Thursday, 13 July 2017

துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திரத்தில்(Sejarah Melayu/Malay Annals) குறிப்பிடப்படும் ராஜா சுரன்(Raja Suran) என்பது யார்?

குறிப்பு: சுருக்கி எழுதப்பட்ட நீண்ட கட்டுரையிது. ஞாபக சக்தியும் பொறுமையாக படிக்கும் குணம் இல்லாதவர்கள் இதை படிக்க வேண்டாம். இந்த கட்டுரையின் மூலங்களை எழுத்த வேண்டும் என்றால் அது புத்தகமாக மாறிவிடும். 

துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திரத்தில்(Sejarah Melayu/Malay Annals) என்கிற புத்தகத்தில் இடம்பெறும் ராஜா சுரன் குறித்த விவாதங்களும்/சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்துக் கொண்டுத்தான் வருக்கிறது. ராஜா சுரன் யார் என்று தெரிந்துக் கொள்வதற்கு முன் மலாய் சரித்திரத்தை எழுதிய துன் ஸ்ரீ லானாங் குறித்தும் கொஞ்சம் தெரிந்துக் கொள்வோம். மலாக்காவில் பிரதம மந்திரியாக இருந்த துன் முதாகீருடைய சகோதர் தாகீர் பரம்பரையில் பிறந்தவர் துன் ஸ்ரீ லானாங். இவரின் இயற்பெயர் துன் முகமாட் பின் துன் அகமாட் ஆகும்.

துன் முதாகீர் மகள் துன் பத்திமாவிற்கு பிறந்த கடைசி மகன் அல்லாவுடின் ரியாட் ஷா(மலாக்கா சுல்தானின் கடைசி வாரிசு) தோன்றலின் வழி வந்த மூன்றாம் அல்லாவுடின் ரியாட் ஷாவின் காலத்தில் ஜொகூர் மண்டலத்தின் பிரதம மந்திரியாக துன் ஸ்ரீ லானாங் இருந்தவர்.

மூன்றாம் அல்லாவுடின் ரியாட் ஷா கட்டளையின் பெயரில் துன் ஸ்ரீ லானாங் மலாய் சரித்திரத்தை எழுதினார். 1597-1612 காலகட்த்தில் மலாய் சரித்திரம் எழுதப்பட்டிருக்க வேண்டும். 1613-இல் ஜொகூர் மீது ஆச்சே படை எடுத்து வந்தது. பத்து வாசார் பகுதியில் கடுமையான போர் நடந்தது. இறுதில் ஆச்சே ஜொகூரை வென்று ஜொகூர் சுல்தானையும் துன் ஸ்ரீ லானாங்கையும் சிறைப்பிடித்து சென்றது.

துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திரத்தில் நூசாந்திரா நாடுகள் எனப்படும் திரைநாடுகள் குறித்து பல தகவல்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. மலாய் சுல்தான்களின் தோன்றல்கள்/பரம்பரைகள் குறிக்கப்பட்டுள்ளது. இடைக்கால மலாய் மன்னர்களின் தொடக்கம் ராஜா சுரன் என்கிற மன்னரிடமிருந்தே தொடங்குகிறது.

ராஜா சுரன் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு முதலில் கங்க நகரத்தை வீழ்த்துகிறான். பிறகு அங்கிருந்து கங்காயு நாட்டின் மீது போர் தொடுகிறான். அப்போது கங்காயு நாட்டை ஆட்சிச் செய்து கொண்டிருப்பவனின் பெயர் ராஜா சோழன். ராஜா சோழனை வென்று; அவருடைய மகள் ஓனாங் கியு(Onang Kiu)-வை ராஜா சுரன் கல்யாணம் செய்துக் கொள்கிறான். பிறகு அங்கிருந்து துமாசிக் செல்கிறான். பிறகு துமாசிக் நாட்டிலிருந்து தண்ணீர் புக முடியாத பெட்டி ஒன்றை செய்து அதன் மூலம் கடலின் உள் பயனிக்கிறான்.

பயணத்தின் இறுதியில் ஒரு ஒரு புதிய உலகை அடைகிறான்.  அந்த உலகில் உள்ள மனிதர்கள் பாதி பேர் முஸ்லிமாகவும் பாதி பேர் முஸ்லிமல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அங்குள்ள மனிதர்கள் வித்தியாசமான உடை உடுத்தியிருக்கிறார்கள். ராஜா சுரன் சிலகாலம் அங்கு தங்கியிருக்கிறான். அங்குள்ள பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான். பிறகு அங்கிருந்து கிளம்பி மீண்டும் துமாசிக் வருகிறான். ஓனாங் கியு(Onang Kiu)-வுடன் இணைந்து வாழ்கிறான். இருவருக்கும் மூன்று ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறக்கிறார்கள்.

