? சொல்லு …. இப்படியே போய்கிட்டு இருந்துச்சுன்னா … ஒருநாள் இல்லாட்டி ஒருநாள்; ஒன்னு, உன் அண்ணனை போட்டுட்டு நான் ஜெயிலுக்கு போயிருவேன். இல்லை, என்னை போட்டுட்டு உன் அண்ணன் ஜெயிலுக்கு போயிருவான். கடைசியிலே உனக்கு நாங்க ரெண்டு பேருமே இருக்க மாட்டோம்.’

’என் அண்ணனுக்கு தங்கச்சியா பொறந்துட்டு; உன்னையும் காதலிச்ச பாவத்துக்கு நான் மருந்து குடிச்சு சாகறேன். நாளைக்கு காலையிலே என்னை நீ பொணமாகத்தான் பார்ப்ப’ என்று சொல்லி விட்டு படிகட்டுகளில் இறங்கி ஓட்டமும் நடையுமாக போகிறாள். 

காவல் காத்து கொண்டிருந்த பரிமளத்துக்கு எதுவும் புரியவில்லை. கிழே இறங்கி போகும் மாலினியையும் பார்க்கிறாள் சத்திஸையும் பார்க்கிறாள்.

‘மொதல்ல போய் உன் கூட்டாளியை சமாதனப்படுத்து. கிறுக்குத்தனமாக மருந்து கிருந்து எதையாவது குடிச்சு தொலைக்க போகுது’ என சத்திஸ் பரிமளா நோக்கி சொல்ல; பரிமளா மாலினி பின்னாடியே ஓடினாள். மாலினி இன்னும் வேகமாக நடந்தாள் ஒரு முடிவோடு.


Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews