ஆனந்த விகடன்.
# ஆனந்த விகடனை நான் படிக்க ஆரம்பித்த போது எனக்கு வயது சுமார் 10 இருக்கும். நான் மட்டும் அல்ல எங்கள் வீட்டில், நான், என் கடைசி தம்பி மற்றும் என் இரு தங்கைகள், ஆனந்த விகடனின் தீவிர வாசகர்கள்.
# ஆனந்த விகடனை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் அப்பா ….. எங்கள் வீட்டிற்கு வாரா வாரம் மூன்று புத்தகங்கள் வந்து வந்து விடும். கல்கண்டு, குமுதம் மற்றும் ஆனந்த விகடன் அந்த மூன்று புத்தகங்கள்.
# என் அப்பா தீவிரமான கல்கண்டு பிரியர். ஆனாலும் ஆனந்த விகடனையும் குமுதத்தையும் வாங்கி வாருவார். ஆனால் எங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஆனந்த விகடன்.
# நாங்கள் பள்ளி வாழ்க்கை முடித்து; வேலைக்கு போன பிறகு, நாங்களே வாங்கி படிக்க தொடங்கினோம். ஆனந்த விகடன் எங்கள் வீட்டின் ஒரு அங்கம்.

# முன்பு எல்லாம் புதன் இரவு அல்லது வியாழன் காலையில் தான் இங்கு ஆனந்த விகடனை ரிலிஸ் செய்வார்கள். புதன்கிழமை எப்போ வரும் என ஆவலுடன் காத்திருந்த காலங்கள் அது.
# முன்பு போல் வாரா வாரம் ஆனந்த விகடனுக்காக ஆவலுடன் காத்திருப்பதில்லை. இணையம் வந்த பிறகு ஓசியில் படிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் போர்ட் கிள்ளான் தனாஸ். பிரிக்பீல்ட்ஸ், கின்றாறா கொர்ட், லெபோ அம்பாங் போனால் பழைய ஆனந்த விகடனை எல்லாம் மொத்தமாக வாங்கி வந்து; பரிட்சைக்கு படிப்பது போல் படிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம்.
# இப்போதும் ஆனந்த விகடனை கடைகளில் தொங்குவதை பார்த்துவிட்டால் ஒரு குதூகலம் வந்து விடும். ஓடி போய் வாங்கி வருவது உண்டு.
# ஆனந்த விகடனில் அட்டை பார்ப்பதே ஒரு அலாதி குஷித்தான். செம்மையாக டிசைன் செய்வார்கள்.
# ஆனந்த விகடனை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். மதன் பதில்கள், நடுபக்க ஜோக், விகடன் மேடை, சினிமா விமர்சனம், ஓ பக்கங்கள், பேட்டிகள், கட்டுரைகள் படிக்க சூப்பராக இருக்கும். பொதுவாக ஆனந்த விகடனில் எனக்கு பிடிக்காத பக்கங்கள் இருக்காது.

# ஹேராம் கமலுக்கு மட்டும் அல்ல. எனக்கும் அது ஒரு கால கோடு. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு டிசைனில் அட்டை பக்கம் இருக்கும். அது என் வெவ்வேறு காலகட்டதை நினைப்படுத்தும்.
0 Comments