பிறகு மீண்டும் கிளிங் பிரேதேசத்திற்கு(Benua Kling) போகிறான். பல போர்கள் புரிகிறான்.

பல வரலாற்று அறிஞர்களும், பலரும் மலாய் சரித்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் ராஜா சுரன் என்பவன் ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் (1012-1044) என்கிற முடிவுக்கு வருகிறார்கள். அப்படியே அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இதில் எனக்கு மாறுப்பட்ட கருத்துண்டு. காரணம் மலாய் சரித்திரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட சோழர்கள் காணப்படுகிறார்கள். பல இடங்களில் சோழர்கள் குறித்த குறிப்புகள் காணப்படும். Raja Suran, Raja Sulan, Raja Culan என்று வெவ்வேறு ஓசைகளில் ஒரே புத்தகத்தில் குறிப்பிட சில முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். இந்த பெயர்கள் எல்லாம் சோழர்களைத்தான் குறிக்கிறது. ஆனால் வெவ்வேறு சோழர்களாக இருக்க வேண்டும்.

அதோடு ராஜா சுரன் என்று மலாய் சரித்திரத்தில் குறிப்பிடப்படுவது முதலாம் குலோதுங்க சோழனாகத்தான் இருக்க வேண்டும். இவன் கி.பி. 1070 முதல் 1122 வரை கங்கை கொண்ட சோழபுரத்தைத தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.


கி.பி. 1024-முதல் 1025 வரை ராஜேந்திர சோழனின் பெரும் படையெடுப்பு நூசாந்திரா நாடுகள் முழுவதும் நடந்தது. இந்த படையெடுப்பின் வழி அவன் வென்ற நாடுகளின் பெயர் திருவாலங்காட்டு செப்பு பட்டயத்தில் குறிப்பிட பட்டுள்ளது. அவை:

மேற்கு மலாயவுக்கும் கிழக்கு தாய்லாந்திற்கும் இடைப்பட்ட பகுதிகள். க்ரா பகுதிகள். 
    • 1.மாயிராடிங்கம், தம்பராலிங்கா, தலைத்தக்கோலம், இலங்காசுகா ஆகியவை.
    •        பர்மா – மாப்பாளம்.
    •    மலாய தீபகற்பம் – தென்திரைக் கடாரம்(இன்னொரு கடாரம் பர்மாவில் இருந்திருக்க வேண்டும்), மாதமர்லிங்கம்(தற்போதைய ஜெராண்டுட்)

    • சுமத்திரா- பண்ணை, இலமுரிதேசம்.
    • இந்த பட்டயத்தில் மலையூர் என்று ஒரு இடம் குறிப்பிடப்படுள்ளது. அது கோத்தா கெலாங்கி-யா அல்லது ஜம்பியில் இருக்கும் புக்கிட் லிங்காவா என்று தெரியவில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் மலையூர் என்பதனை ஜம்பி என்று கருதுகிறார்கள்.
    • வளைப்பந்தாறு – இது இன்ன இடம் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மலாய தீபகற்பம் என்பது தெரிகிறது. வளைபந்தாறு என்பது கோத்தா கெலாங்கியை குறிக்க வேண்டும். காரணம் கோத்தா கெலாங்கியை சுற்றி ஒரு பெரிய ஆறும் நீர் தேக்கமும் இருந்ததாக பல குறிப்புகள் உண்டு.
ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் போது சுமார் 11 முதன்மை நாடுகளின் பெயர்கள் செப்புப்பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பட்டங்களில் கெலாங்கி மற்றும் கங்க நகர் பெயர்கள் குறிக்கப்படவில்லை. ஆக ராஜேந்திர படை எடுத்துவரும்போது இந்த நகர்கள் வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

கோத்தா கெலாங்கிக்கும்(Kota Gelanggi-Johor) துன் ஸ்ரீ லானாங் கதையில் வரும் ராஜா சுரனுக்கும் பல நெருங்கிய தொடர்ப்பு உண்டு.

பண்டைய காலத்தில் கோத்தா கெலாங்கி க்ளாங்-கியு(Klang-kiyu) அல்லது கெலாங்கியோ (Kelengkio) என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. யிசிங்(YiChing) க்லாங்-யூ என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

அதே போல் ஜப்பானிய இளவரசர் தக்காவோ(Prince Takaoka-865AD) தன்னுடைய இந்திய பயணத்தின் போது கெலாங்கியு-வில் புலி அடித்து கொள்ளப்பட்டதாக ஜாப்பானிய குறிப்புகள் சொல்லப்படுகிறது.

நீண்ட சரித்திரத்தை கொண்டிருக்கும் கங்க நகரா, கெலாங்கி ஆகிய இரண்டு இடத்தின் பெயர்களும் ராஜேந்திர சோழனின் படையெடுப்பில் குறிப்பிடப்படவில்லை. பொதுவாக ஸ்ரீ விஜயம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த படையெடுப்புக்கு பின் ராஜேந்திர சோழன் இந்த நாடுகளை ஆட்சி செய்தான் என்கிற குறிப்பும் இல்லை. தென்திரைக் கடாரம், மாதமர்லிங்கம், வளைப்பந்தாறு, மலையூர் போன்ற படையெடுப்புகளுக்கு தண்டநாயகராக படை நடத்தி வந்தவன் பீமசேனன். இவன் சோழ சிற்றரசின் கிளைப் பிரிவை சார்ந்தவன். ராஜேந்தர சோழனுக்கு நெருங்கிய நண்பனும் கூட.

கங்கை, கலிங்கம், நூசாந்திரா நாடுகள், ஈழம், அந்தமான தீவுகள், தென் இந்தியா என்று பெரும் போர்களை செய்து சோழர்களின் பொற்கால ஆட்சியை பலப்படுத்திய வெற்றியைக் கொண்டாட கங்கை கொண்ட சோழபுரத்தை புதிய தலைநகராக உருவாக்கினான். இதோடு ராஜேந்திர சோழனின் படையெடுப்பு முடிகிறது. இந்த கங்கை கொண்ட சோழபுரம் பெயரை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு பிறகு முதலாம் குலத்துங்க சோழன் கி.பி1070-இல் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னனாக முடிசூடிக் கொள்கிறான்.

முதலாம் குலத்துங்க சோழனுக்கு தாய் வழி பாட்டனின் பெயர் ராஜேந்திரன் என்று சூட்டப்பட்டது. இவன் வேங்கியை சார்ந்த சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவன். சாளுக்கிய மரபுக்கு ஏற்ப இவனுக்கு விஷ்ணுவர்த்தன் என்கிற பெயரும் உண்டு.

இவனுடைய அம்மா ராஜேந்திர சோழனின் மகள். சாளுக்கிய நரேந்திர ராசராசனை மணமுடித்தாள். நரேந்திரனின் அம்மா குந்தவை. ராஜராஜ சோழனின் மகள். இவள் சாளுக்கிய விமலாத்தனை மணம் முடித்தவள்.

குலத்துங்கனின் அம்மா, பாட்டி இருவரும் நேரடி சோழ குடும்பத்தை சேர்ந்தவர்கள். அம்மா ராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவி. பாட்டி ராஜராஜ சோழனின் மகள் குந்தவை. இதையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.

ராஜேந்திர சோழன் இவனுக்கு தாய் வழி தாத்தா. இதையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

குலத்துங்க சோழன் காலத்தில் மீண்டும் கடாரம் மீது படையெடுக்கப்பட்டது. பரணியில் கலிகத்து போர் மற்றும் கடார போரை குறித்து பேசப்படுகிறது.

கலிங்கத்தை கைப்பற்றிய பின் குலத்துங்கன் கங்க நகரம் மீதும் கோத்தா கெலாங்கி மீதும் படையெடுத்திருக்க வேண்டும். அல்லது தன் ஆரம்பகால ஆட்சிகாலத்தில் இவ்விரு நகரங்கள் மீதும் படையெடுத்திருக்க வேண்டும்.

தன் தந்தை ராசராச நரேந்திரனுக்கு பிறகு வேங்கி நாட்டுக்கு தன் சித்தப்பாவை அரசனாக்கி விட்டு; இவன் பெரும் படையுடன் வடக்கு நோக்கி போனான்.

இவன் தன்னை சோழன் என்றே ஆரம்பம் முதல் பறைசாற்றிக் கொண்டான்.

நூசாந்திரா நாடுகளின் மீது படையெடுத்த ராஜேந்திரன் அதன் பின் அந்த நாடுகளை சோழர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஆகவே தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் பெயரை கங்கை நகரத்துக்கும்(கங்கா நகர விழ்ச்சிக்கு பிறகு) அதே பெயரை கோத்தா கெலாங்கிக்கும் வைத்திருக்க வேண்டும். கோத்த கெலாங்கி புதிய பெயர் கங்காயு.



Setelah negeri Gangga Negara sudah alah, maka Raja Suran pun berjalanlah dari sana. Setelah berapa lamanya di jalan, datanglah kepada negeri Ganggayu. Syahdan, dahulukalanya negeri itu negeri besar, kotanya daripada batu hitam, datang sekarang lagi ada kotanya itu di Hulu Sungai Johor. Adapun asal namanya Klang Kio. Adapun nama rajanya Raja Culan.



துன் ஸ்ரீ லானாங் மிக தெளிவாக சொல்கிறார். பழைய பெயர் கிலாங் கியோ. புதிய பெயர் கங்காயு. இது கங்கை கொண்ட சோழபுரத்தோடு ஒத்து போகிறது.

முன்னம் ரஜேந்திர சோழன் படையெடுத்து வந்தபோது; இந்த கிலாங்கி யுவை கைப்பற்றி சோழன் பெயரில் யாராவது ஆட்சி செய்து வந்திருக்க வேண்டும். அதற்கு கங்காயு என்கிற பெயரை மாற்றி இருக்க வேண்டும்.

அந்த காலத்தில் சோழர்களின் பெயரில் பல சிற்றரசர்களும் படை தலைவர்களும் இருந்தார்கள்.

கங்காயு சோழனின் மகள் ஆனாங் கியு-வை குலத்தோங்கன் மணமுடித்திருக்க வேண்டும். குலத்தோங்கனின் மனவியருள் ஒருவர் பெயர் மதுராந்தகி – ஆனாங்கியு-வோடு ஒத்து போகிறது. இவர்களுக்கு  பிள்ளைகள் எழுவர். ஆனால் தென்னிந்தியாவில் நான்கு மகன்களில் பெயர்கள்தான் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மதுராந்தகி ராஜேந்திர தேவனின் மகள் என்று தவறாக சித்தரிக்கப்படுள்ளது.

ஆனாங்கியுவுக்கும் சோழனுக்கும் கங்காயுவில் மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்ததாக துன் ஸ்ரீ லானாங் சொல்கிறார். குலத்தோங்கனுக்கு எழுவர் பிள்ளைகள் என குலத்தோங்கன் தமிழ்நாட்டு பட்டயம் சொல்கிறது. நான்கு பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது. மூவர்கள் பெயர்கள் விடுப்பட்டுள்ளது.

சோழ பெருமன்னர்களில் சீனா சென்று வந்தது குலத்தோங்கன் மட்டுமே. ஆனாங்கியுவை திருமணம் முடித்து இருவரும் துமாசிக்கில் வாழ்கிறார்கள். பிறகு சோழன் கடல்வழித் தூர தேசம் செல்வதாக துன் ஸ்ரீ லானாங் சொல்கிறார். அதே போல் குலத்தோங்கனும் சில காலம் சீனாவில் இருந்திருக்கிறார்.

Setelah itu maka Raja Suran pun kembali ke Benua Keling. Telah sampailah ke negeri Keling, maka Raja Suran pun berbuat sebuah negeri terlalu besar, kotanya daripada batu hitam tujuh lapis …….

தூரதேசத்தில் இருந்து திரும்பிய சோழன் சில காலம் கழித்து கலிங்கம் போகிறான். Benua Keling என்பது கலிங்கம். கலிங்கம் திரும்பிய சோழன் பல போர்களை செய்கிறான். சோழ மன்னர்களில் கலிகத்துபோரில் சிறப்பிக்கப்படுபவன் முதலாம் குலத்தோங்கன் மட்டுமே. அடுத்தது மூன்றாம் குலத்தோங்கன்.



Seorang bernama Raja Suran, diambil oleh Raja Sulan nenda baginda ..... 
 மலாய் சரித்திர குறிப்பில் சொல்லப்படுவது போல்; குலத்துங்கன் தன் பாட்டி வழி சோழ பட்டத்தை அடைகிறான்.

ராஜேந்திரனுக்கு பிறகு; அவர் மகன்கள் நால்வரும் அடுத்தடுத்து அரையணை ஏறுகிறார்கள்.

அதிராஜேந்திர பரகேசரி பதவி ஏற்றக் காலத்தில் சோழநாட்டில் பெரும் குழப்பமும் சச்சரவும் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தில் அதிராஜேந்திரன் கொல்லப்படுகிறான்.

தன் பாட்டி வழி உறவை வைத்து குலத்துங்கன் சோழன் தானே சோழ மன்னனாக முடிச்சூடிக் கொள்கிறான்.

இப்படி துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திர புத்தகத்திலும்; குலத்துங்கனின் பல குறிப்புகள் ஒத்து போகிறது.

யாராவது பேரசிரியர்கள் இது குறித்து நன்றாக ஆராய்ந்தால் நூசாந்திரா நாடுகளின் வரலாறு புரியும் வகையில் இருக்கும். 



Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews